Amazing Tamilnadu – Tamil News Updates

“இலங்கை அரசு நடத்தும் அறிவிக்கப்படாத போரும் மோடியின் மவுனமும்!” – தேர்தல் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் காட்டம்

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், பெரும்பாலான வேட்பாளர்கள் நேற்றே தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் வேகமெடுத்துள்ளது. திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் இராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி வேட்பாளர் நவாஸ் கனி ஆகியோரை ஆதரித்துப் பேசினார்.

இலங்கையின் அறிவிக்கப்படாத போர்

அப்போது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் அடிக்கடி தாக்கப்படுவதையும் கைது செய்யப்படுவதையும் தடுக்காமல் பிரதமர் மோடி வேடிக்கை பார்ப்பதாக கடுமையாக குற்றம் சாட்டிய மு.க. ஸ்டாலின், இலங்கையை உங்களால் கண்டிக்க முடியாதா? நீங்கள் விஸ்வகுருவா? இல்லை மவுனகுருவா? எனக் காட்டமாக கேள்வி எழுப்பினார்.

எட்டயபுர கூட்டம்

இது குறித்து அவர் பேசுகையில், “தேர்தல் நேரத்தில்தான் மோடி அவர்களைத் தமிழ்நாட்டுப் பக்கம் பார்க்க முடியும். ‘நான் ஆட்சிக்கு வந்தால், ஒரு மீனவர்கூட தாக்கப்பட மாட்டார் – கைது செய்யப்பட மாட்டார்’ என்று மார்தட்டினாரே மோடி? ஆனால், வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, இராமநாதபுரம் – தூத்துக்குடி என்று பல்வேறு மாவட்ட மீனவர்களுக்குச் சிறைத் தண்டனை, படகுகள் பறிமுதல், படகுகள் நாட்டுடைமை, கடும் அபராதம், மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது என்று, தமிழ்நாட்டு மீனவர்கள்மீது இலங்கைக் கடற்படை அறிவிக்கப்படாத ஒரு போரை நடத்துவது மோடி ஆட்சியில்தான்!

மோடி தடுக்காதது ஏன்?’

பிரதமர் மோடி அவர்களே… இதையெல்லாம் வேடிக்கை பார்ப்பது யார்? நீங்கள்தானே! தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்களைத் தட்டிக் கேட்க நீங்கள் தயங்குவது ஏன்? பாதிக்கப்படுவது தமிழ்நாட்டு மீனவர்கள் என்பதாலா? கதறி அழுவது தமிழ்நாட்டுப் பெண்கள் என்பதாலா? குஜராத் மீனவர்கள்மீது பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தினால், சிறையில் அடைத்தால், படகுகளை நாட்டுடைமை ஆக்கினால் இப்படிதான் அமைதியாக இருப்பீர்களா? நீங்கள்தான் பெரிய விஸ்வகுருவாயிற்றே! இலங்கையை உங்களால் கண்டிக்க முடியாதா? நீங்கள் விஸ்வகுருவா? இல்லை மவுனகுருவா? பதில் கூறுங்கள் மாண்புமிகு மோடி அவர்களே… பதில் கூறுங்கள் என்று நான் மட்டும் கேட்கவில்லை… தூத்துக்குடி – இராமேஸ்வரம் மீனவர்கள் மட்டும் கேட்கவில்லை… ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மீனவர்களும் கேட்கிறார்கள்!

2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, ‘தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் துன்புறுத்தப்படுவதும் – கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவதும் தினசரி நடக்கிறது. இதற்குக் காங்கிரஸ் அரசின் பலவீனம்தான் காரணம்’ என்று இராமநாதபுரத்தில் வைத்துதான் நரேந்திர மோடி கூறினார்.

மீனவர்கள் பாதுகாப்பாக வாழவேண்டும் என்றால், இந்தியாவில் வலுவான ஒன்றிய அரசு அமைய வேண்டும் என்று கூறினார். மீனவர்கள் வாழ்வு சிறக்க சபதம் எடுப்பதாகக் கன்னியாகுமரியில் கூறினார். “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர்கூட உயிரிழக்க மாட்டார்கள்” என்று கூறினார். தங்கச்சிமடம் மீனவர் பிரிட்டோ கொலை செய்யப்பட்டாரே, அது யார் ஆட்சியில்? மீனவர்கள்மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதே, அப்போது நீங்கள்தானே பிரதமர்?

தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் அராஜகங்கள், கைதுகள் அளவில்லாமல் போனது பா.ஜ.க. ஆட்சியில்தானே! இல்லையென்று ஆதாரப்பூர்வமாக மறுக்க முடியுமா? விஸ்வகுரு என்று விளம்பரப்படுத்திக் கொள்ளும் நீங்கள்… தமிழ்நாட்டு மீனவர்களைக் காப்பாற்ற ஒரு துரும்பையும் எடுத்துப் போடவில்லையே? எந்த முகத்தை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டு மீனவர்களிடம் ஓட்டு கேட்டு வருகிறீர்கள்?” எனக் காட்டமாக விமர்சித்தார்.

மக்களுக்கு வேண்டுகோள்

தொடர்ந்து, பொய்களை மட்டுமே பரிசாகத் தரும் பிரதமர் மோடிக்கு தூத்துக்குடி, இராமநாதபுர மக்கள் தோல்வியைப் பரிசு தயாராக வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதற்கு, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளர் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்திலும், இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனிக்கு ஏணி சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version