Amazing Tamilnadu – Tamil News Updates

‘நீட்’ தேர்வும் ‘பயாலஜி’ க்கான தளர்வும்… பந்தாடப்படுகிறதா மருத்துவ படிப்பு..?

ம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான ‘நீட்’ தகுதித் தேர்வு தொடர்பான விதி முறைகளில் தேசிய மருத்துவ ஆணையம் செய்துள்ள தளர்வினால், மருத்துவ படிப்பில் சேருவதற்கான போட்டி மேலும் அதிகமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து கல்வியாளர்கள் தெரிவிக்கும் கருத்துகள் கவலை அளிப்பதாக உள்ளது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் (National Medical Commission) முந்தைய விதிமுறைகளின்படி ‘நீட்’ எழுத 11 மற்றும் 12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரிதொழில்நுட்பம் ஆகிய பாடங்களையும், கூடுதலாக ஆங்கிலமும் பயின்றிருக்க வேண்டும். இதையும் ‘ரெகுலர்’ பள்ளியில் சேர்ந்து படித்திருக்க வேண்டும்.

ஏற்கெனவே சர்ச்சை

இந்த தேர்வுக்கான கேள்வித்தாள் பெரும்பாலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருப்பதால், மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள், குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்கள் கோச்சிங் சென்டர்களை நாட வேண்டியதுள்ளது. இது மாணவர்களுக்கு கூடுதல் மன அழுத்தத்தைக் கொடுப்பதால் தான் இத்தேர்வுக்கு தமிழகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறது. கூடவே தமிழக அரசும் இத்தேர்வை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது.

அதே சமயம், “வசதியுள்ள மாணவர்கள் நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய 3 பாடங்களில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டில் மட்டும் கொஞ்ச பாடங்களை மட்டும் படித்து, பாஸ் மார்க் மட்டும் வாங்கி ( பொது பிரிவினருக்கே 138 தான்), தனியார் கல்லூரிகளில் அதிக பணம் கொடுத்து சேர்ந்துவிடுகின்றனர். அப்புறம் எப்படி ‘நீட்’ தகுதியானவர்களைத் தேர்வு செய்வதற்காக எனச் சொல்ல முடியும்?” என்பதே கல்வியாளர்களின் கேள்வியாக இருக்கிறது.

புதிய விதிமுறை சொல்வது என்ன?

இந்த நிலையில் தான், ‘நீட்’ தகுதித் தேர்வு தொடர்பான விதி முறைகளில் தளர்வு செய்து, தேசிய மருத்துவ ஆணையம் புதிய வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது. இதன்படி, “ பன்னிரெண்டாம் வகுப்பில் உயிரியலை ஒரு பாடமாக எடுத்து படிக்காதவர்களும்கூட மருத்துவப் படிப்பில் சேரலாம். இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்ப பாடங்களை இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து படித்திருக்கத் தேவை இல்லை. பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு, கூடுதல் பாடமாக இதை எடுத்துப் படித்து தேர்வு எழுதினால் போதும். மேலும், இதைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க முடியும்” என தேசிய மருத்துவ ஆணையம் கூறுகிறது.

“இதனால் 12 ஆம், வகுப்பில் உயிரியல் பாடத்துக்குப் பதில் கணித பாடத்தைப் படித்த மாணவர்களும் ‘நீட்’ தேர்வை எழுதுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றாலும், இதன் மூலம் போட்டி அதிகமாகும். ஏற்கெனவே உள்ள மருத்துவ படிப்புக்கான இடங்களுக்கே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த ஆண்டு, நாடு முழுவதும் 20 லட்சத்து 87,445 பேர் ‘நீட்’ தேர்வை எழுதினர். ஆனால் நாடு முழுவதும் உள்ள அரசுக் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் இருக்கும் மொத்த இடங்களின் எண்ணிக்கை 91,927 மட்டுமே.

கல்வியாளர்களின் கவலையும் ஆதங்கமும்

இந்த நிலையில், மருத்துவ படிப்புக்கான இடங்களை அதிகரிக்காமல், ‘நீட்’ தேர்வை எழுதும் மாணவர்களுக்கான போட்டியை மட்டுமே அதிகரிப்பது எப்படி சரியாகும்..? ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையைப் பின்பற்றும் வகையிலேயே தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த அறிவிப்பு இருக்கிறது.

இப்படி புதுப்புது விதிகளைக் கொண்டு வருவதும், பின்னர் அதை கைவிடுவதுமாக மருத்துவ படிப்பை பந்தாடினால், அது மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களிடையே குழப்பத்தையும், எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தி, மருத்துவ படிப்பு பக்கமே மாணவர்கள் வரத் தயங்கும் நிலையை ஏற்படுத்திவிடும். இதனால் கடைசியில் பாதிக்கப்படப் போவது சாமான்ய மக்கள்தான். வசதி இருப்பவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்வார்கள்… ” என ஆதங்கத்துடன் கூறுகிறார்கள் கல்வியாளர்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய கல்வியாளர் தா.நெடுஞ்செழியன், “அடிப்படை அறிவான ‘உயிரியல்’ பாடத் திட்டத்தை பகுதி நேரமாக படிப்பது எப்படி சரியாக இருக்கும்..? இரண்டு ஆண்டுகள் படிக்காமல் Physiology, Analogy போன்றவை புரியாது. தனியார் மருத்துவ கல்லூரிகளின் லாபத்திற்காக இந்த மாதிரி செய்வது, தவறான பாதையாக அமையும்.

அடுத்த தலைமுறையினருக்கு நல்ல மருத்துவர்கள் கிடைக்கமாட்டார்கள். நம்மை போன்ற வளர்ந்துவரும் நாடுகளுக்கு மக்கள் தொகை என்பது மிக மிக முக்கியமானது. மாணவர்களை பொறுத்தவரையில் இது கண்டிப்பாக பாதகமாக தான் அமையும். மாணவர்களால் படிக்கவே முடியாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் சிரமப்பட்டு படிக்க வேண்டியதாக இருக்கும்.

கல்வியாளர் தா.நெடுஞ்செழியன்

எனக்கு தெரிந்து இந்த திட்டத்தை எந்த மருத்துவர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உணர்வுள்ள ஒரு மருத்துவருக்கு மருத்துவ துறை என்பது எவ்வளவு கடினமான துறை என்பது தெரியும். இந்த மாதிரியான முன்னெடுப்பால், மக்கள் கல்வியை நோக்கி வருவது குறைந்துவிடும். எதிர்காலத்திற்கு நல்லது கிடையாது” எனக் கவலையுடன் கூறினார்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது ‘நீட்’ தேர்வு ரத்தே இதுபோன்ற குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்!

Exit mobile version