புத்தாண்டுக் கொண்டாட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?
சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
சென்னைப் பெருநகர காவல்துறை 18 ஆயிரம் பேரை பாதுகாப்புப் பணியில் இறக்கி விட்டிருக்கிறது.
ஞாயிற்றுக் கிழமை மாலையில் இருந்து சென்னை நகரில் 400 இடங்களில் சிறப்பு வாகனக் கண்காணிப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக் கிழமை மாலையில் இருந்து திங்கட் கிழமை (புத்தாண்டு தினம்) வரையில் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெரினா, சாந்தோம், எலியட் மற்றும் நீலாங்கரை ஆகிய கடற்கரைப் பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் இருந்து போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுகின்றன.
புத்தாண்டுக் கொண்டாட்டம்
ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்ட்டுகள் மற்றும் கடற்கரை ரிசார்ட்டுகளில் உரிய அனுமதி பெற்று ஞாயிற்றுக் கிழமை இரவு ஒரு மணி வரையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
பட்டாசு வெடிப்பது அனைத்து இடங்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
குடியிருப்புகள் மற்றும் அப்பார்ட்மெண்ட்டுகளில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு ஒலி பெருக்கி பயன்படுத்தினால் முன் கூட்டி போலீஸ் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் பைக் ரேஸிங் சம்பவங்களை கண்காணிக்கவும் சிசிடிவி கேமராக்கள் மட்டுமல்லாமல் ட்ரோன்களும் பயன்படுத்தப்பட உள்ளன.
பைக்கில் வீலிங் செய்வது, அளவு கடந்த வேகத்தில் செல்வது, ரேஸிங் போன்றவற்றைக் கண்காணிக்க 6 ஆயிரத்து 747 சிறப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் வாகனத்தின் நம்பர் உட்பட காட்சிகள் துல்லியமாகப் பதிவாகி நேரடியாக கட்டுப்பாட்டு அறைக்குச் செல்லும். இது தவிர பைக் ரேஸிங் கண்காணிப்புக்கென தனிப்பட்ட முறையில் 33 இடங்களில் வாகன சோதனை மையங்கள் செயல்பட உள்ளன.
பொதுமக்கள் புத்தாண்டை சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும், கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.