Amazing Tamilnadu – Tamil News Updates

‘மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம்… தமிழகத்தில் எங்கெல்லாம் போட்டுக்கொள்ளலாம்?

ப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில், வைரஸ் தொற்றினால் ஏற்படும் ‘மஞ்சள் காய்ச்சல்’ எனப்படும் ஒருவித காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. ஏடிஸ் வகை கொசுக்களால் பரவும் இந்த மஞ்சள் காய்ச்சலுக்கு தனிப்பட்ட சிகிச்சை எதுவும் கிடையாது. நோயின் அறிகுறிக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தடுப்பூசி கட்டாயம்

இந்த நிலையில், மஞ்சள் காய்ச்சல் அதிகரித்து வருவதால், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்வோரும், பிற நாடுகளில் இருந்து இந்தியா வருவோரும், குறிப்பாக ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளுக்குச் செல்பவர்களும், அதேபோல அங்கிருந்து இந்தியாவுக்கு வருபவர்களும் கட்டாயம் ‘மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, தமிழக அரசு இதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் எங்கெங்கு தடுப்பூசி போடலாம்?

மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய்த்தடுப்பு ஆராய்ச்சி நிலையம் மற்றும் பன்னாட்டு தடுப்பூசி மையத்தில் அனைத்துத் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காலை 10 – 12 மணி வரை போடப்படும். இதற்கான கட்டணம் ரூ. 300. இதற்காக www.kipmr.org.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்துகொள்ளலாம். நேரடியாகச் சென்றும் பதிவு செய்துகொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை, இராஜாஜி சாலையில் உள்ள துறைமுக சுகாதார நிறுவனத்திலும் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் காலை 9 – 12 மணி வரை இந்த தடுப்பூசி போடப்படும். இங்கு தடுப்பூசி போட, porthealthofficechennai@gmail.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்துகொள்ளலாம். நேரடியாகச் சென்றும் பதிவு செய்துகொள்ளலாம்.

அதேபோன்று, தூத்துக்குடியில் உள்ள துறைமுக சுகாதார அதிகாரி அலுவலகத்திலும் அனைத்து செவ்வாய்க்கிழமைகளில் காலை 11 – 1 மணி வரை தடுப்பூசிகள் போடப்படும். அங்கு நேரடியாகச் சென்று மட்டுமே பதிவு செய்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன ஆவணங்கள் தேவை?

பாஸ்போர்ட், சுய விவரங்கள் அடங்கிய தொகுப்பு, மருத்துவ விவரங்கள் (ஏதேனும் இருப்பின்) அடங்கிய ஆவணங்களைக் காண்பித்து, மத்திய சுகாதார அமைச்சகம் அங்கீகரித்து உள்ள மேற்கூறிய தடுப்பூசி மையங்களில் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். மேற்கண்ட மூன்று இடங்களைத் தவிர, தமிழ் நாட்டில் வேறு எந்த அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் மத்திய சுகாதார அமைச்சகம் அங்கீகரித்து உள்ள மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை.

அமைச்சர் மா. .சுப்ரமணியன்

‘தனியார் மருத்துவமனை சான்று ஏற்கப்படாது’

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. .சுப்ரமணியன், “வெளிநாடு செல்வோர் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள தமிழ்நாட்டில் 3 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெளிநாடு செல்பவர்கள் தயங்காமல் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியை செலுத்தி பயனடைய முன்வர வேண்டும்.மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும். மஞ்சள் காய்ச்சலுக்காக தனியார் மருத்துவமனையில் போடப்படும் தடுப்பூசிக்கான சான்று விமான நிலையத்தில் ஏற்கப்படாது” எனத் தெரிவித்தார்.

Exit mobile version