நாடாளுமன்ற தேர்தல் 2024: பிரசாரம் ஓய்ந்தது; கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி முன்னிலை!
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்த நிலையில், பல்வேறு கருத்துக் கணிப்புகளில் திமுக கூட்டணி முன்னிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உட்பட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 இடங்களுக்கான வாக்குப்பதிவு, நாளை மறுதினம் நடைபெறுகிறது.
நான்கு முனை போட்டி
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன. அதே போன்று அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் களம் காண்கின்றன.
பாஜக தலைமையிலான கூட்டடணியில் பாமக, தமாகா, அமமுக, முன்னாள் முதலமைச்சசர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர் உரிமை மீட்பு க்குழு, புதிய நீதிக்கட்சி , ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் களம் காண்கின்றன. நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது.
தலைவர்கள் பிரசாரம்
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக எம்.பி கனிமொழி, திமுக இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மிக தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டனர். இதர இரண்டாம் கட்ட தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏ-கள், கட்சியின் லியோனி உள்ளிட்ட அதிகாரபூர்வ பேச்சாளர்களும் பிரசாரம் மேற்கொண்டர். அதேபோன்று கூட்டணி கட்சித் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதிலும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நெல்லையிலும் கோவையிலும் மேற்கொண்ட பிரசாரத்துக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது.
அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டனர்.
பாஜக கூட்டணிக்காக பிரதமர் மோடி 9 முறை தமிழகம் வந்து பிரசாரம் செய்துள்ளார். ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தனர்.
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்துக்கு இன்றே கடைசி நாள் என்பதால், அனைத்து கட்சிகளும் நேற்றும் இன்றும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பிரசாரம் ஓய்ந்தது
இவ்வாறு கடந்த 4 வாரங்களாக அனல் பறந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. மாலை 6 மணிக்கு மேல் மைக் செட் கட்டி பிரசாரம், பொதுக்கூட்டம் நடத்துவது என எதுவும் செய்ய அனுமதி இல்லை. மேலும் சமூக வலைத்தளங்கள், ஊடகங்களிலும் பிரசாரம் செய்யக்கூடாது. மீறினால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. நாளை மாலை வாக்குச்சாவடிகளுக்கு அலுவலர்கள் மூலம் மற்றும் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட உள்ளன.
தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல் துறையினருக்கும் அவர்கள் பயிற்சி பெறும் மையங்களிலேயே தபால் வாக்கு செலுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் இ.டி.சி. எனப்படும் மின்னணு வாக்கு செலுத்தும் வசதியும் வழங்கப்பட்டது.
இது தவிர வாக்குச் சாவடிக்கு வர இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கும் தபால் வாக்கு வசதி வழங்கப்பட்டுள்ளது.
கருத்துக் கணிப்பில் முந்தும் திமுக கூட்டணி
இந்த நிலையில், பல்வேறு ஆங்கில, தமிழ் ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் நடத்திய கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணியே அமோக வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இந்த தேர்தலில் பாஜக-வின் வீழ்ச்சி தொடங்கிவிட்டதாகவும், இந்த தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த நாட்டு மக்கள் தயாராகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜூன் 1-ஆம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்பது தெரிந்துவிடும்.