நாட்காட்டி ஓவியங்களாகும் சங்க இலக்கியம்… நாடு கடக்கும் தமிழின் பெருமை!
செழுமையான கலாச்சார பாரம்பரியம் கொண்ட சங்ககால தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு, வீரம், இலக்கிய பெருமைகளை மற்ற மொழியினர் தெரிந்துகொள்கிறார்களோ இல்லையோ… இன்றைய இளைய தமிழ்ச் சமூகத்தினர் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். பாடங்களைத் தாண்டிய புத்தக வாசிப்பு என்பது நமது இளைய தலைமுறையினரிடத்தில் குறைந்து வரும் இந்த தருணத்தில், அவற்றையெல்லாம் அவர்களிடம் கடத்தினால்தான், அவை அடுத்தடுத்த தலைமுறையினரிடத்திலும் கொண்டு செல்லப்படும்.
இதற்காக அரசு, தன்னார்வலர்கள், அமைப்புகள், இலக்கிய பேரவைகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஆர்வமுடைய தனிநபர்கள் தரப்பில் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. மேடை நாடகங்கள், இலக்கிய கூட்டங்கள், புத்தக காட்சிகளெல்லாம் அதற்கான சில முயற்சிகள்தான்.
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் முன்னெடுப்பு
அவ்வளவு ஏன்… சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், அந்தந்த மாநகராட்சிகளின் சார்பில், பொது சுவர்கள் அலங்கோலமாவதைத் தடுக்கும் நோக்கத்துடன் அவற்றில் கண்ணைக் கவரும் பல்வேறு வகையான ஓவியங்கள் தீட்டப்பட்டன. இவற்றில் பெரும்பாலும் சங்ககால தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியல், பண்பாடு, இலக்கியங்களைக் கொண்டதாகவே காட்சி அளித்திருப்பதை நம்மில் பலரும் பார்த்திருக்க முடியும். இதுவும் அத்தகையதொரு முயற்சிதான்.
அந்த வகையில், உலகெங்கும் இணையம் வழியாகத் தமிழ்க் கற்பித்தலை முதன்மை நோக்கமாகக் கொண்டு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ்ப் பண்பாடு, இலக்கண இலக்கியங்கள் சார்ந்த முன்னெடுப்புகளைச் செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சங்ககால மக்களின் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டும் சங்க இலக்கியப் பாடல்களை ஓவியங்களாக வரைந்து, விளக்கவுரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் நாட்காட்டியாக ( calendar)வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
இப்பணிக்குத் தேவைப்படும் ஓவியங்களை “சங்க இலக்கிய ஓவியப் போட்டி” மூலம் திரட்ட தமிழ் இணையக் கல்விக்கழகம் திட்டமிட்டுள்ளது. இப்போட்டியில், 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களும், அனைத்து கல்லூரி மாணவர்களும், ஓவியர்களும் ‘ www.tamilvu.org’ என்ற இணைய தளத்தில் பதிவு செய்து பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்ககால தமிழ்ச் சமூகத்துக்கான நன்றிக்கடன்
செழுமையான கலாச்சார பாரம்பரியம் கொண்ட சங்ககால தமிழ்ச் சமூகம், இலக்கியப் பாடல்கள் மூலம் தனது அனுபவங்களையும் மரபுகளையும் வெளிப்படுத்தும் தனித்துவமான முறையைக் கொண்டிருந்தது. இந்த சங்க இலக்கிய பாடல்கள் பெரும்பாலும் சங்ககால மக்களின் அன்றாட வாழ்க்கை, சடங்குகள் மற்றும் அவர்களது நம்பிக்கைகளை ஆராயவும் பேசவும் செய்கின்றன.
இந்தப் பாடல்களை நாட்காட்டியில் ஓவியங்களாக பேச வைப்பதன் மூலம் அவை லட்சக்கணக்கானோரைச் சென்றடையும். இதன் மூலம், சங்ககால தமிழ்ச் சமூகம் எத்தகைய நுணுக்கமான கலாச்சாரங்களைக் கொண்டிருந்தது என்பதைப் பிற மொழியினரும் நாட்டவரும் தெரிந்து, புரிந்து கொள்ள முடியும்.
மேலும், சங்க இலக்கிய பாடல்களுக்கான விளக்கங்கள் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகளைச் சேர்ப்பது கல்வி நோக்கத்தின் அடிப்படையிலும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இந்த நடவடிக்கை உண்மையிலேயே பாராட்டுக்குரியதாகும்.
ஓவியப் போட்டியில் பங்கேற்பது எப்படி?
இப்போட்டில் பங்கேற்க விரும்புவர்கள், பட்டியலிடப்பட்ட பாடல்களுள் தங்களுக்குப் பிடித்தமான பாடலைத் தேர்வு செய்து ஓவியமாக வரைந்து, 10 நாட்களுக்குள் ‘www.tamilvu.org’ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அஞ்சலில் அனுப்ப வேண்டும். இதில் ஒரு பாடலை 5 பேர் மட்டுமே தேர்வு செய்ய முடியும். இந்தப் போட்டிக்கான இணைப்பு இம்மாதம் 27 ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்.
முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2 ஆவது பரிசாக ரூ.15 ஆயிரம், 3 ஆவது பரிசாக ரூ.9 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டிக்கான விதிமுறைகள் www.tamilvu.org என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு 044 – 2220 9400, 86678 22210 ஆகிய தொலைபேசி எண்களிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.