‘வானொலி’ க்கு ‘ஆகாசவாணி’ … இதுவா மோடியின் தமிழ் பாசம்..? – வெளுத்து வாங்கும் மு.க. ஸ்டாலின்!

மிழ்நாட்டிற்கு வரும்போது மட்டுமல்ல; வெளிநாட்டில் பேசினாலும், டெல்லியில் பேசினாலும் திருக்குறள் அல்லது ஏதாவது ஒரு பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்து பாடல் வரிகளை எடுத்து மேற்கோள் காட்டுவது, தமிழைப் போன்ற மொழி உண்டா என்ற ரீதியில் உருகுவதும் பிரதமர் மோடிக்கு வழக்கமான ஒன்றுதான். அதே சமயம், இந்தி, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு தாராளமாக நிதி ஒதுக்கும் மோடி அரசு, தமிழ் மொழிக்கு கிள்ளி கூட கொடுப்பதில்லை என்பதுதான் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள்.

தமிழ் குறித்து மோடி நீலி கண்ணீர்

அந்த வகையில், தமிழ் மொழி குறித்து பிரதமர் மோடி மீண்டும் உருகிப் பேசி இருப்பதன் பின்னணியில் இருப்பதன் முரண்பாட்டை தோலுரித்துக் காட்டி உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ் குறித்து மோடி நீலி கண்ணீர் வடிப்பதாக சாடி உள்ளார்.

‘எனது பூத் வலிமையான பூத்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு பாஜக வாக்குச்சாவடி முகவர்களுடன் ‘நமோ செயலி’ வாயிலாக பிரதமர் மோடி, நேற்று கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், தொண்டர்களுடன் கலந்துரையாடும்போது பூத் கமிட்டி அளவில் எண்ணங்களை அறிய முடிவதாகவும், அதே சமயம் தமிழில் பேச முடியவில்லையே என்று வருத்தப்படுவதாகக் கூறிய பிரதமர், தமிழின் பெருமைகளை உரக்கச் சொல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில், மோடியின் இந்த பேச்சை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர், இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.

வானொலி’ க்கு ‘ஆகாசவாணி’ பெயர் ஏன்?

“நேற்று மாலைச் செய்தி:

தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி!

நேற்று காலைச் செய்தி:

அழகிய தமிழ்ச்சொல் ‘வானொலி’ இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும்.

மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்? ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்? கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?

“எங்கும் இந்தி! எதிலும் இந்தி”

பிரதமர் மோடி அவர்களே.., கருப்புப் பணம் மீட்பு, மீனவர்கள் பாதுகாப்பு, 2 கோடி வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு போல் காற்றில் கரைந்த உங்கள் கேரண்டிகளில் ஒன்றுதான், அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு!

விமானங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை. “எங்கும் இந்தி! எதிலும் இந்தி!” என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை! தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்!” என மு.க. ஸ்டாலின் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

二、新北市:healthy new taipei 社群. Raven revealed on the masked singer tv grapevine. 자동차 생활 이야기.