Amazing Tamilnadu – Tamil News Updates

நாடாளுமன்ற தேர்தலும் ‘திராவிட மாடலின்’ தேவையும்!

ந்த நாடாளுமன்ற தேர்தலில், நாடு தழுவிய அளவில் கவனம் ஈர்த்த ஒரு விஷயம் உண்டென்றால் அது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைதான். தமிழ்நாட்டில் தனது ஆட்சியை எப்போதுமே ‘திராவிட மாடல் அரசு’ என பெருமையுடன் குறிப்பிடும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டின் நலனை முன்வைத்து மத்திய அரசிடம் என்னென்ன கோரிக்கைகளை முன்வைத்து வந்தாரோ, அவற்றையெல்லாம் தனது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி இடம்பெறச் செய்திருப்பது ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

‘திராவிட மாடலை’ முன்வைத்த காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

இன்னொரு பக்கம் இந்த தேர்தல் அறிக்கை பாஜக-வுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் அந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள

“நீட் தேர்வு கட்டாயமில்லை. ஜி.எஸ்.டி. சட்டம் ரத்து செய்யப்படும். திட்டக்குழு மீண்டும் கொண்டு வரப்படும்.பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற ஆய்வு செய்யப்படும். செஸ் வரி சட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். விவசாய இடுபொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி இருக்காது. ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். சாதி வாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும். ஒரே நாடு – ஒரே தேர்தல் முறை கொண்டு வரப்படாது. பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோருக்கான காலிப் பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும். புதுச்சேரிக்கும், ஜம்மு காஷ்மீருக்கும் மாநில அந்தஸ்து தரப்படும்.100 நாள் வேலைத் திட்டத்துக்கான ஊதியம் 400 ரூபாயாக உயர்த்தப்படும். மாணவர் கல்விக் கடன் ரத்து செய்யப்படும்” என்பது போன்ற வாக்குறுதிகள் எல்லாம் பாஜக-வின் அடித்தளத்தையே ஆட்டம் காணம் செய்யக்கூடிய அம்சங்கள்.

இந்த நிலையில், திராவிட மாடல் ஆட்சியின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதன் மூலமாக இந்தியா முழுமைக்குமான திராவிட மாடல் ஆட்சியை அமைப்பதற்கான வரைபடமாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளதாக திமுக கூறி வருகிறது. திமுக-வின் இந்த பெருமிதம் மற்றும் உரிமை கோரல் நியாயமானதுதானா, இந்தியாவின் பிற மாநிலங்களும் ஏன் ‘திராவிட மாடலை’ பின்பற்ற வேண்டும் என்பதற்கான காரணங்களையும் பின்னணியையும் பார்க்கலாம்…

திராவிட மாடல் என்றால் என்ன?

எதிர்க்கட்சிகளிடையேயான ஒற்றுமை என்பது உண்மையிலேயே ஒரு வலுவான அரசியல் சக்தி தான்; ஆனால், அது இயற்கையாகவே ஒரு வலுவான தேர்தல் சக்தியாக மாறாது. எதிர்க்கட்சி ஒரு வலுவான தேர்தல் சக்தியாக மாற, அதற்கு திடமான யோசனையும் சித்தாந்தமும் இருக்க வேண்டும். அந்த சித்தாந்தத்தை ‘திராவிட மாடல்’ மூலம் வழங்க முடியும். அதே சமயம், ‘திராவிட மாடல்’ என்பதை ஒரு பரம்பரை அல்லது இனத்தைக் குறிக்கும் சொல் என சிலர் குழப்பமாக பார்க்கலாம் அல்லது அப்படியானதொரு வாதத்தை முன்வைக்கலாம். ஆனால் இது உண்மையில் ஒரு அரசியல் தத்துவத்தை அடையாளப்படுத்துகிறது – எல்லோருக்கும் எல்லாம், அனைவருக்கும் சமமான வளர்ச்சி, யாரும் பின்தங்கியிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது எனலாம்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு மதராஸ் மாகாணத்தை ஆண்ட நீதிக்கட்சியின் ஆட்சியில் இந்த மாதிரியான ஆட்சிமுறையைக் காணலாம். இந்த தத்துவம்தான் தமிழகத்தை உள்ளடக்கியதாக உள்ளது. சமூக நீதிக்காக பல்வேறு சாதிகள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களை ஒருங்கிணைப்பதில் திராவிடக் கட்சிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்ததால், சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களையும் உயர்த்த முடிந்திருக்கிறது.

