Amazing Tamilnadu – Tamil News Updates

நெஞ்சு வலியால் மயங்கி விழுந்தவரின் உயிரைக் காப்பாற்றிய காவல் உதவி ஆய்வாளர்… வைரலான வீடியோ… பொதுமக்கள் பாராட்டு!

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் பேருந்து நிலையம் அருகே நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிருக்குப் போராடிய நபரை காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றிய செயல், பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுத் தந்தது.

பழனி என்பவர் தாராபுரம் பேருந்து நிலையம் நுழைவாயில் அருகே, தான் செல்ல வேண்டிய இடத்துக்கான பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்படவே, அப்படியே மயங்கி விழுந்தார். இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து, ” ஐயோ என்னாச்சு..?” என்றபடியே ஓடி வந்தனர். இதனால் அங்கே சலசலப்பு ஏற்பட்டது. ஒரு சிலர், “உடனடியாக ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணுங்கள்” என்று குரல் எழுப்பினர்.

உயிரைக் காப்பாற்றிய உதவி ஆய்வாளர்

இந்த நிலையில், அந்த சமயத்தில் அங்கே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் கோபால், மக்கள் கூட்டமாக இருப்பதை பார்த்து அங்கே விரைந்தார். இதனையடுத்து மயக்குமுற்று கிடந்த பழனிக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தார்.

அதனைத் தொடர்ந்து அவரை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அனுமதிக்கப்பட்ட அந்த நபருக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அங்கு அவருக்கு இன்னும் 2 தினங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும், அதன் பின்னர் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பேருந்து நிலையத்தில் மயங்கி கிடந்தவருக்கு காவல்துறை உதவி ஆய்வாளர் கோபால் முதலுதவி சிகிச்சை அளித்து, அவரது உயிரைக் காப்பாற்றியது தொடர்பான வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக உதவி ஆய்வாளர் கோபாலையும், காவல்துறையையும் பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

நன்றி புதியதலைமுறை
Exit mobile version