Amazing Tamilnadu – Tamil News Updates

“ராஜ்பவனிலிருந்தே தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன்… ”- ஆளுநரை அலறவிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

ரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நேற்று பிரசாரத்தை தொடங்கினார். ஏப்ரல் 17 வரை அவர் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், நேற்றைய முதல் நாள் பிரசாரத்திலேயே ஆளுநர் ரவி தொடங்கி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரை அத்தனை பேரையும் தனது பேச்சில் வறுத்தெடுத்தார்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ளது. அந்த வகையில், மு.க.ஸ்டாலின் நேற்று திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற திமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, திருச்சி தொகுதி வேட்பாளர் துரை வைகோ (மதிமுக) மற்றும் பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

“ராஜ்பவனிலிருந்தே பிரசாரம்…

பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், முதலில் பொன்முடி விவகாரத்தில் அடம்பிடித்து உச்ச நீதிமன்றத்திடம் மூக்குடைபட்ட தமிழக ஆளுநர் ரவிக்கு போகிற போக்கில் குட்டு வைக்கும் விதமாக, தனது தேர்தல் பிரசாரத்தை ராஜ்பவனிலிருந்தே தொடங்கியதாகவும், இதை ஆளுநரிடமே நேரில் கூறியதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் நம்முடைய ஆட்சிக்கு தொந்தரவு கொடுக்க, ஆளுநரை வைத்து மிரட்டிப் பார்க்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்குப் புறப்படுவதற்கு முன்பாக, நம்முடைய அமைச்சர் பொன்முடியின் பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு நான் வந்திருக்கிறேன்.

ஆளுநர் அவராகச் செய்தாரா! முடியாது என்று சொல்லிவிட்டார். நாங்கள் விடுவோமா… திமுக-காரர்கள் நாங்கள். நீதிமன்றத்திற்குச் சென்றோம். உச்சநீதிமன்றத்தில் வாதம் நடந்தது. எப்படிப்பட்ட கண்டனத்தை ஆளுநருக்கு தெரிவித்திருக்கிறார் தலைமை நீதிபதி!

அதற்குப் பிறகு, இன்றைக்கு மாலை 3.30 மணிக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு நாங்கள் நேரடியாகச் சென்று ராஜ்பவனில் பதவிப் பிரமாணத்தை முடித்துவிட்டு, ஒரு மரியாதைக்கு ஆளுநரிடம் பூங்கொத்தைக் கொடுத்துவிட்டு, புறப்படும்போது கூறினேன். இன்றைக்குத்தான் நான் தேர்தல் வேலையைத் தொடங்குகிறேன். தேர்தல் பிரசாரத்தை முதன்முதலாக ராஜ்பவனிலிருந்து தொடங்குகிறேன் என்று கூறினேன். அவர் உடனே, “BEST OF LUCK” என்று சொல்லி அனுப்பினார்.

ராஜ்பவனிலிருந்து தொடங்கியிருக்கின்ற இந்தப் பயணம் குடியரசுத்தலைவர் மாளிகை வரைக்கும் செல்லப்போகிறது என்பது இது ஒரு அடையாளம்!” எனக் கூறினார்.

‘மோடி தமிழ்நாட்டிற்கு செய்த சாதனை என்ன?’

அடுத்ததாக பிரதமர் மோடியையும் தனது பேச்சில் ஒரு பிடி பிடித்த மு.க. ஸ்டாலின், “தேர்தல் என்பதால் பிரதமர், இப்போது இந்தியாவில் இருக்கிறார்; அதனால் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். இல்லை என்றால், பெரும்பாலும் வெளிநாட்டில்தான் இருப்பார். சமீபத்தில் சேலத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ‘தமிழ்நாட்டில் அவருக்கு செல்வாக்கு அதிகமாகிவிட்டதால், தி.மு.க.வினருக்குத் தூக்கம் வரவில்லை’ என்று பேசியிருக்கிறார். உண்மையில், தன்னோட ஆட்சி முடியப்போகிறது என்று, பிரதமர் மோடிக்குத்தான் தூக்கம் வரவில்லை! அவருக்கு ஏற்பட்டிருக்கும் தோல்வி பயம், அவரின் முகத்திலும் – கண்ணிலும் நன்றாகத் தெரிகிறது!

சரி, தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்தாரே, அவரிடம் நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன். அதுக்கு ஒருமுறையாவது பதில் சொன்னாரா? வாரா வாரம் வந்தாலும் அவர் பதில் சொல்லவில்லை! இனி வந்தாலும், சொல்லவும் முடியாது! பத்தாண்டு காலம் ஆட்சி செய்த ஒரு பிரதமரால், தமிழ்நாட்டுக்குச் செய்த சிறப்புத் திட்டம் என்று ஒன்றே ஒன்றைக்கூட சொல்ல முடியுமா?!” என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டம், பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதிட்டம், அரசுப்பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவுத்திட்டம், மக்களைத்தேடி மருத்துவத்திட்டம்,

உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம்… என தனது தலைமையிலான அரசு கொண்டுவந்த பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்டு, இதுபோன்று பிரதமர் மோடியால் சொல்ல முடியுமா? தமிழ்நாட்டில் சொல்வதற்கென்று, எதுவுமே இல்லாத ஆட்சியை நடத்தியவர்தான் பிரதமர் நரேந்திர மோடி! அவரால் சாதனைகளை சொல்ல முடியவில்லை! ” எனக் காட்டமாக கூறினார்.

