தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளுக்கு பஞ்சமே இல்லை. மொத்தம் 485 பொறியியல் கல்லூரிகள் உள்ள நிலையில், படிப்பை முடித்துவிட்டு வெளியே வருபவர்கள் அனைவருக்குமே ‘கேம்பஸ் இன்டர்வியூ’வில் வேலை கிடைத்துவிடுவதில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான கல்லூரிகளில் படித்து வெளியேறுபவர்களுக்கு மட்டுமே இத்தகைய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுகின்றன.
‘கேம்பஸ் இன்டர்வியூ’விலாவது குறைந்த எண்ணிக்கையிலான நிறுவனங்கள் மட்டுமே பங்கெடுக்கும் என்பதால், அவர்கள் தங்களது தேவைகளுக்கேற்றவாறு மிகவும் வடிகட்டி, வடிகட்டி இருப்பதில் மிக திறமையான மாணவர்களை மட்டும் வேலைக்கு எடுத்துக் கொள்கின்றனர்.
அதே சமயம் மற்ற மாணவர்களில் பெரும்பாலானோருக்கு ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் அளவுக்கு, தங்களது படிப்பு சார்ந்த தொழில் நுட்ப அறிவு இருப்பதில்லை என்றும், பாடப் புத்தகத்தில் படித்த அறிவு ( Theory Knowlede) மட்டுமே உள்ளது. எனவே தான் அவர்களுக்கு உடனடி வேலை கிடைப்பதில்லை என்றும், நிறுவனங்களும் அவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ள தயங்குகின்றன என்றும் குற்றச்சாட்டுகள் சொல்லப்படுவதுண்டு. இப்படி வேலை கிடைக்காததன் காரணத்தினால் இன்ஜினீயரிங் படித்த மாணவர்களில் பலர் தங்களது படிப்புக்கு சம்பந்தமில்லாத கிடைத்த ஏதோ ஒரு வேலையைச் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
பொறியியல் படிப்பை செதுக்கும் புதிய திட்டம்
இத்தனைக்கும் கல்லூரி படிப்பின் இறுதி ஆண்டுகளில் புராஜக்ட் செய்வது, தங்களது படிப்புக்குத் தொடர்புடைய நிறுவனங்களில் Internship எனப்படும் சில மாதங்கள் பயிற்சி பெறுவது போன்றவை இருந்தபோதிலும், 80 சதவீத இன்ஜினீயரிங் மாணவர்கள், குறிப்பாக அரசு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலும் சிவில் கட்டுமானம், இ-கவர்னஸ் எனப்படும் மின்னணுவியல் நிர்வாகம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் ( IT) சார்ந்த புராஜக்ட்களையோ அல்லது இன்டன்ஷிப்பையோ செய்கின்றனர். அதுவும் தனியார் நிறுவனங்களில்… அப்படி பயிற்சி பெற வரும் மாணவர்களுக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பெரிய அளவில் எதுவும் சொல்லிக் கொடுப்பதில்லை என்பதால், அவை வெறும் ‘கடனே…’ என்று மேற்கொள்ளப்படுகின்றன.
இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களைப் பட்டைத் தீட்டும் வகையிலும் தமிழக அரசு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் ஒரு Two in one திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களைத் தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பயிற்சி பெற வைக்கவும், பொதுத் துறை நிறுவனங்களில் பணியின்போது சந்திக்க கூடிய தொழில்நுட்ப பிரச்னைகள் மற்றும் சவால்களுக்கு தீர்வு காணக்கூடிய வகையிலான, உண்மையிலேயே பயனளிக்கக்கூடிய புராஜக்ட்களில் அவர்களை ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டு முதல் இந்த திட்டம் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த திட்டத்தின் செயல்பாட்டைத் தமிழக அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII) ஆகியவை கண்காணிக்கும். தற் போதைக்கு 40-க்கும் அதிகமான அரசுத் துறைகள் உள்ள நிலையில், ஒவ்வொரு துறையிலும் அதனதன் துறை சார்ந்த பிரச்னைகள் உள்ளன. மேலும் அவற்றின் அன்றாட செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது. இதனை தீர்க்க, பொறியியல் மாணவர்களுக்கான இந்த திட்டம் உதவும் எனக் கூறுகிறார் தமிழக உயர் கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர்.
பட்டைத் தீட்டப்படப் போகும் மாணவர்கள்
மேலும், இவ்வாறு அரசு துறைகளில் மாணவர்களுக்கு புராஜக்ட்டுகளைச் செய்ய கொடுப்பதன் மூலம் அவர்களின் திறமையைக் கண்டறிந்து கொள்ள முடியும். அதே சமயம் மாணவர்களும் தங்களது படிப்புக்குத் தேவையான புராஜக்ட்களைத் தேர்வு செய்துகொள்ள முடியும். இதற்காக தேர்வு கமிட்டி ஒன்று விரைவிலேயே அமைக்கப்பட உள்ளது. இந்த கமிட்டிக்கு மாணவர்கள் தங்களது திட்டங்களை அனுப்பலாம். அவற்றை இந்த கமிட்டி ஆய்வு செய்து, அவற்றைத் தேர்வு செய்யும். அவ்வாறு தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு புராஜக்ட்களிலும் மாணவர்கள் குழுவாக வேலை செய்வார்கள். அதில் அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும்.
புராஜக்ட்களுக்கான பணிகள் முடிவடைந்த பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட புராஜக்ட்களில் முதல் 10 சிறந்த மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு, ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படும். அதே சமயம் இதில் பங்கேற்ற மற்ற மாணவர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு புராஜக்ட்டுக்கும் தலா 25,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசுத் துறை நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களும் கைக்கோர்ப்பது என்பது, கல்வி மீதான அரசின் ஒரு முற்போக்கு அணுகு முறையாகவும், அரசுத் துறை நிறுவனங்களில் காணப்படும் பணி சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான புதுமையான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் நிஜ உலகின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் மாணவர்களை ஆர்வமுடன் பங்கேற்க வைப்பதன் மூலம், தமிழ்நாட்டின் எதிர்கால பொறியியல் படிப்பும், எதிர்கால பணியாளர்கள் சக்தியும் செதுக்கப்படுகின்றது என்றே சொல்லலாம். அதுமட்டுமல்லாது தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை இன்ஜினீயர்களை சமூக பொறுப்புள்ளவர்களாகவும் இத்திட்டம் உருவாக்கும்!