Amazing Tamilnadu – Tamil News Updates

பெண்களை சிகரத்தில் ஏற்றும் ‘தோழி விடுதிகள்’… தடைகளைத் தகர்க்கும் தமிழக அரசு!

மிழகத்தின் முக்கிய நகரங்களில், குறைந்த கட்டணத்தில் ‘தோழி விடுதிகள்’ என்ற பெயரில், அடுத்தடுத்து தமிழக அரசால் மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இது, உழைக்கும் பெண்களிடையே மட்டுமல்லாது, அனைத்து தரப்பினரிடத்திலும் மிகுந்த பாராட்டையும் வரவேற்பையும் பெற்று வருகிறது.

பெண்களுக்கு சொத்துரிமை, உள்ளாட்சியில் 33% ஒதுக்கீடு… என பெண்கள் முன்னேற்றத்துக்காக கடந்த கால திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்த நிலையில், கடந்த 2021 ல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றது. அதன் பின்னர், மகளிர் முன்னேற்றத்துக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், உயர் கல்வியை ஊக்குவிக்கும் புதுமைப்பெண் திட்டம், இலவச பேருந்து பயண திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம்… எனப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் இடம்பெற்றது தான், ‘தோழி விடுதிகள்’ திட்டம். நகரங்களில் பணியாற்றும் மகளிரின் வசதி மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ‘தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்’ என்கிற அமைப்பைத் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் சார்பில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், பெரம்பலூர், விழுப்புரம், வேலூர், தஞ்சாவூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கெனவே மகளிர் தங்கும் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தாம்பரத்தில் ரூ.18 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ‘தோழி’ விடுதியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பல்வேறு அடிப்படைத் தேவைகளோடு, பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்த இந்த விடுதிகளில், மாத அடிப்படையிலும் நாள் கணக்கிலும் பெண்கள் தங்கலாம். குடும்பத்தை விட்டு வெளியூரில் பணிபுரியும் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பெறும் மகளிருக்கு, உணவுடன் பாதுகாப்பான தங்கும் வசதி அமைத்துக் கொடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

தாம்பரம் விடுதி

திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்

மாத வருமானம் சென்னையில் ரூ.25,000 த்திற்குள்ளும், இதர மாவட்டங்களில் ரூ.15,000 -த்திற்குள்ளும் இருத்தல் வேண்டும்.

வாடகை மாதம் ரூ. 300

மூன்றாண்டுகளுக்கு மேல் பயனாளியின் தேவை, தங்கிப் பயிலும் காலத்தில் நடந்துகொண்ட விதம் ஆகியவற்றின் அடிப்படையில், காப்பாளரின் பரிந்துரையின்பேரில் விடுதியில் தங்குவது நீட்டிக்கப்படும். சென்னையில் மாதமொன்றுக்கு வாடகையாக 300 ரூபாய் செலுத்த வேண்டும். இதர மாவட்டங்களில் 200 ரூபாய் செலுத்த வேண்டும். உணவு மற்றும் மின் கட்டணத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

வசதிகள் என்னென்ன?

24 மணி நேர பாதுகாப்பு வசதி, அயனிங் வசதி, குழந்தைகள் பாதுகாப்புக்கான இடம், சுகாதாரமான கழிவறை, சிசிடிவி கேமராக்கள், பயோமெட்ரிக் வருகைப்பதிவு, காற்றோட்டமான கட்டடங்கள், சுத்தமான அறைகள், பொழுதுபோக்கு அம்சங்கள், வைஃபை வசதி, கேண்டீன், டிவி ஹால், வாஷிங் மெஷின், துணி அயர்ன் செய்தல், சுத்தமான ஆர்.ஓ. குடிநீர் என ஏராளமான வசதிகள் உள்ளன.

பதிவு செய்வது எப்படி?

தேவைப்படுவோர் www.tnwwhcl.in என்கிற இணைய தளத்துக்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்விக்காக, நகரங்களுக்கு இடம்பெயரும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களில், மிக முக்கியமானது பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு. ஒருவேளை பொருளாதாரத்தை சமாளித்தாலும், குடும்பத்தைவிட்டு பிரிந்து தனியாக நகரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு தங்குவதற்கு வீடு கிடைப்பது அத்தனை சுலபமல்ல. அப்படியே கிடைத்தாலும், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளையும் அவர்கள் எதிர்கொள்ள நேரிடும்.

“முன்னேறும் மகளிர்க்கான முகவரி”

இந்த நிலையில் தான் மேற்கூறிய பிரச்னைகள் எதுவும் இல்லாமல், பெண்கள் தைரியமாக கிராமங்களை விட்டு நகரங்களுக்கு வந்து தங்கி வேலை செய்ய ஏதுவாக, இந்த ‘தோழி விடுதிகள்’ திட்டத்தை முக்கிய நகரங்கள் மற்றும் மாவட்டங்கள் வாரியாக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம், தமிழக பெண்கள் தங்களது சொந்தக் காலில் நின்று சம்பாதிக்கவும், பொருளாதார சுதந்திரம் பெறவும் கூடுதல் வழி பிறக்கும்.

அந்த வகையில் “தோழி விடுதிகள், முன்னேறும் மகளிர்க்கான முகவரி” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னர் குறிப்பிட்டிருந்தது மிக பொருத்தமானது என்றே கூறலாம்!

Exit mobile version