நாடாளுமன்ற தேர்தல் 2024: ‘மீம்’ கிரியேட்டர்களுக்கு ‘செம’ கிராக்கி!
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி, பிரசாரமும் சூடு பிடித்துவிட்ட நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக வலைதளங்களை தங்களது முக்கிய பிரசார மேடையாக மாற்றிக்கொண்டுள்ளன. வாக்காளர்களைக் குறிவைத்து தெரிவிக்கும் கருத்துகள், ஒரு சில நிமிடங்களிலேயே பல லட்சம் பேரை சென்றடைந்துவிடும் என்பதால், சமூக வலைதளங்கள் இன்று அரசியல் கட்சிகளின் முக்கிய பிரசார வடிவமாக மாறிவிட்டன.
கட்சிகளுக்கு கை கொடுக்கும் சமூக வலைதளங்கள்
இன்றைய தினம், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏறக்குறைய அனைத்துக் கட்சிகளுமே தங்களுக்கென சொந்தமாக ‘ஐடி விங்’ (IT wing) எனப்படும் தகவல் தொழில்நுட்ப அணிகளை வைத்துள்ளன. இந்த அணியின் மூலமாகத்தான், ஒவ்வொரு கட்சியும் தங்களது தலைவர்களின் பேச்சுகள், அறிவிப்புகள், எதிர்க்கட்சிகள் மீதான தாக்குதல்கள் போன்றவற்றை சமூக வலைதளங்களில் பரப்புரை செய்கின்றன. அதிலும், சொந்த கட்சியின் செயல்பாடுகள் சார்ந்த பரப்புரைகள் ஒருபுறம் இருந்தாலும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எசகுபிசகாக ஏதாவது வாய்தவறி பேசினாலோ, பொது இடங்களில் கோபப்பட்டோ அல்லது கேலிக்குள்ளாகும் வகையில் நடந்துகொண்டாலோ, அதுதான் பெரும் ‘அட்டாக்’ ( attack) ஆயுதமாக மாறிவிடுகின்றது.
வளைத்துப்போடப்படும் ‘மீம்’ கிரியேட்டர்கள்
இதில் ‘அட்டாக்’ கை விட கேலி, கிண்டல் செய்து சம்பந்தப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரை ட்ரோல் (troll) செய்து, சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங் செய்து விடுகின்றனர். அதிலும், அப்படியான கேலி, கிண்டல் அடங்கிய ‘மீம்’கள் சமூக வலைதளங்களில் வெகுவாக ரசிக்கப்பட்டு, வரவேற்புக்குள்ளாகின்றன. குறிப்பாக பழைய கவுண்டமணி – செந்தில் பட காமெடி காட்சிகள் தொடங்கி வடிவேல், யோகி பாபு வரையிலான நகைச்சுவை நடிகர்களின் காட்சிகள் வரை இத்தகைய ‘மீம்’களில் பயன்படுத்தப்படுகின்றன. சமயங்களில் சொல்ல வரும் விஷயங்களுக்கு (content) ஏற்ப, மற்ற நடிகர், நடிகைகளின் பட காட்சிகளும் ‘மீம்’களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், அரசியல் கட்சிகளுக்கு ‘மீம்’கள் வெகுவாகவே கை கொடுக்கின்றன.
இந்த நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், அரசியல் கட்சிகளுக்கு ‘மீம்’களின் தேவை மிக அதிகமாக உள்ளது. அந்தந்த கட்சிகளின் ‘ஐடி விங்’ குகளில் பணியாற்றும் நபர்கள் இதற்கு போதுமானதாக இல்லை என்பதால், ஒவ்வொரு கட்சிகளும் சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ள அல்லது நெட்டிசன்களிடையே வெகுவாக ரசிக்கப்படும் ‘மீம்’ கிரியேட்டர்களைப் (meme creators) போட்டிப்போட்டு, தங்களுக்காக வளைத்துப் போடுகின்றன.
