Amazing Tamilnadu – Tamil News Updates

போராட்டம் வாபஸ்: பணிக்கு திரும்பும் போக்குவரத்து தொழிலாளர்கள்!

ல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சில போக்குவரத்து சங்கங்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கிய நிலையில், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ஆகியவற்றைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பணப்பலன்களை வழங்குதல், ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டம் அமல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தைத் துவங்கினர்.

இந்த போராட்டத்திற்கு திமுகவின் தொழிற்சங்கமான தொமுச, காங்கிரஸின் ஐஎன்டியூசி ஆகிய பெரிய சங்கங்கள் ஆதரவளிக்காத நிலையில், இதர சங்கத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தற்காலிக ஓட்டுநர்களைப் பயன்படுத்தி தமிழக அரசு பேருந்துகளைத் தொடர்ந்து இயக்கி வந்தது.

இதனால் வேலைக்குச் செல்லக்கூடியவர்கள், வெளியூர் செல்பவர்கள் என அனைவரும் வழக்கம்போல் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டனர். 98 சதவீதத்துக்கும் அதிகமான பேருந்துகள் நேற்று வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்துத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகை சமயத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு இன்று வழக்கை விசாரித்தது.

அப்போது, “பொங்கல் பண்டிகையின்போது பொதுமக்களுக்கு இடையூறு செய்வது ஏன்? நகரத்தில் உள்ள மக்கள் அதிகமாக பாதிக்கப்படவில்லை என்றாலும் கிராமங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பண்டிகை காலத்தில் ஸ்டிரைக் முறையற்றது. ஓய்வூதியர்களுக்கு மட்டுமாவது ஜனவரிக்கான அகவிலைப்படியை வழங்க முடியுமா?” எனக் கேட்டு, அரசு மாலைக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இன்று பகல் 2.15 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில், போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பணிக்கு திரும்புவோர் மீது நடவடிக்கை கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பொங்கலுக்குப் பின்னர் ஜனவரி 19 ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் பணிக்குத் திரும்புகின்றனர். இதனால், பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளோர் நிம்மதி அடைந்துள்ளனர்.

Exit mobile version