Amazing Tamilnadu – Tamil News Updates

‘வாக்கிங்’ கில் வாக்கு சேகரித்த மு.க. ஸ்டாலின்… தஞ்சை மக்களுக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த முதல்வர்!

ரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தை நேற்று திருச்சியில் தொடங்கிய திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், இன்று தஞ்சாவூரில் காலை நடைப்பயிற்சியின்போதும், காய்கறிச் சந்தைக்குச் சென்றும் பொதுமக்களைச் சந்தித்து திமுக வேட்பாளர் முரசொலிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

இந்த நிகழ்வு பொதுமக்களிடையேயும், கல்லூரி மாணவ, மாணவிகள், சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் வியாபாரிகளிடையே வியப்பை ஏற்படுத்தியது. முதலமைச்சரை நேரில் பார்த்த அவர்கள், மிகுந்த மகிழ்ச்சியுடன் தேர்தலில் திமுக-வுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

நேற்று மாலை திருச்சியில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு தஞ்சாவூர் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி, நாகப்பட்டினம் வேட்பாளர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த செல்வராஜ் ஆகிய இருவருக்கும் வாக்கு கேட்டு கேட்டு, இன்று மாலை திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள்

இதற்காக நேற்று இரவு தஞ்சாவூர் வந்த முதலமைச்சர் ஸ்டாலின், தனியார் தங்கும் விடுதியில் தங்கினார். இன்று காலை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில், திமுக வேட்பாளர் முரசொலியுடன் நடைப்பயிற்சி சென்ற ஸ்டாலின் குழந்தைகளுடன் செல்பி , வாலிபால் விளையாட்டு என சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக வாக்கிங் வந்தவர்களிடமும் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த மக்களையும், மாணவர்களையும், சந்தித்து வாக்கு சேகரித்தார்.

முதலமைச்சரை அங்கு கண்ட மக்கள், அவரைக் கண்டு மகிழ்ச்சி அடைந்து, அவருடன் உரையாடினர். அப்போது, “கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதிட்டம் மூலம் நீங்கள் மகளிருக்கு அளிக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எங்களுடைய குடும்பச் செலவு முதல்கொண்டு அவசரச் செலவுக்குப் பயன்படுகிறது. மிக்க மகிழ்ச்சி ” என்றனர்.

திமுக-வுக்கு ஆதரவு தெரிவித்த கல்லூரி மாணவ, மாணவிகள்

கல்லூரி மாணவ, மாணவிகள், புதுமைப்பெண் திட்டத்தில் தங்களுக்கு மாதம் 1,.000 ரூபாய் அளிப்பது, எங்களுக்குத் தன்னம்பிக்கை உணர்வை அளிக்கிறது என்றும், இனி, கல்லூரி மாணவர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை அறிவித்துள்ளது எங்களுக்கு மேலும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் கூறி, நன்றி தெரிவித்தனர்.

காய்கறி கடைக்கு விசிட் … தேநீர் கடையில் டீ

தொடர்ந்து தஞ்சை நகர் காய்கறிச் சந்தைக்கு நடந்து சென்று காய்கறிக் கடைகளில், வியாபாரிகளிடம் காய்கறிகளின் விலை நிலவரத்தைக் கேட்டறிந்து, அவர்களிடமும் வாக்கு சேகரித்தார். காய்கறி விற்பனையாளர்கள் முதலமைச்சரை தங்களது கடைகளில் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தனர். காய்கறிகள் நன்றாக விற்பனையாவதாக கூறிய அவர்கள், “உங்கள் ஆட்சியில் நாங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறோம். நிச்சயமாகக் கழக வேட்பாளர் முரசொலிக்கு நாங்கள் வாக்களிப்போம், அவரை வெற்றிபெறச்செய்வோம்” என்று உறுதி அளித்தனர். சில காய்கறிக் கடைக்காரர்கள், செவ்வாழைப்பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்களை முதலமைச்சருக்கு வழங்கினார்கள்.

அதன்பின்னர், கீழ ராஜ வீதியில் உள்ள தேநீர் கடைக்குச் சென்றார் ஸ்டாலின். அங்கு தேநீர் அருந்தியபடியே, அங்கிருந்தவர்களிடமும் உரையாடி திமுக வேட்பாளரை அறிமுகப்படுத்தி, அவருக்கு வாக்களிக்க வேண்டுமாறு கேட்டுக் கொண்டார். அவர்களும் திமுக-வுக்கு வாக்களிப்போம் என உறுதி அளித்தனர்.

விவசாயிகளும் சந்திப்பு

அதனைத் தொடர்ந்து தான் தங்கியுள்ள விடுதிக்குத் திரும்பிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, 16 விவசாய அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்து, எம் எஸ் சுவாமிநாதன் பரிந்துரையை மத்திய அரசு அமல்படுத்த வலியுறுத்த வேண்டும், தமிழக நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தங்களது ஆதரவுகளைத் தெரிவித்தனர்.

Exit mobile version