“அனைத்து மக்களுக்குமான நலத்திட்டங்களில் கவனம் செலுத்தாமல், செல்வந்தர்களே மேலும் மேலும் வளரும் வகையான பொருளாதார கொள்கை, சமூக அடுக்கில் ஏற்றத்தாழ்வையும் வருமான சமத்துவமின்மையையும் அதிகரிக்கச் செய்யும். எனவே உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் இலக்கு நிர்ணயித்தும், உலகளாவிய தலையீடுகளைப் பயன்படுத்துவதன் மூலமும், உறுதியான செயல் திட்டங்கள் மூலமாகவும், அனைத்து சமூகப் பின்னணியில் உள்ள மக்களுக்கும் சமமான வாய்ப்பை வழங்க முடியும் என்பதே ‘திராவிட மாடல்’ வலியுறுத்தும் கொள்கை” எனக் கூறும் விமர்சகர்கள், அந்த வகையில் கல்வி, சுகாதாரம் மற்றும் அதிகாரத்துவம் ஆகியவற்றை ஜனநாயகமயமாக்கியதன் மூலம் தமிழ்நாட்டின் அரசு நிர்வாகம் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் பட்டப்படிப்பு சேர்க்கை விகிதம் 52 சதவிகிதமாக உள்ளது. இது உலக அளவில் போட்டிப்போடக்கூடியதாக உள்ளது. அமெரிக்காவில் கூட 37 சதவிகிதம்தான். மேலும் இது இந்திய அளவில் 27 சதவிகிதம் என்ற அளவிலேயே உள்ளது. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 69% இட ஒதுக்கீட்டின் மூலம், கிராமப்புற பின்னணியில் இருந்து வரும் மாணவர்கள் உட்பட, கிட்டத்தட்ட ஒவ்வொரு சமூகத்தினருக்கும் கல்வியை அரசு உறுதி செய்துள்ளது.

தனித்துமான தொழில் வளர்ச்சி

தமிழகத்தின் தொழில் வளர்ச்சியும் தனித்துவமானது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தைத் தொடர்ந்து இந்தியாவின் மிகவும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது. குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் தனிநபர் வருமானம் அதிகமாக இருந்தாலும், ( அதற்குக் காரணம் ஒரு சில பெரும் பணக்காரர்களின் கைகளில் அசாதாரணமாக அதிக அளவில் குவிந்துகிடக்கும் சொத்து) திராவிட மாதிரியின் மூலம், தமிழ்நாடு பன்முகத்தன்மையையும் சாதிவாரியான தொழில் உரிமைகளையும் அடைந்துள்ளது.

தமிழ்நாட்டில் நான்கு தொழில்முனைவோரில் ஒருவர் தலித் பிரிவைச் சேர்ந்தவராக உள்ளனர். மேலும், இந்தியாவில் அதிக ஓபிசி பிரிவினரை தொழில்முனைவோரைக் கொண்ட மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. இப்போது, பிரத்யேகமாக எஸ்சி/எஸ்டி தொழில்முனைவோரைக் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.50 கோடி மதிப்பிலான சிறப்பு மானியங்களை அறிவித்த இந்தியாவின் முதல் மாநிலமும் தமிழ்நாடாக உள்ளது.

பாலின சமத்துவம்

அதேபோன்று பாலின சமத்துவத்தில், இந்தியா தற்போது 146 நாடுகள் கொண்ட தரவரிசையில் 135 ஆவது இடத்தில் உள்ளது (கடந்த சில ஆண்டுகளாக தரவரிசை மோசமாகி வருகிறது). குறிப்பாக பெண்களின் பொருளாதாரப் பங்கேற்பில் ஈரான், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்குப் பின்னால் நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது. சுகாதார தரவரிசையில் உள்ள நாடுகளில் இந்தியா கடைசி இடத்தில் உள்ளது. ஆனால், இங்கும் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது. பெண் அதிகாரமளிப்பு குறியீடு (FEMDEX) மூலம் தொழிலாளர்களில் பாலின சமத்துவமின்மையை அளவிடும் McKinsey ன் தேசிய அளவிலான ஆய்வில், பாலின சமத்துவத்திற்கான இந்தியாவின் சிறந்த பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு மற்றும் கேரளா இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் பெண் தொழிலாளர் பங்கேற்பு 32% என்ற அளவில், இந்தியாவின் மற்ற பகுதிகளை விட இரு மடங்கு அதிகமாக உள்ளது. இதேபோல், தமிழ்நாட்டில் கல்லூரிகளில் சேரும் பெண்களின் மொத்த சேர்க்கை விகிதம் 49% ஆக உள்ள நிலையில், இது இந்தியாவின் மற்ற பகுதிகளில் 25% ஆக மட்டுமே உள்ளது.

இப்படி ஒவ்வொரு துறையிலும் இந்தியாவுக்கு முன் மாதிரியாகவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு வித்திடும் சமூக நீதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாகவும், வெறுப்பு நிறைந்த வலதுசாரி மதவெறிக்கு மாற்றாக செயல்படும் திராவிட மாடலின் வெற்றி, நிச்சயம் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பின்பற்றத்தக்க முன்மாதிரியான மாடல்தான் என்பதே விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

Exit mobile version