அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த 18-12-2023 அன்று கோவையில் தொடங்கி வைத்தார்.
இதன்படி, ஒவ்வொரு கிராமத்திலும், அந்தந்த வட்டார தாசில்தார் தலைமையில் முகாம் நடத்தி, மக்கள் குறைகளைக் கேட்டுத் தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுரைகள் வழங்கினார். இத்திட்டத்தின்படி லட்சக் கணக்கான மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக சென்னையில் இன்று நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்டப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமது தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எத்தனையோ முத்திரை பதிக்கக்கூடிய திட்டங்களைத் தீட்டியிருப்பதாக கூறிய அவர், “ஆட்சியில் இல்லாதபோது மக்களுக்காகப் போராடுவோம், வாதாடுவோம். ஆட்சியில் இருக்கின்ற நேரத்தில், மக்களுக்காக திட்டங்களை தீட்டுவோம், நன்மைகளை வழங்கிக் கொண்டே இருப்போம். அத்தகைய நன்மைகளை நேரடியாக ஒவ்வொரு மனிதருக்கும் வழங்குகிற மாபெரும் திட்டம்தான் ‘மக்களுடன் முதல்வர்’ என்கின்ற இந்தத் திட்டம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த திட்டம் தொடங்கப்பட்ட முப்பதே நாட்களில் 3 லட்சத்து 50,000 பேரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக பெருமையுடன் குறிப்பிட்டார். இது தொடர்பான புள்ளிவிவரங்களை பகிர்ந்த அவர், “வருவாய்த் துறையில் 42 ஆயிரத்து 962 பட்டா மாறுதல்களும், 18 ஆயிரத்து 236 நபர்களுக்குப் பல்வேறு வகையான சான்றிதழ்களும் தரப்பட்டிருக்கிறது.
மின்சார வாரியத்தில் 26 ஆயிரத்து 383 நபர்களுக்கு புதிய மின் இணைப்புகள்/ பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக, 37 ஆயிரத்து 705 நபர்களுக்கு வரிவிதிப்பு /குடிநீர்/ கழிவுநீர் இணைப்பு/ கட்டட அனுமதி/ பிறப்பு, இறப்பு பதிவுகள் போன்றவை செய்து தரப்பட்டிருக்கிறது.
குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை மூலம் ஆயிரத்து 190 நபர்களுக்கு 60 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பில் தொழில் கடன் உதவி செய்து தரப்பட்டிருக்கிறது.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 10 கோடி ரூபாய் மதிப்பில் 3 ஆயிரத்து 659 நபர்களுக்கு 3 சக்கர வாகனம்/ கடன் உதவிகள்/ கருவிகள்/அடையாள அட்டைகள் தரப்பட்டிருக்கிறது.
கூட்டுறவுத்துறை மூலமாக, 6 கோடியே 66 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 766 நபர்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி, முப்பதே நாட்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதைவிட பெரிய வெற்றி இருக்க முடியுமா? இத்தனை லட்சம் குடும்பங்கள் இதனால் பயனடைந்து இருக்கிறார்கள்.
மக்கள் அளிக்கும் ஒவ்வொரு மனுவுக்கும் முடிவு காண்பதே முக்கியம் என்று நினைக்காமல், விடிவு காண்பதே நோக்கம் என்று செயல்பட்டால் தான் அரசு மேல் ஏழைகள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை வலுவடையும். அத்தகைய நம்பிக்கையை விதைக்கின்ற திட்டமாக ‘மக்களுடன் முதல்வர் திட்டம்’ அமைந்திருக்கிறது” என மேலும் தெரிவித்தார்.