Amazing Tamilnadu – Tamil News Updates

மு.க. ஸ்டாலினும் திமுக-வின் தொடர் வெற்றியும்..!

மிழக அரசியலில் இருபெரும் ஆளுமைகளாக திகழ்ந்தவர்கள் முன்னாள் முதலமைச்சர்களான கருணாநிதியும் ஜெயலலிதாவும். அண்ணா மறைவுக்குப் பின்னர் திமுக தலைவராகவும் முதலமைச்சராகவும் பொறுப்பேற்ற கருணாநிதி, தமிழகத்தின் முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்து, தனது இறுதிக்காலம் வரை கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். மேலும், மாநில அரசியலில் மட்டுமல்லாது மத்திய அரசியலிலும் முக்கிய ஆளுமையாக திகழ்ந்து, நாட்டின் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்களைத் தீர்மானிப்பதிலும் முக்கிய ஆளுமையாக திகழ்ந்தவர்.

திமுக தலைவர் பதவியும் முதல் தேர்தல் வெற்றியும்

கடந்த 2018 ஆம் ஆண்டு கருணாநிதி மறைந்த பிறகு திமுக-வின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் தற்போதைய முதலமைச்சரான மு.க.ஸ்டாலின். அப்போது தந்தையைப் போன்றே அவரால் கட்சியை வழிநடத்திச் செல்ல முடியுமா, தேர்தல் வெற்றி சாத்தியமா என்றெல்லாம் பல்வேறு கேள்விகள் மற்றும் விவாதங்கள் எழுந்தன. அத்தனைக்கும் விடை கூறுவதுபோன்று வந்தது 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல். திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற அந்த முதல் தேர்தலிலேயே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 39 இடங்களில் திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 21 தொகுதிகள் சட்டமன்ற இடைத்தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல்களிலும் திமுக வெற்றி பெற்றது. குறிப்பாக மொத்தமுள்ள 515 மாவட்ட வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில், திமுக 214 இடங்களைக் கைப்பற்றியது. அதேபோன்று 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக 2,095 இடங்களைக் கைப்பற்றியது. மேலும், இந்த தேர்தலில் திமுக 44.27 சதவீத வாக்குகளைப் பெற்றதும் சாதனையாக பார்க்கப்பட்டது.

முன்னதாக கருணாநிதி மறைவுக்குப் பின்னர், திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது மாநில உரிமைகளை காப்பதற்காக ஆளுங்கட்சியான அதிமுக செய்யத் தவறியதையையும் சேர்த்து மு.க. ஸ்டாலின்தான் செய்ய வேண்டி இருந்தது. அதிமுக ஆட்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மாவட்டம் மாவட்டமாக ஆய்வு சென்றபோது அதனை எதிர்த்து கறுப்புக்கொடி போராட்டம் நடத்தியது திமுக தான்.

5 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி

இந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும், திமுக கூட்டணியைச் சிந்தாமல் சிதறாமல் அரவணைத்துக் கொண்டு வந்து தேர்தலை எதிர்கொண்டார் மு.க. ஸ்டாலின். அந்த தேர்தலிலும் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. 188 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, 133 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். அந்த தேர்தலில் திமுக 37.70 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதன்பின்னர் 2022 ஆம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களிலும், திமுக அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றி, பெரும்பாலான நகராட்சி மற்றும் பேரூராட்சிகளையும் கைப்பற்றியது. மேலும் இந்த தேர்தலில் 43 சதவீத வாக்குகளையும் பெற்று சாதனை படைத்தது.

இந்த நிலையில், தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை அபார வெற்றி பெற் வைத்துள்ளார் மு.க. ஸ்டாலின். மேலும் தேசிய அளவிலும் இந்த முறை பாஜக-வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத வகையில், ‘இந்தியா’ கூட்டணி 234 இடங்கள் வரை பெற முடிந்ததற்கு ஸ்டாலினின் முன்னெடுப்பும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் இதுவரை அமைந்த எந்த ஒரு மாநில அரசும் எதிர்கொள்ளாத நெருக்கடிகளை மத்திய பாஜக அரசிடமிருந்து எதிர்கொண்டு, கடும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வந்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அதுமட்டுமல்லாது, நாட்டில் எதிர்க்கட்சிகளே இருக்கக்கூடாது என்கிற நிலையை ஏற்படுத்த கடந்த 10 ஆண்டுகளில் எவ்வளவோ அத்துமீறல்களை அரங்கேற்றினார் பிரதமர் மோடி.

அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்க கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே விதை போட்டது திமுக தான். மதசார்ப்பற்ற சக்திகள் ஒன்றிணைந்தால் பாஜக-வை எளிதில் வீழ்த்த முடியும் என்கிற நம்பிக்கையை கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே நாடெங்கிலும் உள்ள எதிர்க்கட்சிகளிடையே விதைத்தது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிதான்.

‘2026 சட்டமன்ற தேர்தலிலும் தொடரும்’

இதன் பலனாகத்தான் தமிழ்நாட்டில் திமுக இத்தகைய மாபெரும் வெற்றியை தனதாக்கி உள்ளது. இவ்வாறு மு.க. ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை தான் சந்தித்த 5 தேர்தல்களிலும் திமுக-வை அபார வெற்றி பெற வைத்துள்ளது குறித்து பெருமிதம் தெரிவிக்கும் திமுக-வினர், “கடந்த 50 ஆண்டுகளாக எத்தனை கட்சிகள் உருவானாலும் திமுக உருகுலையாமல் களத்தில் கம்பீரத்தோடு நின்று கொள்கைத்தீரத்தோடு களமாடி வெற்றியை பெற்று வருகிறது. திமுக-வை வழிநடத்தும் தலைவர் பொறுப்பை ஏற்றதில் இருந்து இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே தனதாக்கி வருகிறார் மு.க.ஸ்டாலின்.

இந்தியாவிலேயே தமிழ்நாடு சமூகநீதி, சமத்துவம், ஜனநாயகம் ஆகியவற்றின் தொட்டிலாக திகழ்கிறது. அப்படிப்பட்ட இடத்தில் பாஜக செய்த மதவாத அரசியலை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்து விரோதி என திமுகவை பாஜக விமர்சித்ததை தமிழ்நாட்டு மக்கள் நிராகரித்துள்ளனர்.

அரசியல் களத்தில் மு.க.ஸ்டாலினுக்கு எதிரில் சில கட்சிகள் நின்றாலும் வெற்றிவாகையை அவருக்கு தொடர்ந்து சூட்டி அழகுபார்க்கவே தமிழ்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். அடுத்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுகவே வென்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் தொடர்வார்” என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Exit mobile version