நீங்கள் ஓவியக் கலைஞரா..? – விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!
நீங்கள் ஓவிய அல்லது சிற்பக் கலைஞராக இருந்தால், கலைச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை, ஆண்டு தோறும் ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் 6 பேரைத் தேர்வு செய்து, அவர்களுக்கு கலைச்செம்மல் என்ற விருதும், 1 லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கி வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் ஓவிய சிற்பக் கலைஞர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.
விருதுக்கு நேரடியாகப் படைப்பாளர்களும் விண்ணப்பிக்கலாம் அல்லது அரசு நிறுவனமோ, தனி நபர்களோ, கலை அமைப்புக்களோ படைப்பாளர்களைப் பரிந்துரைக்கலாம். விண்ணப்பதார்கள், நவீன அல்லது மரபு வழிப் பிரிவு இவற்றில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன், படைப்பாளர்கள் தங்களின் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த 20 கலைப்படைப்புகளின் புகைப்படங்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
படைப்பாளர்கள் குறித்து பத்திரிகையில் வந்த குறிப்புகள், கட்டுரைகள், புத்தகங்கள், சான்றிதழ்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
படைப்பாளர்களின் படைப்புகள் மாநில, தேசிய மற்றும் உலக அளவில் நடைபெற்ற கண்காட்சிகளில் இடம் பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பத்துடன், படைப்பாளரின் புகைப்படம் மற்றும் சுயவிபரக் குறிப்புகள் இணைத்து அனுப்ப வேண்டும்.
இந்த விதிமுறைகளின் படி வரும் 20 ஆம் தேதிக்குள் “ஆணையர், கலை பண்பாட்டுத் துறை தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 600 008 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.