மனிதாபிமானம் போற்றும் கபீர் விருது!
15 ஆம் நூற்றாண்டில் வாரணாசியில் வாழ்ந்தவர் கபீர். கவிஞர், மதகுரு, புனிதர் என பன்முகம் கொண்டவர். இவர் இராமனந்தரால் சீடராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர். இந்து-முஸ்லீம் சமய ஒற்றுமைக்காகப் பெரிதும் பாடுபட்டவர். சாதி, சடங்கு என்ற பெயரில் நடைபெறும் தீய செயல்களை முற்றிலும் ஒழிக்கப் பாடுபட்டவர்.
இவ்வளவு சிறப்புமிக்க ‘கபீர்’ பெயரிலேயே சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான ‘கபீர் புரஸ்கார்’ (புரஸ்கார் என்றால் விருது என்று அர்த்தம்) ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முதலமைச்சரால் குடியரசு தின விழாவில் வழங்கப்படுகிறது.
ஒரு சாதி, இனம்,மதத்தைச் சார்ந்தவர்கள் பிற சாதி, இனம், மதத்தைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது வன்முறையின் போதோ மனிதநேயத்தோடு காப்பாற்றினால், அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் 3 பேருக்கு முறையே ரூ. 20,000, ரூ. 10,000, ரூ.5,000 என வழங்கப்படுகிறது.
கபீர் புரஸ்காருக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கிறது. இந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 15.12.2023 அல்லது அதற்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் 26.01.2024 குடியரசு தினத்தன்று முதலமைச்சரால் விருது வழங்கி கவுரவிக்கப்படுவார்கள்.
இது விருது மட்டுமல்ல.. மனிதநேயத்துக்கு கிடைக்கும் மரியாதை!