Amazing Tamilnadu – Tamil News Updates

மோடியின் தமிழக பிரசாரமும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுப்பும் கேள்விகளும்!

ரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் பாஜக 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 20 தொகுதிகளில், பாமக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில், இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் எப்படியாவது ஒரு சில தொகுதிகளிலாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் பாஜக தீவிர முனைப்புடன் உள்ளது. இதனை கருத்தில்கொண்டு பிரதமர் மோடி, சமீப காலமாக அடிக்கடி தமிழகத்திற்கு வந்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

அந்த வகையில், இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்த மோடி, நேற்று மாலை சென்னையில் ‘ரோடு ஷோ’ நடத்தி பாஜக-வுக்கு வாக்கு சேகரித்தார். இதனைத் தொடர்ந்து நேற்றிரவு கவர்னர் மாளிகையில் தங்கிய அவர், இன்று வேலூரிலும் கோவையிலும் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த இரு நாள் பயணத்திற்குப் பின்னர், அவர் மீண்டும் தமிழகத்தில் இறுதிகட்ட பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த நிலையில் தான், “தேர்தல் சீசனுக்கு மட்டும் மோடி வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா?” எனக் கடுமையாக விமர்சித்துள்ள முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், இது தொடர்பாக அவருக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.

மதுரையில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் மற்றும் சிவகங்கை வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு வாக்கு கோரி உரையாற்றுகையிலேயே அவர், மோடியின் தமிழக வருகை தொடர்பாக சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.

‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் எப்படிப்பட்டவராக இருப்பார்?

இது தொடர்பாக அவர் பேசுகையில், “நீங்கள் அளிக்கும் வாக்கு உங்கள் தொகுதிக்கான எம்.பி.யைத் தேர்வு செய்ய மட்டும் இல்லை. இந்தியாவின் அடுத்த பிரதமராக ஒரு ஜனநாயகவாதி வர அடித்தளம் அமைக்கப் போகிறது! வரப்போகும் பிரதமர் எப்படிப்பட்டவராக இருப்பார்?

நீட் தேர்விலிருந்து, தமிழ்நாட்டிற்கு விலக்களிக்கும் பிரதமராக அவர் இருப்பார்!

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில், நாளொன்றுக்கு 400 ரூபாய் கொடுக்கும் பிரதமராக இருப்பார்!

விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கொடுக்கும் பிரதமராக இருப்பார்!

சமூகநீதி மேல் உண்மையான அக்கறையுடன், இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 விழுக்காட்டை உயர்த்தும் பிரதமராக இருப்பார்!

SC, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை இரண்டு மடங்கு ஆக்கும் பிரதமராக இருப்பார்!

மொத்தத்தில், இந்திய ஜனநாயகத்தை, அரசியல் சட்டத்தை – மதச்சார்பின்மையை – சமூகநீதியை மதிக்கும் பிரதமராக இருப்பார்! மிகவும் முக்கியமாக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உற்ற துணையாகவும் – தமிழ் மக்கள் மீது உண்மையான பாசம் கொண்டவராக, இந்தியா கூட்டணி பிரதமர் ஆட்சி செய்வார்! இன்னும் ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால், இப்போது இருக்கும் பிரதமர் மோடி போன்று, நிச்சயம் இருக்க மாட்டார்!

மோடிக்கு அடுக்கடுக்கான கேள்விகள்

கடந்த பத்தாண்டு காலமாக, தமிழ்நாட்டு மக்களை மதித்து தமிழ்நாட்டிற்கு என்று எந்த சிறப்புத் திட்டத்தையும் செய்து கொடுக்காத பிரதமர் மோடி, இப்போது வாக்கு கேட்டுத் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். தமிழ்நாட்டிற்குச் சிறப்புத் திட்டங்கள் செய்து கொடுத்துவிட்டு வந்திருக்கிறாரா? இல்லை! இங்கு பக்கத்து மாவட்டங்கள் வெள்ளத்தில் தவித்தார்களே… அவர்களுக்கு உதவி செய்துவிட்டு வந்திருக்கிறாரா? இல்லை! எந்த முகத்துடன், மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார்? இவர் தமிழ்நாட்டை மட்டும் இப்படி வஞ்சிக்கவில்லை. எதிர்க்கட்சி ஆளும் அனைத்து மாநிலங்களையும் வஞ்சிக்கிறார்!

தமிழ்நாட்டிற்கு வந்தால், ‘வணக்கம்! எனக்கு இட்லியும் – பொங்கலும் பிடிக்கும்; தமிழ் பிடிக்கும்; திருக்குறள் பிடிக்கும்; ஓட்டு போடுங்கள்’ என்று கேட்கும் பிரதமரை, நாங்கள் கேட்கிறோம்!

தமிழ் பிடிக்கும் எனச் சொல்லிவிட்டு, தமிழ் வளர்ச்சிக்கு 74 கோடி ரூபாயும் – சமஸ்கிருதத்திற்கு 1488 கோடி ரூபாய் ஏன் என்று கேட்கிறோம்! தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது. தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியை விட்டு விதண்டாவாதம் பேச வைக்கிறார்! தமிழின் சிறப்புகளைச் சொன்ன, கால்டுவெல்லையும் ஜி.யு.போப்பையும் ஆளுநரை வைத்து இழிவுபடுத்துகிறார்கள்! அதையாவது கண்டித்தீர்களா? திருவள்ளுவருக்கு ஏன் காவிச்சாயம் பூசுகிறீர்கள் எனக் கேட்கிறோம். இப்படி அத்தனை தமிழ் விரோத வேலையும் செய்துவிட்டு, தயவுசெய்து வாயால் வடை மட்டும் சுடாதீர்கள் என்று கேட்கிறோம்.

பாஜக-வுக்கு அளிக்கும் வாக்கு, தமிழ்நாட்டு எதிரிகளுக்கு அளிக்கும் வாக்கு!

அதிமுக-வுக்கு அளிக்கும் வாக்கு, தமிழ்நாட்டுத் துரோகிகளுக்கு அளிக்கும் வாக்கு!

எனவே, தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக – தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அதிமுக ஆகிய தமிழர் விரோதிகளை ஒருசேர வீழ்த்துங்கள்.

அதற்கு, மதுரை நாடாளுமன்றத் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் தோழர் சு.வெங்கடேசனுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திலும் – சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்கு கை சின்னத்திலும் உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version