பட்ஜெட் 2024: வருமான வரி விதிப்பில் மாற்றம் உண்டா? முக்கிய அம்சங்கள்!
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல்-ஜூலை மாதம் வரையிலான அரசு செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட்டை, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
“நாட்டு மக்கள் நன்றாக வாழ்கின்றனர். அவர்களது வருமானம் சராசரியாக 50 சதவிகிதம் உயர்ந்துள்ளது” எனத் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார் நிர்மலா சீதாராமன்.
இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் நேர்மறையான மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. சமூக அடிப்படையிலும் புவியியல் அடிப்படையிலும் மேம்பாட்டு திட்டங்களை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது.நாட்டு மக்கள் புதிய நம்பிக்கையை பெற்றுள்ளனர். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு 2027-ல் நனவாகும்.
மக்கள் மீண்டும் பாஜக ஆட்சியை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறோம். ரேஷனில் இலவச உணவுப்பொருள் கொடுத்ததன் மூலம் உணவுக்கான கவலையை போக்கிவிட்டோம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை திட்டமிட்டு செயல்படுத்துகிறோம்.
2047-ல் வளர்ச்சி பெற்ற புதிய இந்தியா உருவாகும். பா.ஜ.க. அரசின் இலக்காக சமூகநீதி உள்ளது. 4 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துவதே அரசின் நோக்கம். வறுமை ஒழிப்பு, மகளிருக்கு அதிகாரம், இளைஞர்களுக்கு வாய்ப்பு, அனைவருக்கும் உணவு வழங்குவதே நோக்கம்.
25 கோடி மக்களை வறுமையில் இருந்து பாஜக அரசு மீட்டுள்ளது. நேரடியாக வங்கிகள் மூலம் பயனாளிகளுக்கு நிதி வழங்கியதால் அரசுக்கு ரூ.2.7 லட்சம் கோடி மிச்சம் ஏற்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட வரி வருவாய் மதிப்பீடு ரூ. 27.56 லட்சம் கோடி.
நிதி பற்றாக்குறை – 5.8%
வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 8 கோடிக்கும் மேல் இருக்கிறார்கள். இதன் காரணமாக நாட்டின் நேரடி வரி வருவாய் என்றைக்கும் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு.
வருமான வரி விகிதத்தில் மாற்றமில்லை. வருமான வரி செலுத்துவோருக்கு ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடரும்.
வருமான வரி செலுத்தும் நடைமுறை மேலும் எளிமையாக்கப்பட்டுள்ளது.
ரூ.25,000 வரையிலான வரி பாக்கி வழக்குகள் ரத்து. இதன் காரணாக ஒரு கோடி பேர் பலனடைவார்கள்.
நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது.
10 வருடங்களில் 500 பில்லியன் டாலருக்கு அதிகமாக அந்நிய முதலீடுகள் இந்தியாவுக்கு வந்துள்ளன.
மாநிலங்களுக்கு வட்டியில்லாக் கடனாக ரூ. 1.2 லட்சம் கோடி வழங்கப்படும்.
கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்படும்.
நாட்டில் 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முத்ரா திட்டத்தின் கீழ் 43 கோடி முறை வங்கிக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3000 ஐ.டி.ஐக்கள் தொடங்கப்பட்டுள்ளன.
40,000 சாதாரண ரயில் பெட்டிகள் ‘வந்தே பாரத்’ தரத்தில் புதுப்பிக்கப்படும்.
சமூக நீதியே பாஜக அரசின் பிரதான நோக்கம்.
தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக ரூ. 1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும்.
9-14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி போடப்படும்.
நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும்.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்;
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் சேர்க்கப்படுவார்கள்.
நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக தனிக் குழு அமைக்கப்படும்.
ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும்.
உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தவும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும்.
9-14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி போடப்படும்.
ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படும்.
ஆன்மிக சுற்றுலாவுக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும். இதனால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பது உட்பட மேலும் பல அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்,