Amazing Tamilnadu – Tamil News Updates

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க என்ன செய்ய வேண்டும்?

மிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதியன்று நடைபெற உள்ள நிலையில், இத்தேர்தலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தபடியே தபால் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றே தொடங்கிவிட்ட நிலையில், வேட்பாளர் பட்டியலையும் ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை அடையும் வகையில் அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள்

அந்த வகையில், வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க முடியாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்து வருகிறது. அவர்கள், 12 D எனும் படிவம் மூலம் வாக்களிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை வழங்கும் பணியினை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தொடங்கி வைத்துள்ளனர்.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி கூறுகையில், “அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் கீழ் தேர்தல் ஆணையம் இவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில், இவர்கள் சம்மதம் தெரிவிக்கும் விருப்பம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, அதனைப் பெற்று, தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்பு வீடு தேடி சென்று அவர்கள் அதில் வாக்குகளைப் பதிவு செய்த பின், மீண்டும் அலுவலர்கள் அதனைப் பெற்று வருவர்.

இதில் அவர்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே இந்த முறை பின்பற்றப்படும். அவர்கள், ‘நாங்கள் நேரடியாக வாக்குப்பதிவு மையத்துக்கு செல்வோம்’ என்றால், தாராளமாக நேரில் சென்று வாக்களிக்கலாம்” எனத் தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோருக்கும் தபால் வாக்கு

இதனிடையே தேர்தல் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபடும் பத்திரிகையாளர்கள், சிவில் விமான போக்குவரத்து, மெட்ரோ ரயிலில் பணி செய்யும் ஊழியர்கள், பிஎஸ்என்எல் உள்ளிட்ட அத்தியாவசிய பணியில் உள்ளவர்களுக்கும் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அந்தந்த துறையில் உள்ள பணியாளர்களை ஒருங்கிணைக்க ஒரு அதிகாரியை நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, அத்தியாவசிய பணியில் இருக்கும் ஊழியர்கள், 12 டி விண்ணப்பத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் பெற்று, தபால் வாக்குகளைச் செலுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version