ஒடுக்கப்பட்டுக் கிடந்த தமிழ்நாட்டு மக்களை தனது தெளிவான கொள்கைகளாலும், மக்களுக்கான அரசியலை செய்தும் கோடிக்கணக்கான இதயங்களை நேரடியாகப் போய்ச் சேர்ந்தவர் பேரறிஞர் அண்ணா. அவரது நினைவு நாள் இன்று.
அண்ணாவின் ஆளுமை எத்தகையது என்பதை விளக்கும், அவர் ஆற்றிய சில உரைகள், நிகழ்வுகள் இங்கே… “தமிழ்நாட்டில் வல்லபாய் வாய்க்கால், சரோஜினி சதுக்கம், அரவிந்தர் அங்காடி, ஜவஹர் ஜவ்வரிசி, சவர்க்கார் சாம்பார் என்று நாம் தான் எதற்கெடுத்தாலும் வடநாட்டார் பெயரைச் சூட்டிக் கொண்டு மகிழ்கிறோம். ஆனால் அவர்கள் நமது தலைவர்களின் பெயரை ஒருபோதும் சூட்டுவதில்லை. ஏன்? சிந்திப்பீர்” என்று தமிழருக்கு சூட்டையும், சொரணையையும் உணர்த்தியவர் அண்ணா.
அவையை அசரடித்த அண்ணாவின் கன்னி பேச்சு
இந்தி எதிர்ப்பு நிலை, திராவிட நாடு கோரிக்கை இவற்றால் அண்ணாவின் மீது கோபத்தில் இருந்தவர் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு. அவர், சென்னை வந்தபோது தி.மு.க.-வினர் அவருக்குக் கறுப்புக்கொடி காட்டியதற்காக ‘நான்சென்ஸ்’ என திமுக. தலைவர்களை கடுமையாக விமர்சித்தார். இத்தகைய நிலையில், அண்ணா மாநிலங்களவையில் முதல் முறையாகப் பேசுகிறார். அவையில் நேரு உள்ளிட்ட பலர் இருக்க, தனது கன்னி உரையை ஆரம்பிக்கிறார்.
“நான் ஒரு திராவிடன். என்னை திராவிடன் என அழைத்துக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். இப்படிக் கூறுவதால் நான் வங்காளிக்கோ, மராட்டியருக்கோ, குஜராத்தியருக்கோ எதிரானவன் அல்ல. ராபர்ட் பர்ன்ஸ் குறிப்பிட்டது போல, மனிதன் எப்படியிருந்தாலும் மனிதன் தான். என்னை திராவிட இனத்தை சேர்ந்தவன் என்று அழைத்துக் கொள்ளும்போது திராவிடனிடம் இந்த உலகத்துக்கு வழங்க திட்டவட்டமான, தெளிவான மற்றவைகளிடமிருந்து வேறுபட்ட சில திடமான, வித்தியாசமான கருத்து உள்ளது என நம்புகிறேன். சுய நிர்ணய உரிமையே எங்களின் தேவை. இந்த அவையின் உறுப்பினர்கள் காட்டிய அன்பை பல நேரங்களில் பார்த்தேன். நான் இங்கு வந்து இவ்வளவு அன்பைப் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை. சில ஹிந்தி மொழி பேசும் உறுப்பினர்களால் ஏற்படுத்தப்படும் விரும்பத்தகாத செயல்களை அந்த அன்பு மறக்கடிக்க வைக்கிறது.
உங்களோடு ஒரே நாடாக இருக்கவும் எனக்கு விருப்பம்தான். ஆனால் ஆசைவேறு, யதார்த்தம் வேறு” என்று தொடர்ந்து அண்ணா பேச, நேரு உள்பட மொத்த அவையும் ரசித்துக் கேட்டது. இடையில் மற்ற உறுப்பினர்கள் இடையிடையே குறுக்கிட்டனர். நேரம் கடந்ததை மாநிலங்களவைத் தலைவர் சுட்டிக்காட்டியபோது, உணர்ச்சிவயப்பட்டு குறுக்கிட்ட நேரு ‘அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்; பேசவிடுங்கள்’ எனக் கேட்டுக்கொண்ட அதிசயம் நடந்தது. அண்ணாவின் உரை அந்த அளவுக்கு நேருவைக் கட்டிப்போட்டது.
அண்ணாவின் தீர்க்க தரிசனம்
தொடர்ந்து பேசிய அண்ணா, “ஆட்சி மொழியாக ஆங்கிலமே தொடரும் என்ற இப்போதைய நிலைமை நீடிக்க அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துங்கள். அன்னிய மொழி என்பதால் இதைக் கைவிட வேண்டும் என்று நினைக்காதீர்கள். எந்த நாட்டிடமிருந்தும் அறிவியல், தொழில்நுட்ப உதவிகளைக் கேட்டுப்பெறும் காலம் இது; ஆங்கில மக்கள் நமக்குக் கொடுத்தத் தொழில்நுட்ப உதவியாகவே இம்மொழியைக் கருதுவோம்”என்றார்.
அண்ணாவை ஏன் ஒரு தீர்க்கதரிசி என்று சொல்வதற்கு அவரது இந்த பேச்சு ஒரு உதாரணம். இன்றைக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல்வேறு உலக நாடுகளிலும் பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற தமிழர்கள் கோலோச்சுவதற்கு, அவர்களது ஆங்கில மொழி அறிவுதான் காரணம். தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையைத் தமிழ்நாடு தொடர்ந்து கடைப்பிடித்ததால்தான் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இந்த சாதனை சாத்தியமானது.
‘அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்’
இரண்டு ஆண்டு காலம் தமிழக முதல்வராகப் பணியாற்றிய அண்ணாதுரை 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி இறந்தார்.
இறப்பதற்கு முன்னர் சட்டசபையில் அண்ணா ஆற்றிய உரையில், “ஓராண்டுக்கு முன்னால், நான் பதவிக்கு வந்தேன். இந்த ஓராண்டில் மூன்று முக்கியமான காரியங்களைச் செய்திருக்கிறேன்.ஒன்று, – சுயமரியாதை திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம். இரண்டு,- தாய்த் திருநாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர்மாற்றம்.மூன்று, – தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என்றும் , தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கை அறிவிப்பு.
இதைப் பார்த்துவிட்டுப் பலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது. இவர்களை விட்டுவைக்கலாமா? ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். முடியுமா என்று நான் சவால் விட மாட்டேன். உங்களால் முடியும். ஆனால், கலைத்து விட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து அண்ணாதுரை கொண்டுவந்த இவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என்று கருதினாலே, உடனே மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற அச்சமும் கூடவே வரும். அந்த அச்சம் இருக்கிற வரையில் , அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள். அந்த அச்சம் எவ்வளவு காலத்துக்கு இருக்கிறதோ, அவ்வளவு காலத்துக்கும் ஆட்சியில் யார் இருந்தாலும் இல்லா விட்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்வதாகப் பொருள்” என்று பேசினார்.
உண்மைதான், அண்ணா தனது கொள்கைகள் மூலம் தொடர்ந்து தமிழ்நாட்டை ஆண்டுகொண்டுதான் இருக்கிறார்..!