‘நிர்மலா சீதாராமனின் ஆணவம்’

தொடர்ந்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் கடுமையாக சாடிய மு.க. ஸ்டாலின், “தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான நிதியை வரியாக வசூல் செய்கிறீர்கள்! அதிலிருந்து நியாயமான பங்கை ஏன் திருப்பிக் கொடுப்பதில்லை என்றுதானே கேட்கிறோம்!

இதைக் கேட்டால், சில நாட்களுக்கு முன்னால் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆணவமாகச் சொல்கிறார்! மக்களுக்கு நிவாரணம் வழங்குவது பிச்சையாம்! எவ்வளவு ஆணவம்! எவ்வளவு வாய்க் கொழுப்பு! மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களே… உங்கள் அரசியலுக்காக தமிழ்நாட்டு மக்களை கொச்சைப்படுத்துவீர்களா? பாதிக்கப்பட்ட மக்களை அவமானப்படுத்துவீர்களா? மக்களுக்குக் கொடுப்பது எதுவுமே பிச்சை அல்ல; அது அவர்களின் உரிமை!

மக்கள் பாதிக்கப்படுகிறபோது அவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது, அரசியலில் இருக்கும் நம்முடைய கடமை! அந்தக் கடமையைத்தான் தி.மு.க. அரசு சரியாக செய்துகொண்டு இருக்கிறது. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பல்லாயிரம் கோடி தள்ளுபடி செய்கிறீர்களே… தொழிலதிபர்கள் கூட்டத்தில் சென்று இப்படி பேசுவீர்களா?

ஏழைகள் என்றால் அவ்வளவு இளக்காரமா? ஒரு ரூபாய்க்கு பொருள் வாங்கினால்கூட வரி கட்டுகிறார்களே மக்கள்… அவர்கள் பாதிக்கப்படும்போது அரசாங்கம் உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா? மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் எதற்கு நிதி அமைச்சர் பதவி? பா.ஜ.க.வில் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் சொல்கிறேன்… உங்களுடைய இந்த ஆணவம்தான் பா.ஜ.க.வை வீழ்த்தப் போகிறது!” எனக் கூறினார்.

‘தப்புக்கணக்கு போடுகிறார் பழனிசாமி’

அடுத்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் வறுத்தெடுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “எதேச்சாதிகார – சர்வாதிகார பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டில் இருக்கிற பழனிசாமி கண்டிக்கிறாரா? நம்மைப் போல் விமர்சனம் செய்கிறாரா? எங்காவது கண்டித்து அறிக்கை விடுகிறாரா? குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு சிறுபான்மையினர் நலன் பேசுகிறார் பழனிசாமி! அவரின் இருண்ட கால ஆட்சியை நீங்கள் எல்லாம் மறந்துவிட்டு இருப்பீர்கள் என்று தப்புக்கணக்கு போடுகிறார் பழனிசாமி!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – கொடநாடு கொலை – கொள்ளை, தற்கொலை – மர்ம மரணங்கள் – பொள்ளாச்சி பாலியல் வன்முறை என்று பழனிசாமி ஆட்சியின் அவலங்கள் என்று நீண்ட பட்டியலே போடலாம்! ஊழல் கறை படிந்த அவரின் கரங்களை காப்பாற்றிக் கொள்ள பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து, பா.ஜ.க.விற்கு பாதம்தாங்கியாக இருந்து, பா.ஜ.க. தமிழ்நாட்டுக்குச் செய்த அத்தனை துரோகங்களுக்கும் துணை நின்று, அதற்கு லாலி பாடியவர் பழனிசாமி!

இப்போது அதே பாஜ.க-வின் கதை – திரைக்கதை – வசனம் – டைரக்‌ஷனில் கள்ளக்கூட்டணி நாடகத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார். பழனிசாமி நடத்தும் நாடகம் விரைவில் முடிவுக்கு வரும்! பா.ஜ.க.வின் பாசிச எண்ணங்களுக்கும் முடிவுரை எழுதப்படும்!

இதெல்லாம் நடப்பதற்கு, நம்முடைய இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சி அமைக்க வேண்டும்! அப்போதுதான், நம்முடைய இந்திய நாட்டையும் – இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் – நாட்டின் பன்முகத் தன்மையையும் – சகோதரத்துவத்தையும் – காப்பாற்ற முடியும்!” எனக் கூறி, இந்தியாவிற்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கக் காத்திருக்கும் இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version