நாடாளுமன்ற தேர்தலும் வேலைவாய்ப்பின்மையும்… மக்களின் மனநிலையைச் சொல்லும் ஆய்வுகள்!
நாடாளுமன்ற தேர்தல், ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக இந்தியா முழுவதும் நடைபெற உள்ளது. இதில் முதல்கட்ட தேர்தல், வரும் 19 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நடைபெற உள்ள நிலையில், இதர மாநிலங்களில் தேர்தல் நடவடிக்கைகள் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளன.
இந்த நிலையில், இந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் மனநிலை என்னவாக உள்ளது, அவர்கள் எந்த பிரச்னையை முக்கியமாக கருதுகிறார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுடன் Lokniti-CSDS என்ற ஆய்வு மையம் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் விலைவாசி உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவையே முக்கிய பிரச்னையாக உள்ளது எனக் கவலையுடன் கூறியுள்ளனர்.
வேலைவாய்ப்பின்மை
கிராமங்கள், நகரங்கள் மற்றும் பெரு நகரங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களில் 62% பேர் வேலை கிடைப்பது மிகவும் கடினமாகிவிட்டது என்றும், 12% பேர் மட்டுமே தங்களுக்கு எளிதாக வேலை கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர். வேலை கிடைப்பது சிரமமாக உள்ளது என 67 சதவீத முஸ்லிம்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (ஓபிசி) சேர்ந்த 63 சதவீத இந்துக்கள் மற்றும் 59 சதவீத பழங்குடியினர் கூறியுள்ளனர்.
பதிலளித்தவர்களில் உயர் சாதியைச் சேர்ந்தவர்களில் 57% பேர் வேலை கிடைப்பது கடினமாக உள்ளது என்றும், 17% பேர் வேலை எளிதாக கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
விலைவாசி உயர்வு, ஊழல் அதிகரிப்பு
கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் விலைவாசி உயர்வு தங்களை கடுமையாக பாதித்துள்ளதாகவும், 71% பேர் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளனர். 76% ஏழைகள் பணவீக்கம் தங்களை பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
வாழ்க்கைத் தரத்தைப் பொறுத்தவரை, சுமார் 48% பேர் மேம்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அதே நேரத்தில் 35% பேர் கடந்த ஐந்தாண்டுகளில் தங்களின் வாழ்க்கைத்தரம் மோசமாகிவிட்டதாகக் கூறியுள்ளனர். 22% மக்கள் மட்டுமே தங்கள் வருமானத்தில் இருந்து பணத்தை சேமிக்க முடிகிறது என்று கூறியுள்ளனர். 36% பேர் தங்கள் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்ய முடிவதாகவும், ஆனால் பணத்தை சேமிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று 55 சதவீதம் பேர், கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் ஊழல் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளனர். 25% பேர் ஊழலுக்கு மத்திய அரசையும், 16% பேர் மாநிலங்களையும் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கை சரிவு
அதேபோன்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை குறைந்துள்ளதும் இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு ஆய்வின்போது பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தேர்தல் ஆணையம் மீது மிகுந்த நம்பிக்கை தெரிவித்திருந்தனர். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லாதவர்களின் பங்கு இரட்டிப்பாகியுள்ளதாகவும் Lokniti-CSDS கருத்துக் கணிப்புகள் மேலும் தெரிவிக்கின்றன.
‘பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம்’
இந்த நிலையில், இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த கருத்துக் கணிப்புகளை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டு, அது குறித்து கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது.
அதிகரித்துவிட்ட ஊழல், கார்ப்பரேட்டுகளிடமே மீண்டும் மீண்டும் குவியும் செல்வம், தொடரும் பாகுபாடுகள் என மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்னைகளைத் தீர்ப்பதில், பத்தாண்டுகால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள். சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.