தமிழகம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 356 மாணவர்களின் சட்டப்படிப்பு கனவு நனவாகும் விதமாக, அவர்கள் தேசிய அளவிலான பொதுச் சட்ட நுழைவுத் தேர்வு (CLAT) மூலம் முதல் நிலை கவுன்சிலிங்கிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களின் இந்த வெற்றிக்கு ‘நான் முதல்வன்’ திட்டம் வெகுவாக கைகொடுத்திருக்கும் நிலையில், அரசின் ஆதரவும் அரவணைப்பும் இருந்தால், கல்விக்கான கதவுகள் அனைவருக்கும் திறக்கும் என்பதற்கான ஒரு முன்னுதாரணத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பொதுவாக 12-ம் வகுப்பை முடிக்கும் பெரும்பாலான மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடையே, அடுத்து படித்து வேலைக்குச் செல்லக்கூடிய படிப்பு என்றால் பொறியியல், மருத்துவ படிப்பு என்ற எண்ணமே மேலோங்கி உள்ளது. ஆனால், இந்த இரண்டு படிப்புகளையும் தாண்டி பல்துறை சார் படிப்புகளைப் பற்றி மாணவர்களும், பெற்றோர்களும் அறிந்து வைத்திருக்க வேண்டும்; தமிழ்நாட்டு மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் ‘நான் முதல்வன்’ திட்டம்.
வழிகாட்டும்‘நான் முதல்வன்’ திட்டம்
தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களை, படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கான திறனை மேம்படுத்துவது மற்றும் வழிகாட்டுதலை நோக்கமாக கொண்டு தான், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த வருடம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் படி கீழ், ஆண்டுக்குப் பத்து லட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குவதோடு, அடுத்தடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்றும் வழிகாட்டப்படும். மேலும், சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும், நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு Coding, Robotics போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த சாதனையாளர்களைக் கொண்டு கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு, அதன்படியே பல்துறை சார் படிப்புகளுக்கான வழிகாட்டலும் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
CLAT தேர்வுக்கு பயிற்சி
அந்த வகையில், தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான பொதுச் சட்ட நுழைவுத் தேர்வுக்கு (CLAT)விண்ணப்பிக்க, அவர்களுக்கான தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தியிருந்தது. விண்ணப்பக் கட்டணம் ரூ. 4,000 என்பதாலும், பல அரசுப் பள்ளி மாணவர்களால் அதைச் செலுத்த முடியாது என்பதாலும், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் சுமார் 1 கோடியே 30 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கியது.
இதனைத் தொடர்ந்து 386 மாணவர்கள் தேர்வில் ஆர்வம் காட்டி அதில் பதிவு செய்திருந்தனர். இதனையடுத்து அவர்களுக்காக பிரத்யேகமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும், இந்த CLAT தேர்வின் முந்தைய வினாத்தாள்களும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ‘நான் முதல்வன்’ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. மேலும் பயிலரங்கம் உள்ளிட்ட பிற அம்சங்களிலும் கவனம் செலுத்தப்பட்டது. ஆன்லைன் பயிற்சியுடன், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து, ஆசிரியர்கள் அவர்களுக்கு ஆஃப்லைனிலும் கற்பித்தார்கள்.
வெற்றி பெற்ற 356 மாணவர்கள்
இதன் பயனாக, 2024 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக கடந்த 3 ஆம் தேதியன்று நாடு முழுவதும் நடைபெற்ற CLAT நுழைவுத்தேர்வில்
356 மாணவர்கள் வெற்றி பெற்று முதல் நிலை கவுன்சிலிங்கிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இம்மாணவர்களின் சட்டப்படிப்பு கனவு நனவாகப்போகிறது.
கல்வி என்பது சமூக மாற்றத்திற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாக உள்ள நிலையில், அது அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருக்கும்போது, அது எத்தகைய நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கான உதாரணம் தான் ‘நான் முதல்வன்’ திட்டமும் இந்த மாணவர்களின் வெற்றியும்..!