நாடாளுமன்ற தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நேற்று டெல்லியில் அக்கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் நரேந்திர மோடி பாஜக கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, வருகிற 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில், மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம், மோடியுடன் எத்தனை பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர் என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இதற்கு காரணம், கூட்டணி கட்சிகள் முக்கிய அமைச்சரவை இலாகாக்களைக் கேட்டு நெருக்கடி கொடுப்பதுதான் எனக் கூறப்படுகிறது. அதிலும், பாஜக-வின் ஆட்சியைத் தீர்மானிப்பவர்களாக உருவெடுத்துள்ள தெலுங்குதேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தள தலைவரான பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் முன்வைக்கும் நிபந்தனைகளும் கோரிக்கைகளும் மோடியை மிரள வைப்பதாக உள்ளன.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 238 இடங்களை மட்டுமே பெற்று, ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்கள் இல்லாத நிலையில், அக்கட்சி கூட்டணி கட்சிகளையே பெரிதும் நம்பி உள்ளது. இந்த நிலையில் தான் 16 இடங்களை வைத்துள்ள தெலுங்குதேசம் கட்சியும், 12 இடங்களை வைத்துள்ள ஐக்கிய ஜனதா தளமும் வலுவான கேபினட் அமைச்சர் பதவிகளைக் கேட்பது மட்டுமல்லாமல், மேலும் பல கோரிக்கைகளையும் வைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தெலுங்குதேசம் கட்சியின் 10 கோரிக்கைகள்
இதில் தெலுங்குதேசத்தின் சந்திரபாபு நாயுடு 10 கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், தங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரப்பட வேண்டும், மக்களவை சபாநாயகர் பதவி வேண்டும், 3 கேபினட் அமைச்சர், 2 இணை அமைச்சர் பதவிகள் தரப்பட வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கையாக சொல்லப்படுகிறது. மேலும் கேபினட் அமைச்சர் பதவிகளுக்கு நிதித்துறை, சாலை போக்குவரத்து துறை உள்பட முக்கியமான துறைகளைக் கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் 2 கேபினட் அமைச்சர் பதவி கொடுக்க தயார் என்றும், சபாநாயகர் பதவியை ஒருபோதும் விட்டுத்தர முடியாது என்றும் பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவும் அமித் ஷாவும் உறுதியாக இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய ஜனதா தளத்தின் நிபந்தனைகள்
அதேபோன்று ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார் முன்வைக்கும் நிபந்தனைகளும் பாஜக-வை கொதி நிலைக்குத் தள்ளுவதாக உள்ளது. 3 கேபினட் அமைச்சர் பதவி, இதில் வேளாண்மை, ரயில்வே துறைகள் கட்டாயம், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து என அக்கட்சியின் நிபந்தனைகள் நீள்கின்றன. ஆனால், பாஜக தரப்பிலோ 2 இணை அமைச்சர் பதவிகளுடன், பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி துறை ஆகியவற்றை கேபினட் அந்தஸ்தில் வழங்க தயாராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதுபோக, ராணுவத்துக்கு இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கும் சர்ச்சைக்குள்ளான ‘அக்னிபாத்’ திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாஜக-வின் முக்கிய திட்டமான நாடு முழுவதும் ‘ஒரே சிவில் சட்டம்’ கொண்டுவருவதற்கு முன்னர் இந்த விஷயத்தில் தொடர்புடைய அனைவரையும் அழைத்து, அவர்களின் கருத்துகளைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் பாட்னாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் கே.சி. தியாகி தெரிவித்தார்.
ஐக்கிய ஜனதா தளத்தின் இந்த நிபந்தனைகள் பாஜக-வையும் மோடியையும் கிறுகிறுக்க வைத்துள்ளன.
உலுக்கும் உதிரி கட்சிகள்
இன்னொருபுறம் 7 இடங்களை வைத்துள்ள சிவசேனாவின் ஷிண்டே பிரிவு ஒரு கேபினட் மற்றும் இரண்டு இணை அமைச்சர் பதவிகளையும், 2 இடங்களை வைத்துள்ள ராஷ்ட்ரிய லோக் தளம் ஒரு கேபினட் மற்றும் ஒரு இணை அமைச்சர் பதவிகளையும் கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், 2 இடங்களுடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம், ஒரு இடத்தையும் பெற்றுள்ள அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கோரிக்கை என்னவென்று இன்னும் தெளிவாக வெளியாகத நிலையில், அந்த கட்சிகளும் இதே கோரிக்கைகளை முன்வைக்கலாம் எனத் தெரிகிறது.
இவ்வாறு பதவியேற்புக்கு முன்னதாகவே கூட்டணி கட்சிகள் விதிக்கும் இத்தகைய நிபந்தனைகளால் பாஜக ஆடிப்போய் உள்ளது. பிரதமராக பதவியேற்க உள்ள மோடியும் உற்சாகம் இன்றியே உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.