எதிர்க்கட்சிகளைத் தாக்கி ‘மீம்’ போடுவதற்காக மட்டுமல்லாது, தங்களை கேலி செய்தோ அல்லது விமர்சித்தோ வெளியிடப்படும் ‘மீம்’களுக்கும் பதிலடி கொடுத்து ட்ரோல் செய்ய ட்ரோலர்கள் தேவைப்படுகிறார்கள் என்பதால் தான், இவர்களை தற்காலிகமாக பணிக்கு அமர்த்தி உள்ளன.
இவர்கள் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ வீட்டிலிருந்தபடியே, தங்களை பணிக்கு அமர்த்தி உள்ள கட்சிகளின் தேவைகளுக்கு ஏற்ப, கிண்டலும் கேலியுமாக ‘மீம்’களை உருவாக்கி அனுப்புகின்றனர். அப்படி அனுப்பப்படும் ‘மீம்’கள், அந்தந்த கட்சிகளின் ஐடி விங் தலைமையால் போடலாமா வேண்டாமா என முடிவு செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகின்றன. சில கட்சிகள், தங்களது ஐடி விங் பணியாளர்களுக்காக தேர்தலையொட்டி சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தின. இந்த பயிற்சி வகுப்புகளில், தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட இந்த ‘மீம்’ கிரியேட்டர்களும் பங்கேற்க வைக்கப்பட்டனர். அங்கே அவர்கள், அந்த கட்சியின் கொள்கைகள், நோக்கங்கள் போன்றவற்றை உள்வாங்கிக் கொண்டு, தங்களது படைப்புகளை மேலும் மெருகேற்றும் வகையிலான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
வழி நடத்தும் ஐடி விங்
“நாங்கள் கடந்த காலங்களில் அரசியல் மீம்ஸ் செய்துள்ளோம். ஆனால் தேர்தலுக்காக பணியாற்றுவது ஒரு புதிய அனுபவமாக உள்ளது. ஏனெனில் சமீபத்திய அரசியல் முன்னேற்றங்கள், வேட்பாளர்களின் விவரங்கள் மற்றும் அவர்களின் தேர்தல் அறிக்கையுடன் நாங்கள் அப்டேட்டாக இருக்க வேண்டும். முன்னெப்போதையும் விடவ் ஒவ்வொரு அரசியல் நிகழ்வையும் தினமும் தவறாமல் உன்னிப்பாக கவனித்து வர வேண்டியது உள்ளது. ஆனாலும், இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது”எனக் கூறுகிறார் அரசியல் கட்சி ஒன்றின் ஐடி விங் நடத்திய பயிற்சி கூட்டத்தில் பங்கேற்ற பிரபலமான ‘மீம்’ கிரியேட்டர் ஒருவர்.
அரசியல் தலைவர்களின் பேச்சுகள்தான் பெரும்பாலும் மீம்களுக்கு வழிவகுக்கும் என்று கூறும் ‘மீம்’ கிரியேட்டர்கள், அதற்கான யோசனை தோன்றிய உடனேயே, அதை உடனே உருவாக்கத் தொடங்கிவிடுவோம் என்கிறார்கள். அதிக எண்ணிக்கையிலான மீம்ஸ் படைப்பாளிகள், பெரும்பாலும் அலுவலகத்தை விட தங்களது வீட்டில் இருந்தே வேலை செய்கிறார்கள். தமிழகத்தின் முக்கிய கட்சி ஒன்றின் ஐடி விங் பணியாளர்களில் 99% பேர் அந்த கட்சியின் பால் ஈடுபாடு கொண்ட தன்னார்வலர்கள்தான் . “படைப்பை உருவாக்க மட்டுமே ஆட்களைப் பயன்படுத்துகிறோம். அவற்றை சமூக ஊடகங்களில் பரப்புவது எங்கள் ஐடி விங் பிரிவால் செய்யப்படுகிறது” என்கிறார் அக்கட்சியின் ஐடி விங் செயலாளர்.
இது ஒருபுறம் இருக்க, தனியார் மீம்ஸ் கிரியேட்டர்களை வேலைக்கு அமர்த்துவது மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களின் சேவையையும் அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த அரசியல் மீம்ஸ் விளையாட்டில் ‘டைமிங்’ தான் மிகவும் முக்கியமானது. அதை எந்த கட்சி சரியாக பயன்படுத்துகிறதோ, அதன் படைப்புகள் தான் பேசப்படும்!