பொதுவாக நல்ல மலையாள திரைப்படங்களுக்கு தமிழ்நாட்டு ரசிகர்களிடையே எப்போதும் நல்ல வரவேற்பு கிடைக்கும் தான் என்றாலும், தமிழ் திரையுலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம், மொழியைத் தாண்டி தமிழக தியேட்டர்களில் வசூலைக் குவித்து வருவது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ரசிகர்களை வரவழைத்த ‘குணா’ குகை
வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியானது. நண்பர் குழு ஒன்று கொடைக்கானலுக்கு செல்கிறது. அதில் ஒருவர் ‘குணா’ குகையில் விழுந்து விடுகிறார். அவனை நண்பர்கள் குழு எப்படி மீட்டது என்பதே படத்தின் கதை. 1991 ல் வெளியான கமலின் ‘குணா’ திரைப்படத்தில் இடம்பெற்ற குகையும், இசைஞானி இளையராஜா இசையில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதம்…’ பாடலும் தான், ரசிகர்களை தியேட்டருக்கு ஈர்த்து வந்துள்ளது.
சிதம்பரம் எஸ் பொடுவால் இயக்கியுள்ள இப்படத்தை தமிழ் ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், இன்னொரு புறம் கமல் தொடங்கி பல தமிழ் திரையுலக பிரபலங்களும், இயக்குநர்களும் இப்படத்தைப் பாராட்டி, படத்தின் இயக்குநர் சிதம்பரத்துக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கூடவே, ‘குணா’ படம் குறித்த நினைவுகளை அதன் இயக்குநர் சந்தான பாரதி மற்றும் அதில் நடித்த, பணிபுரிந்த கலைஞர்களும் பகிர்ந்து வருகின்றனர்.
“‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் வெற்றிக்கு காரணம் அதன் இயல்பு தன்மையும், எளிமையும்தான். அந்த எளிமையை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். மக்களின் ரசனையை ஒரு குறிப்பிட்ட ஸ்டிரியோ டைப்பில் அடைக்க முடியாது” என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
வாரி குவிக்கப்படும் வசூல்
உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை, மக்களுக்குப் புரியும் விதமாக எடுத்தால், அது மொழியைத் தாண்டி ரசிகர்களிடையே எத்தகைய வரவேற்பைப் பெறும் என்பதற்கு இந்த மலையாள திரைப்படம் ஒரு சான்று. இந்தப்படம் வெளியான அன்று 3.3 கோடி ரூபாய் வசூல் செய்தது. முதல் நாள் படம் பார்த்தவர்கள் படத்தைப் பற்றி பாசிட்டிவாக கருத்துக்களைப் பகிர, அதனைத் தொடர்ந்து படத்தைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்குள் வர ஆரம்பித்தனர். இதனால், முதல் வார இறுதியில் இந்த திரைப்படம் 32 கோடி ரூபாய் வசூல் செய்தது.
இந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்திருக்கும் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் விரைவில் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2 ஆம் வார இறுதி நாளான நேற்றைய தினம், இப்படம் இந்தியாவில் மட்டும் 11.25 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. நேற்றைய தினம் மாலை காட்சிகளில் 86 சதவீத மக்களும், மீதி காட்சிகளில் 75 சதவீத மக்களும் படத்தை பார்த்து ரசித்திருக்கின்றனர். இந்திய அளவில் இத்திரைப்படம் இது வரை 57 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. வெளிநாடுகளில் இந்தப்படம் 39 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. உலக அளவில் 96 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
‘குணா’ ரி ரிலீஸ் ஆகுமா?
இந்த நிலையில், தமிழ்நாட்டில் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தை ரசிகர்கள் கொண்டாட காரணமான ‘குணா’ குகையை காண கொடைக்கானலில் கூட்டம் குவியும் நிலையில், ‘குணா’ படத்தை மீண்டும் ரி ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ரசிகர்களிடையே எழுந்துள்ளது. காரணம், இப்படம் வெளியாகி 33 வருடங்களாகி விட்டது. இன்று ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தைக் கொண்டாடும் இன்றைய இளைஞர்கள், ‘குணா’ ரிலீஸானபோது பிறந்திருக்கவே மாட்டார்கள். எனவே, அவர்கள் அசல் படத்தைப் பார்க்க விரும்புகிறார்கள்.
1991 ல் ரஜினியின் ‘தளபதி’ படத்துடன் தீபாவளி ரேஸில் போட்டிப்போட்ட நிலையில், வசூல் ரீதியாக ‘குணா’வுக்கு அப்போது வரவேற்பு இல்லாமல் போனது. இப்போது, தமிழ்நாட்டிலுள்ள இளைஞர்கள் ஓடிடி போன்ற தளங்கள் மூலம் உலக சினிமாவைப் பற்றி அதிகம் அறிந்திருப்பதால், ‘குணா’வையும் கொண்டாடுவார்கள் என்பதால், குணா’ ரி ரிலீஸ் ஆனால் அது நிச்சயம் 1991 ல் குவிக்காத வசூலை இப்போது நிச்சயம் குவிக்கும் என எதிர்பார்க்கலாம்!