Amazing Tamilnadu – Tamil News Updates

“நாவலூரில் இனி சுங்க கட்டணம் கிடையாது!”- மக்கள் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மாநிலத்தின் அனைத்து பிரிவு மக்களின் நலன்களில் மிகுந்த அக்கறையுடனும், அவர்களது கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்துவதிலும் மிகுந்த முனைப்புடனும் செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு புதிய நலத்திட்டங்களையும் கொள்கைகளையும் அறிவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் முன்னுதாரணமாக திகழ்கிறது.

குறிப்பாக கடந்த மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட “மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்” அறிவிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள் திறம்பட செயலாக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது, “புதுமைப் பெண் திட்டம்”, “மக்களைத் தேடி மருத்துவம்”, “முதல்வரின் முகவரி”, “நான் முதல்வன்” போன்ற பெரும் வரவேற்பைப் பெற்ற திட்டங்களும் மக்களை சென்றடைந்துள்ளது.

மேலும், மாநகராட்சி சாலைப் பணிகள், நகராட்சிகளில் மேற்கொள்ளப்படும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், புதிய பேருந்து நிலையங்கள் அமைத்தல், பள்ளி செல்லாக் குழந்தைகளை பள்ளிக் கல்வித் துறை மூலம் கண்காணித்தல், மகளிர் சுய உதவிக் குழுக்களின் பணிகள் என பல்வேறு பணிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு அதிக அக்கறை காட்டி வருகிறது.

திட்டங்களை அறிவிப்பதுடன் மட்டுமல்லாது, அவற்றை குறிப்பாக சாலைப் பணிகள், குடிநீர் திட்டங்கள், பாலங்கள், சமூகநலத் திட்டங்கள் போன்றவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றும் வகையில் அவ்வப்போது அதிகாரிகளுடன் அவை குறித்து ஆய்வு செய்கிறது. இதனால் பணிகளில் தொய்வு காணப்பட்டால், அவை உடனடியாக கண்டறியப்பட்டு, பணிகள் விரைவுபடுத்தப்படுகின்றன.

அந்த வகையில், தமிழகத்தில் உள்ள நடுத்தர மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த புதிய திட்டங்கள், கொள்கைகள் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை திமுக அரசு எடுத்து வருகிறது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் பதவி ஏற்றவுடன், தென் சென்னைப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, ராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்பச் சாலையில் உள்ள பெருங்குடி கட்டணச் சாவடியில் சாலைப் பயன்பாட்டு கட்டணம் வசூல் செய்வது கைவிடப்பட்டது. இதனால், இப்பகுதி வழியாக செல்வோரும், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவோரும் பெரும் பயனடைந்தனர்.

தற்போது இந்த சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. இதனால் சாலையின் பல பகுதிகள் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதே சாலையில் நாவலூரில் உள்ள கட்டண சாவடியிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் இன்று நடைபெற்ற செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய 4 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான கள ஆய்வு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாவலூரில் உள்ள கட்டண சாவடியிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற கோரிக்கையை ஏற்று, அக்டோபர் 19 ஆம் தேதி முதல் நாவலூர் கட்டண சாவடியிலும் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படும் என்ற அறிவித்தார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திமுக அரசின் ஒவ்வொரு முடிவும், ஒவ்வொரு செயலும் மக்கள் நலனை மையமாகக் கொண்டதாகவு, அனைத்து குடிமக்களுக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டதாகவுமே உள்ளது என்பதற்கு ‘நாவலூர் சுங்க கட்டணம் ரத்து என்ற அறிவிப்பு’ இன்னொரு உதாரணமாக திகழ்கிறது.

Exit mobile version