நிம்மதியான, விரைவான பயணம்… சென்னை மெட்ரோ ரயிலின் அட்டகாச பிளான்!
சென்னை பெருநகரத்தின் நிலப்பரப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து விரிவடைந்து வருவதால் ரயில், பேருந்து மற்றும் வாகனம் என ஒன்றோடொன்று இணைந்த போக்குவரத்து அமைப்புகளின் தேவை மிக முக்கியமானதாக ஆகி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் வழித்தடங்களை தடையின்றி ஒருங்கிணைக்கும் வகையில், 23 பன்னோக்கு போக்குவரத்து மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் சேவையை சென்னையில் துவங்கியது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்புக்குப் பிறகு, வழித்தடம் I மற்றும் II-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் II-ல், 116.1 கி.மீ. நீளத்துக்கு மேலும் 3 வழித்தடங்களைக் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே மேற்கூறிய பன்னோக்கு போக்குவரத்து மையங்களை அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டம்மிட்டுள்ளது.
எங்கெல்லாம் பன்னோக்கு போக்குவரத்து மையங்கள்..?
திருவான்மியூர் மற்றும் திருமயிலையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் MRTS நிலையங்களுடனும், மந்தைவெளி மற்றும் மாதவரத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் அவற்றுக்கான பேருந்து நிலையங்களுடனும் இணைக்கப்படும். மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான 45.4 கிமீ வழித்தடம்-3ல் ஒன்பது பன்னோக்கு போக்குவரத்து மையங்கள் அமைக்கப்பட உள்ளன. திருவான்மியூர், அடையாறு பேருந்து நிலையம், மந்தைவெளி, திருமயிலை, சேத்துப்பட்டு, அயனாவரம், பெரம்பூர் புறநகர் பகுதிகள், கீழ்ப்பாக்கம், ஆயிரம் விளக்கு ஆகிய இடங்களில் அவை அமையும்.
கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 26.1 கி.மீ வழித்தடம்-4ல், கோடம்பாக்கம், ஐயப்பன்தாங்கல், பூந்தமல்லி பேருந்து நிலையம், நந்தனம் மற்றும் வடபழனி ஆகிய ஐந்து மையங்கள் அமைக்கப்படும். 44.6 கி.மீ வழித்தடம் -5ல், மாதவரம் பேருந்து நிலையம், வில்லிவாக்கம் பேருந்து நிலையம், அண்ணாநகர், கோயம்பேடு, ஆலந்தூர், செயின்ட் தாமஸ் மவுன்ட், வில்லிவாக்கம், வானுவம்பேட்டை, கீழ்க்கட்டளை ஆகிய இடங்களில் ஒன்பது மையங்கள் அமைக்கப்படும்.
2025 முதல் 2028 ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் இந்த பன்னோக்கு மையங்களில் மேற்கூரையுடன் கூடிய நடைபாதைகள், லிஃப்ட்கள், எஸ்கலேட்டர்கள், வாகன நிறுத்தம், அடையாள பலகைகள் மற்றும் சிறிய உணவகங்கள் போன்ற வசதிகளையும் அமைக்க திட்டமிட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிம்மதியான, விரைவான பயணம்
பயணிகள் போக்குவரத்துக்கான இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை, பயணிகளுக்கான வசதியை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களது காத்திருப்பு நேரத்தையும் மிச்சப்படுத்தி, போக நினைக்கும் இடங்களுக்கு விரைவாக செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். குறிப்பாக அலுவலகம் செல்வோர், அவசர வேலையாக செல்வோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
மேலும் பயணிகள் தனியார் வாகனங்களைப் பயன்படுத்துவதை குறைத்து, பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவது அதிகரிக்கும். இதனால் பயணிகளுக்கு கூடுதல் செலவு குறையும். போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாட்டையும் குறைக்கும் என்பதால், சென்னை மக்களுக்கு இது நிச்சயம் நிம்மதியான பயணத்தைக் கொடுக்கும் எனலாம்!