தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலம் இரண்டு கோடியே 68 லட்சம் விலையில்லா பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
மேலும், மாணவர்களுக்கு விற்பனை செய்ய ஒரு கோடியே 32 லட்சம் பாடப் புத்தகங்கள் என மொத்தம் சுமார் 4 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு வழங்குவதற்காக, மாவட்டங்களுக்கு மூன்று கோடியே 50 லட்சம் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதே போல, 50 லட்சம் புத்தகங்கள், மே மாதம் முதல் வாரத்திற்குள் அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய பாடத்திட்டம்
இந்த நிலையில், தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு 2017-2018 ஆம் ஆண்டு முதல் திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக திருத்தப்பட்ட புதிய பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டன.
2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவியேற்ற பின்னர், ‘முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு, பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும்’ என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு 9 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ‘செம்மொழியான தமிழ் மொழி’ எனும் தலைப்பில் சேர்க்கப்பட்ட பாடத்தில், தமிழ் மொழிக்கு கருணாநிதி ஆற்றிய பங்களிப்பு குறித்த விவரங்கள் இடம் பெற்றிருந்தன.
10 ஆம் வகுப்பு பாடத்தில் கலைஞர் குறித்த பாடம்
இதன் தொடர்ச்சியாக, வரவிருக்கும் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தின் உரைநடை பகுதியில், ‘பன்முக கலைஞர்’ என்ற தலைப்பில் கருணாநிதியின் பல்வேறு திறன்கள் குறித்தும், தமிழ் மற்றும் கலைத்துறையில் செய்த பணிகள் குறித்தும் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
11 தலைப்புகளில் …
குழந்தை உள்ள கலைஞர், போராட்ட கலைஞர், பேச்சு கலைஞர், நாடக கலைஞர், திரை கலைஞர், இதழியல் கலைஞர், இயற்றமிழ் கலைஞர் என்ற தலைப்புகளில் பாடம்கவிதை கலைஞர், கட்டுமான ஆர்வலர் கலைஞர், செம்மொழி கலைஞர் என 11 தலைப்புகளில் கருணாநிதி சிறந்து விளங்கிய துறைகள், அவர் செய்த சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த பாடப் பகுதியின் இறுதியில், ‘தமிழ் வெல்லும்’ என்று அவரின் கையெழுத்தும் பதிப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியளின் மாபெரும் ஆளுமை
தமிழக அரசியலில் மாபெரும் ஆளுமையாக விளங்கி, தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்த கலைஞர் மு. கருணாநிதி, தனது ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்த பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழகத்தின் சமூக, அரசியல் கட்டமைப்பை உருவாக்கியவர்.
மேலும் தமிழ் இலக்கியம், திரைப்படம் மற்றும் திராவிட கொள்கைகளை செயல்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்கு தமிழ்நாட்டின் அழியாத கலாசார அடையாளமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
இவற்றை இன்றைய இளம் தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் விதத்திலேயே பள்ளிக்கல்வித் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.