தமிழ்நாட்டில் சமூக நீதிக்கும் சமத்துவத்து சமுதாயத்துக்குமான அரசியல் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்த நீதிக்கட்சி உருவான தினம் இன்று…
இன்றைக்கு தமிழ்நாடு கல்வி, மருத்துவம், சுகாதாரம், சமூக நலத் திட்டங்கள், அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய தொழில்/பொருளாதார வளர்ச்சி போன்றவற்றிலும், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதிலும் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றால், அதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்னால், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் போன்றவர்களும் நீதிக்கட்சித் தலைவர்களும் போட்ட அடித்தளம் தான் காரணம்.
நவம்பர் 20,1916 அன்று சென்னை வேப்பேரியில் வழக்கறிஞர் டி.எத்திராஜுலு முதலியார் இல்லத்தில் பிராமணர் அல்லாத தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் அமைப்புக் கூட்டம் ஒன்று கூடியது. திவான் பகதூர் பிட்டி. தியாகராய செட்டியார், டாக்டர் டி. எம். நாயர், திவான் பகதூர் பி. ராஜரத்தின முதலியார், டாக்டர் சி. நடேச முதலியார் உள்ளிட்ட பல தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள். அக்கூட்டத்தில் தான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் உருவானது. அதுதான் பின்னாளில் நீதிக் கட்சியானது.
அந்த நீதிக்கட்சி திராவிடர் கழகமாக உருவாகி, அதிலிருந்து உருவான திராவிட முன்னேற்றக் கழகம், அந்த அடித்தளத்தை அடிப்படையாக கொண்டு தங்களது ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்திய சமூக மாற்றங்கள்தான் இன்றைய நவீன தமிழகத்தின் முகமானது. திமுக-விலிருந்து பிரிந்த அதிமுக உள்பட , அதன் பின்னர் உருவான அனைத்து திராவிட கட்சிகளுக்கும் சமூக நீதியையும், சமத்துவ சமுதாயத்தையும் வலியுறுத்துவது அரசியல் கட்டாயமும் கடமையும் ஆகிவிட்டது.
ஏற்றத்தாழ்வுகள் இல்லாத தமிழகம்
நீதிக்கட்சியினாலும் திராவிட இயக்கங்களாலும் தமிழகம் கடந்த 50 ஆண்டுகளாக மேற்கூறிய துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளன. நிர்வாக அளவில் அரசு தரப்பில் இத்தகைய சாதனைகள் எட்டப்பட்டுள்ள போதிலும், சமூகத்தில் ஆழமான வேரூன்றிய ஏற்றத்தாழ்வுகளும் சமத்துவமின்மையும் சில இடங்களில் தொடர்ந்து நீடிக்க தான் செய்கின்றன. இதற்கு சில இயக்கங்களும் தலைவர்களும் காரணமாக உள்ளபோதிலும், அந்த பாகுபாடும் அதிக நாட்களுக்கு நீடிக்க முடியாது.
ஏனெனில் நீதிக்கட்சி போட்ட அடித்தளத்தினால் பயன்பெற்ற சமூகமும் பயன்பெற உள்ள சமூகமும் சமத்துவமான சமுதாயத்தின் அவசியத்தை உணரும்போது, சாதிப் பாகுபாட்டின் தளைகள் உடைக்கப்படும். மேலும் அனைத்து தனிமனிதர்களும் அவர்களின் பிறப்பை/சாதியைப் பொருட்படுத்தாமல் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்படுவார்கள். இறுக்கமான சாதியப் படிநிலை தகர்க்கப்படும். சாதியுடன் தொடர்புடைய சமூக இழிவுகளும் ஒழிக்கப்படும்.
சம வாய்ப்புகள், நீதிக்கான அணுகல் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றைக் கொண்ட பாலின சமத்துவம் என்பது, இந்த சமூகத்தின் யதார்த்தமான ஒரு அம்சமாக இருக்கும்.
நீதிக்கட்சி தினம் கொண்டாட்டத்துக்குமானது மட்டுமல்ல
தரமான கல்வி என்பது ஒரு சமுதாயத்தின் நியாயமான முன்னேற்றத்துக்கு அடித்தளமானது. ஒவ்வொரு தனிநபர்களுக்கும் அவர்கள் வெற்றிபெற தேவையான அறிவு மற்றும் திறன்களை வழங்குவது கல்விதான். அத்தகைய கல்வி அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருப்பதோடு, வறுமையின் சுழற்சியில் இருந்து விடுபடவும், அவர்களின் கனவுகளைத் தொடரவும் வழி வகுக்கும்.
அத்துடன் ஒவ்வொருவருக்கும் அவர்களின் சமூகப் பொருளாதார நிலை எதுவாக இருந்தாலும், தரமான மருத்துவப் பராமரிப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், சுகாதாரப் பாதுகாப்பு என்பது ஒரு சலுகையாக அல்லாமல், ஒரு உரிமையாகவும் மலிவாக கிடைப்பதாகவும் இருக்கும். இதன் மூலம் ஆரோக்கியமான மற்றும் சமத்துவமான சமூகம் உருவாகும். சமூக நீதி என்பது வெறும் முழக்கமாக இல்லாமல், சமூகத்தின் மற்றும் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பிரதிபலிக்கும் ஒரு வழிகாட்டும் கொள்கையாக இருக்கும். கூடவே மாற்றத்திற்கான உந்து சக்தியாக இருப்பதோடு, ஒவ்வொரு தனிமனிதனும் மதிப்புக்குரியவராக மதிக்கப்படும் சமூகத்தையும் அது வடிவமைக்கும்.
இவையெல்லாம் இப்போதைக்கு ஒரு கற்பனையான எதிர்காலமாகவோ அல்லது கனவாகவோ தோன்றலாம். ஆனால் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் ஒருங்கிணைந்த முயற்சிகளும் மேற்கொள்ளபட்டால் மேற்கூறிய எதிர்காலம் சாத்தியமானதே… நீதிக்கட்சி அதை தான் செய்தது. இந்த நீதிக்கட்சி தினத்தில், முழுமையான சமூக நீதி மற்றும் சமத்துவ சமுதாயம் என்பது வெறும் கொண்டாட்டமாக இல்லாமல், எதிர்கால தமிழ்ச் சமூகத்தின் வாழும் யதார்த்தமாக மாறிடும் வகையில் கட்சிகளும், அமைப்புகளும் மட்டுமல்லாமல் ஒவ்வொரு தனிநபரும் உழைக்க உறுதி ஏற்போம்!