வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக இன்று வெளியிடப்பட்ட திமுக-வின் தேர்தல் அறிக்கை, தமிழக நலனை மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவின் நலன்களையும் கருத்தில் கொண்டே தயாரிக்கப்பட்டிருப்பதாக, தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுத் தலைவரான எம்.பி கனிமொழிக்கு பாராட்டுகளைப் பெற்றுத்தந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக-வின் தேர்தல் அறிக்கையை, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
திமுக தேர்தல் அறிக்கை
அதில், மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும். நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும். நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தியா முழுவதும் உள்ள குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிர்உரிமைத் தொகை ரூ. 1000 வழங்கப்படும் என்பது உட்பட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
மாநில அரசின் ஒப்புதலுடன் ஆளுநர்களை நியமிப்பது, மீண்டும் திட்டக்குழுவை அமைப்பது, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு, சிஏஏ சட்டம் ரத்து, புதிய கல்விக் கொள்கை ரத்து, மத்திய அரசுப் பணிகளில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை உள்பட திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் மேலும் பல வாக்குறுதிகளும், இன்று ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிக் கொண்டிருக்கும் பிரச்னைகளுக்கான தீர்வாக பார்க்கப்படுகிறது.
திமுக-வின் கதாநாயகன்
தேர்தல்களின்போது எப்போதுமே ‘திமுக-வின் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன்’ எனச் சொல்லப்படுவதுண்டு. அந்த அளவுக்கு மக்களின் தேவைகளையும் உணர்வுகளையும் கருத்தில்கொண்டு, அவர்களின் நாடித்துடிப்புக்கு ஏற்ப தேர்தல் அறிக்கையை தயாரிப்பதில் திமுக கவனம் செலுத்தும். அந்த வகையில், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக, திமுக துணை பொது செயலாளரும் எம்.பி-யுமான கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை குழுவை அமைத்தார் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
அவர் வழங்கிய அறிவுரையின்படி அந்தக் குழுவினர், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தொழிற்துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் நேரடியாக சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தனர்.
‘மாஸ்’ காட்டிய கனிமொழி ‘டீம்‘
அதே சமயம் தற்போதைய மோடி அரசால் மேற்கொள்ளப்படும் மாநிலங்களுக்கான அதிகார பறிப்பு, ஆளுநர்கள் மூலம் கொடுக்கும் குடைச்சல்கள், நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம், மாநிலங்களின் கல்விக்கான அதிகாரத்தை தனது பிடிக்குள் கொண்டுவரத் துடிப்பது, ஒன்றிய அரசின் நிறுவனங்களில் அந்தந்த மாநில மக்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் இருப்பது போன்ற பிரச்னைகளால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கடும் பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றன.
இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டும், எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணியில் திமுக முக்கிய கட்சியாக திகழ்வதால், அதற்குரிய பொறுப்புடன் தேசிய அளவில் செய்யப்பட வேண்டிய கொள்கை மாற்றங்கள், தேசிய அளவிலான திட்டங்கள், வாக்குறுதிகள் ஆகியவற்றுடன் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திற்குமான வாக்குறுதிகளும் இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்திருப்பதன் மூலம், தேர்தல் அறிக்கை குழுத் தலைவர் கனிமொழி எம்.பி ‘மாஸ்’ காட்டி இருப்பதாகவே திமுக-வினர் மட்டுமல்லாது கூட்டணி கட்சியினரும் பாராட்டி வருகின்றனர். இன்னும் சொல்வதானால், திமுக-வின் தேர்தல் அறிக்கை, ‘இந்தியா’ கூட்டணியின் தேர்தல் அறிக்கையைப் போலவே உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.