Amazing Tamilnadu – Tamil News Updates

நாடாளுமன்ற தேர்தல்: “இந்தியா கூட்டணியின்வெற்றி கலைஞருக்கான காணிக்கை… ” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறைகூவல்!

ருகிற ஜூன் 3 ஆம் தேதி அன்று தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்த நாள் விழாவும் அவரது நூற்றாண்டு நிறைவு விழாவும் நடைபெற இருக்கும் நிலையில், அதனை நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கொண்டாட்டமாக கொண்டாடி மகிழ்வோம் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் திமுக தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில், “2023 ஜூன் 3-ஆம் நாள் தொடங்கிய தலைவர் கலைஞரின் நூற்றாண்டு 2024 ஜூன் 3 அன்று நிறைவடையும் நிலையில், கடந்த ஓராண்டு முழுவதும் சாதனைத் திட்டங்களாலும், மக்களுக்குப் பயன் அளிக்கும் செயல்களாலும் அவரது நூற்றாண்டைக் கொண்டாடியிருக்கிறோம்.

‘மாநில சுயாட்சியின் குரலை இந்திய அளவில் முன்னெடுத்தவர்’

இந்தியாவில் ஜனநாயகத்திற்கு நெருக்கடிகள் ஏற்பட்ட போதெல்லாம் வடஇந்தியத் தலைவர்களின் பார்வை தெற்கை நோக்கித் திரும்பியதும், அவர்களின் எதிர்பார்ப்பிற்குரிய தலைவராக தலைவர் கலைஞர் செயலாற்றியதும், அதன் காரணமாக ஜனநாயகம் மீட்கப்பட்டு, ஆட்சியில் நிலைத்தன்மை ஏற்பட்டதையும் எவரும் மறுக்க முடியாது. கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தி, மாநில சுயாட்சியின் குரலை இந்திய அளவில் முன்னெடுத்தவர் தலைவர் கலைஞர்.

திராவிட முன்னேற்றக் கழகம் என்றாலே சமூகநீதி, மத நல்லிணக்கம், எளிய மக்களின் வாழ்வுரிமை, மாநில சுயாட்சி, ஆதிக்க மொழிகளிடமிருந்து தாய்மொழியைப் பாதுகாத்தல், இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்கள் என்ற எண்ணத்தைத் தன் செயல்களால் பதிவு செய்திருக்கிறார் கலைஞர். அதனால்தான் சமூகநீதிக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையிலும், ஏழை-எளிய மக்களைப் பற்றி அக்கறையில்லாதவர்களாகவும் இருக்கக்கூடிய மதவெறி அரசியல் நடத்துவோர் இந்தியாவின் எந்த மாநிலத்தில் பேசினாலும் தி.மு.க. மீது தாக்குதலை நடத்துகிறார்கள். வன்மத்தைக் கக்குகிறார்கள். வதந்திகளைப் பரப்புகிறார்கள். தோல்வி பயத்தில் நடுங்குவதை அவர்களின் குரல் வெளிப்படுத்துகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமையில் புதிய இந்தியா உருவாகப்போவதை உள்ளூர உணர்ந்து அவர்கள் புலம்புவதைக் காண முடிகிறது.

‘இந்தியா’வின் வெற்றி கலைஞருக்கான காணிக்கை

ஜூன்-3 அன்று கலைஞர் பிறந்தநாள். மக்கள் கூடும் இடங்களில் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலையிட்டு, அனைத்துக் கொடிக்கம்பங்களிலும் கொடிகளைப் புதுப்பித்துக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும்.

ஜூன்-4 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. அன்றைய நாளில் வெற்றிக் கொடி ஏற்றுவோம். ‘இந்தியா’வின் வெற்றியைத் தலைவர் கலைஞருக்கு காணிக்கையாக்குவோம். தமிழ் உள்ளவரை புகழ் நிலைத்திருக்கும் கலைஞரின் நூற்றாண்டின் தொடர்ச்சியை இந்திய அளவில் கொண்டாடுவோம்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version