சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றங்களைத் தடுப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது போன்ற பொதுமக்களுக்கான காவல்துறை சேவையை துரிதமாக மேற்கொள்ளும் வகையில், சென்னை பெருநகர காவல் துறையின் பயன்பாட்டிற்காக மேம்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய 53 வாகனங்களின் சேவைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை போன்ற பெருநகரங்களில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும், குற்றச்செயல்களைத் தடுப்பதிலும் காவல்துறையின் பங்களிப்பு மிக முக்கியமானது.
இதனை கருத்தில்கொண்டே, 2023 -24 ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கையில், மாநிலத்திலுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு முக்கியமாக, சரக எல்லைக்குட்பட்ட மிக முக்கிய பிரமுகர்களின் வழிக்காவல் பணி, சட்டம் மற்றும் ஒழுங்கு சம்பவங்கள், குற்றங்களைத் தடுப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது உள்ளிட்ட பல்வேறு முனைகளில் காவல்துறையின் செயல்திறனை மேம்படுத்தும் பொருட்டு, கழிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு ஈடாக 283 நான்கு சக்கர வாகனங்கள் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, அவ்வாகனங்களிலிருந்து பெருநகர சென்னை காவல் துறையின் பயன்பாட்டிற்காக 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மேம்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய 25 ஹூண்டாய் கிரெட்டா, 8 இன்னோவா கிரிஸ்டா மற்றும் 20 பொலிரோ ஜீப் என மொத்தம் 53 வாகனங்களின் சேவைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதன் மூலம் சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் குற்றங்களை களையவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், சட்டம் ஒழுங்கினை சிறந்த முறையில் பராமரிக்கவும், பொது மக்களுக்கு குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கிடவும் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.