நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்!
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19 ஆம் தேதியன்று நடைபெற உள்ள நிலையில், பூத் சிலிப் வழங்குவது, வாக்குப் பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவது உள்ளிட்ட ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 6.32 கோடி வாக்காளர்களில் நேற்று வரை 4.36 கோடி வாக்காளர்களுக்கு அதாவது 70 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட நிலையில், அந்த பணிகள் இன்று இரவு நிறைவடைகிறது.
பதற்றமான வாக்குச் சாவடிகள்
மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. இந்த மையங்கள் அனைத்திலும் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழக தேர்தல் பாதுகாப்பு பணியில் 200 கம்பெனி துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பதற்றமான வாக்குச்சாவடிகளில் இவர்கள் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு மையங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும் என்றும், எந்த சூழலிலும் சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் வகையில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்று விடக்கூடாது என்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
அதே நேரத்தில் தமிழக தேர்தல் பாதுகாப்புக்காக வெளிமாநில போலீசாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து 10 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்களே இருக்கும் நிலையில், வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் இந்த பணிகளை தேர்தல் அதிகாரிகள் பம்பரமாக சுழன்று செய்து வருகிறார்கள்.
வாக்காளர்களுக்கு அடிப்படை வசதிகள்
100 சதவீத ஓட்டுப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் தினமும் பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள்,
கல்லூரி மாணவர்கள், புதிய வாக்களர்கள் கட்டாயம் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
வாக்குப்பதிவு நடை பெறும் மையங்களில் போதிய மின் விளக்கு வசதிகளை செய்து கொடுப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிக்கூட வகுப்பறைகளே வாக்குப்பதிவு மையங்களாக மாறும் நிலையில் அங்கு ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள விளக்குகளோடு சேர்த்து, கூடுதல் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கழிப்பிட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஓட்டுப்போட வரும் வாக்காளர்களின் தாகத்தை தணிக்க தேவையான குடிநீர் வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன.
அதேபோன்று தற்போது கோடை காலம் வாக்காளர்கள் நலன் கருதி சாமியானா பந்தல்களும் அமைக்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க வசதியாக சாய்வு தளங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. சக்கர நாற்காலி களில் வரும் வாக்காளர்கள் எளிதாக அதில் ஏறி வாக்குச் சாவடி மையத்துக்குள் சென்று ஓட்டுப் போடுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் நாளில் வாக்குப் பதிவு மையங்களில் அடையாள அட்டையுடன் இருக்கும் வாக்காளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் வெளியாட்களை அனுமதிக்கவே கூடாது என்றும் தேர்தல் அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.