Amazing Tamilnadu – Tamil News Updates

களமிறங்கும் உதயநிதி… கோவையில் திமுக போட்டி ஏன்?

த்தாண்டுகளுக்குப் பிறகு கோவை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக தனது வேட்பாளரை நிறுத்தி உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில், தோழமை கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், சில கணக்குகளைப் போட்டே திமுக இந்த முறை கோயம்புத்தூரை தனக்கென வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னைக்கு அடுத்த படியாக அதிகளவிலான தொழில் வளம், கல்வி நிறுவனங்களை உள்ளடக்கியதால், கோவை முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாகக் கருதப்படுகிறது. இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சி 5 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும், திமுக மற்றும் பாஜக தலா 2 முறையும், அதிமுக ஒரு முறையும் கைப்பற்றியுள்ளன. திமுக, கடந்த 1980 மற்றும் 1996 ல் இந்த தொகுதியில் வெற்றி பெற்றது. 1998 மற்றும் 2014 ல் அக்கட்சி தோல்வியடைந்தது.

இந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், கோவை தொகுதியை தோழமை கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கிய நிலையில், அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட பி.ஆர்.நடராஜன், பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை விட 1 லட்சத்து 79 ஆயிரத்து 143 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

சட்டமன்ற தேர்தலும் உள்ளாட்சித் தேர்தலும்

அதே சமயம் 2021 ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்த போதிலும், சூலூர், கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், சூலூர், கோவை, பல்லடம் ஆகிய 6 தொகுதிகளில் அதிமுகவும், அதன் தோழமை கட்சிகளுமே வெற்றி பெற்றன. இது தவிர, அந்த தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது.

இதனையடுத்து கோவையில் ஏற்பட்ட பின்னடைவை சரி செய்யும் பணியில் திமுக தீவிரமாக கவனம் செலுத்த தொடங்கியது. தொடர்ந்து 10 ஆண்டுக் காலம் ஆட்சியில் இல்லாததால் சோர்ந்திருந்த திமுக-வினரையும், கட்சி நிர்வாகிகளையும் தட்டிக்கொடுத்து, உற்சாகப்படுத்தி கட்சியைப் பல மட்டங்களிலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இதன் பலனாக, அடுத்து வந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை, திருப்பூர் மாநகர மேயர் பதவி உட்பட கொங்கு மண்டலத்தின் பெரும்பாலான உள்ளாட்சிப் பதவிகளை திமுக-வும் அதன் கூட்டணி கட்சிகளும் கைப்பற்றின.

கோவை தொகுதியில் திமுக போட்டி ஏன்?

இந்த நிலையில்தான் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் வென்று காட்டி, கொங்குமண்டலம் ஒன்றும் திமுக-வால் வெல்ல முடியாத பகுதி அல்ல என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என அக்கட்சி தரப்பில் முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாகவே தோழமை கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம், ‘இந்த முறை நாங்களே போட்டியிடுகிறோம்’ என அக்கட்சியின் சிட்டிங் எம்.பி தொகுதியான கோவை தொகுதியை திமுக தனக்கென வலியுறுத்தி கேட்டுப்பெற்று, கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமாரை தனது வேட்பாளராக நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கோவையில் தங்களுக்கு செல்வாக்கு இருப்பது போன்றதொரு பிம்பத்தை பாஜக கட்டமைத்து வரும் நிலையில், அக்கட்சியின் மாநில தலைவரான அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிடலாம் என்ற பேச்சும் கிளம்பியது. இந்த நிலையில், திமுக இங்கு போட்டியிட்டு வெற்றிபெற்றால், அது பாஜக கட்டமைத்த போலி பிம்பத்தை அடித்து நொறுக்குவதாக அமையும் என்ற கணக்கும் இதன் பின்னணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

களம் இறங்கும் உதயநிதி ஸ்டாலின்

அந்த வகையில், இந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக-வுக்கான பிரசாரத்தை தலைமையேற்று நடத்த உள்ள கட்சியின் மாநில இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கோவையில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாகவும், கோவை உள்ளிட்ட கொங்குமண்டல பகுதிகளை திமுக-வின் கோட்டையாக மாற்றும் வகையில் கட்சியினருக்கு, குறிப்பாக இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கும் வெற்றிக்கனியைப் பறித்தே தீர வேண்டும் இதே அறிவுறுத்தல்கள் வந்திருப்பதாக தெரிகிறது.

அதே சமயம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள், மக்களிடையே திமுக-வுக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்திட்டம், மகளிர்க்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம், உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தாய்மார்களிடையே திமுக-வுக்கு செல்வாக்கை அதிகரிக்க வைத்துள்ளது.

‘மக்கள் நலத்திட்டங்களும் கைகொடுக்கும்’

இவற்றையெல்லாம் குறிப்பிட்டுப் பேசும் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள், “கோவைக்கான அரசின் திட்டங்கள் மற்றும் திட்டங்களாலும் திமுக-வுக்கான மக்கள் ஆதரவு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த முறை நாங்களே நேரடியாக தொகுதியில் போட்டியிட உள்ளதால், தொண்டர்கள் மத்தியில் அமோக உற்சாகம் ஏற்பட்டுள்ளது. தொண்டர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதை கட்சி மேலிடமும் ஏற்றுக்கொண்டதால் கட்சியினர் மகிழ்ச்சியுடன் களமிறங்கியுள்ளனர். திமுக வேட்பாளர் நிச்சயம், அபாரமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்” என அடித்துக் கூறுகின்றனர்.

ஆக மொத்தத்தில் ஜூன் 4 ல் வெளியாகும் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்துக்கு இப்போதே தயாராகி விட்டது கோவை திமுக!

Exit mobile version