Amazing Tamilnadu – Tamil News Updates

நாடாளுமன்ற தேர்தல் 2024: தமிழ்நாட்டில் பூத் சிலிப் விநியோகம் எப்போது?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலையுடன் முடிவடைந்துள்ள நிலையில், 40 தொகுதிகளிலும் 1,599 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக தலைமையில் தனித்தனி கூட்டணிகள் அமைக்கப்பட்டு, கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன. இவை தவிர, நாம் தமிழர் கட்சியும் தனித்துப் போட்டியிடுகிறது.

வேட்புமனு தாக்கல் முடிந்தது

இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால், அதிகம் பேர் ஆர்வமாக வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று மட்டும் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் 350-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்ததாக கூறப்படும் நிலையில், 40 தொகுதிகளிலும் மொத்தம் 1,599 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்புனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். நாளை மறுதினம் மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

வாக்காளர் எண்ணிக்கை

“இந்த தேர்தலில் தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 23 லட்சத்து 26, 901 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 3 கோடியே 6 லட்சத்து 2,367; பெண்கள் 3 கோடியே 17 லட்சத்து 16,069; மூன்றாம் பாலினத்தவர் 8,465 பேர் உள்ளனர். முதல்முறை வாக்களிப்போர் (19 வயதுக்கு உட்பட்டவர்கள்) 10 லட்சத்து 90, 574 பேர் உள்ளனர்” என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

வாக்குச்சாவடிகள்

“தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், இதுவரை 68,144 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1,500-க்கும் அதிகமாக வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளைப் பிரித்து, 177 புதிய துணை வாக்குச்சாவடிகளை உருவாக்க உள்ளோம். அவை, ஏற்கனவே உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அருகில் அமைக்கப்படும். தமிழகத்தில் 39 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்படும்.

பூத் சிலிப் விநியோகம்

இந்த நிலையில், பூத் சிலிப் வினியோகம் ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதிக்குள் நிறைவடையும். இந்தப் பணியில் அரசியல் கட்சிகளுக்கு இடமில்லை. மத்திய அரசு பணியில் உள்ள 7, 851 மைக்ரோ அப்சர்வர்கள் விரைவில் பணிகளைத் தொடங்குவர்” என அவர் மேலும் தெரிவித்தார்.

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இருக்கை, ‘சாமியானா’ பந்தல் போன்ற ஏற்பாடுகளை செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

Exit mobile version