பஞ்சு மிட்டாயைப் பிடிக்காதவர்கள் உண்டா..? குச்சியில் சுத்தியோ அல்லது பாக்கெட்டில் அடைத்தோ, மக்கள் கூடும் பொழுதுபோக்கு இடங்களில் இளஞ்சிவப்பு நிறத்தில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயைப் பார்த்தாலே குழந்தைகள் குதூகலமடைந்து விடுவார்கள். வாயில் போட்ட உடனேயே கரைந்து விடும் மெல்லிய இழையிலான அந்த பஞ்சு மிட்டாயை சிறியவர்கள் மட்டுமல்ல; பெரியவர்களுமே, தங்களது பிள்ளைப் பருவத்து குதூகலத்தை நினைத்து விரும்பி சாப்பிடுவர்.
ஐஸ் விற்க வருபவரின் பெட்டியை விட சற்று பெரிய சைஸில் இருக்கும் பஞ்சு மிட்டாய் தயாரிக்கும் மெஷினின் மேல்புறத்தில் இருக்கும் கிண்ணம் போன்ற பகுதியில், கலர் பொடி கலந்த சர்க்கரையைப் போட்டு, அந்த மெஷினை சுற்றினால், இழை இழையாக திரண்டு பஞ்சு போன்று வருவதை ஒரு குச்சியில் சுருட்டிக் கொடுப்பார் பஞ்சு மிட்டாய் வியாபாரி. இன்னொரு தரப்பு வியாபாரிகள், ஏற்கெனவே தயாரித்த பஞ்சு மிட்டாயை பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைத்து விற்க கொண்டு வருவார்கள். எப்படி விற்றாலும், பஞ்சு மிட்டாயை வாங்கிச் சாப்பிடுவது சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றுதான்.
நகரங்களில் தெருக்கள் தொடங்கி பீச், பார்க், பொருட்காட்சி, சர்க்கஸ் காட்சிகள் நடைபெறும் இடங்கள் என மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் இது விற்கப்படுகிறது என்றால், கிராமங்களில் தெருக்களிலும், கோயில் திருவிழாக்களிலும் இதன் விற்பனை கட்டாயம் இருக்கும்.
புற்று நோய் ஆபத்து
இப்படி காலங்காலமாக மனித கொண்டாட்ட நிகழ்வுகளின் அடையாளங்களில் ஒன்றாக மாறிப்போன பஞ்சு மிட்டாயில் தான், அதனை சாப்பிடுபவர்களுக்கு புற்று நோயைக் கொண்டு வரக்கூடிய ஆபத்து ஒளிந்திருப்பதாக கூறி, அதனை விற்க தமிழகம், புதுச்சேரி, கேரளா போன்ற மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கக்கூடிய ரசாயனம் கலக்கப்படுவதை உணவு பாதுகாப்புத் துறை கண்டுபிடித்துள்ளதைத் தொடர்ந்தே இந்த தடை.
பஞ்சு மிட்டாயைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் சர்க்கரையுடன், நிறத்துக்காக சேர்க்கப்படும் கலர் பொடியில், விஷத்தன்மை கொண்ட ரசாயனம் கலப்பு இருப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகம் கொண்ட நிலையில், புதுச்சேரி கடற்கரை சாலையில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து கொண்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களிடம் இருந்த பஞ்சு மிட்டாய்களை வாங்கி சோதனை செய்துள்ளனர். அதில் ரோடமின் பி (RHODAMINE – B) என்ற விஷ நிறமி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இரு தினங்களுக்கு முன்னர், பஞ்சு மிட்டாய் விற்பனையில் ஈடுபட்டிருந்த வட மாநில இளைஞர்களிடம் இருந்து பஞ்சு மிட்டாய்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவர்களில் சிலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயக் கழகம் (FSSAI) அனுமதி அளித்துள்ள, அங்கீகரிக்கப்பட்ட செயற்கை நிர்ணயைப் பயன்படுத்த உணவு பாதுகாப்புத் துறையினர் பஞ்சு மிட்டாய் விற்பனையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஆபத்தான ரசாயனம்
பெல்ட், காலணி, ஆடை, ஊதுவத்தி மற்றும் தீப்பெட்டியில் வண்ணத்திற்காக பூசப்படும் தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கான விஷ நிறமிதான், இவர்கள் விற்கும் பஞ்சு மிட்டாயில் சேர்க்கப்படும் நிறமி ஆகும். இத்தகைய நிறமியைக் கலந்து தயாரிக்கப்படும் பஞ்சு மிட்டாயைச் சாப்பிட்டால், கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் என எச்சரிக்கிறார்கள் அதிகாரிகள்.
இது குறித்த தகவல் பரவியதைத் தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு, கடற்கரையில் பஞ்சு மிட்டாய் விற்ற அனைவரையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 1, 000-க்கும் மேற்பட்ட பஞ்சு மிட்டாய் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதேபோன்று அண்டை மாநிலமான கேரளாவிலும், பல இடங்களில் சோதனை நடைபெற்று, நச்சு ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாயை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
‘வெள்ளை நிற பஞ்சு மிட்டாயை சாப்பிடலாம்’
அதே சமயம், எவ்வித நிறமும் கலக்காத வெள்ளை நிறத்திலான பஞ்சு மிட்டாயை விற்க தடை விதிக்கப்படவில்லை. அதனை மக்கள் தாராளமாக வாங்கி சாப்பிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.