Amazing Tamilnadu – Tamil News Updates

“திமுக தேர்தல் அறிக்கை எப்படி இருக்கணும்?” – உங்கள் பரிந்துரைகளையும் சொல்லலாம்!

ரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக தரப்பில் வெளியிடப்பட இருக்கும் தேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து, பொதுமக்களும் தங்களது கருத்துகளையும் பரிந்துரைகளையும் தெரிவிக்கலாம் என அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்பு காட்டி வருகிறார் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின். இதனை கருத்தில் கொண்டு, தேர்தல் பணிகளை அக்கட்சி தீவிரப்படுத்தி உள்ளது. ஒருபுறம் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு, பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இன்னொருபுறம் கனிமொழி எம்.பி. தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் நேரில் சென்று பலதரப்பு மக்களையும் அமைப்புகளையும் சந்தித்து தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணியை முழு வீச்சில் மேற்கொண்டிருக்கிறது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்போது, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற பொறுப்பில் திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் என அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், மக்களின் தேவைகளை புரிந்துகொள்ளும் விதமாக, அதில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து பொதுமக்களும் தங்களது கருத்துகளையும் பரிந்துரைகளையும் தெரிவிக்கலாம் என அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து அக்கட்சி தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் – DMKManifesto2024-க்கான உங்கள் பதிவுகளை வரவேற்கிறது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும், மாநில சுயாட்சியை உரத்துச் சொல்வதற்குமான தேர்தல்!

எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க…

தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, அண்ணா அறிவாலயம், எண் 367/369, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600018 என்ற முகவரிக்கு கடிதங்கள் மூலமாகவோ அல்லது dmkmanifesto2024@dmk.in-இற்கு மின்னஞ்சல்கள் அனுப்புவதன் மூலமாகவோ மக்கள், தங்கள் பரிந்துரைகளைப் பகிர்ந்து கொள்ளாலாம்.

தொலைபேசி எண்

தொலைபேசியில் அழைத்து கருத்துகளைத் தெரிவிப்பதற்காக 08069556900 -இல் ஒரு சிறப்பு ஹாட்லைன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொலைபேசி எண் தொடர்பு மூலம் திமுக தேர்தல் அறிக்கை குழு உங்களின் பரிந்துரைகளை அறிந்து கொள்ளத் தயாராக உள்ளது.

சமூக ஊடகங்களிலும் பதிவிடலாம்

DMKManifesto2024 என்ற ஹேஷ்டேக்குடன் [@DMKManifesto2024] எங்களுக்கு ட்வீட் செய்யுங்கள் அல்லது உங்கள் பதிவுகளை ஃபேஸ்புக் பக்கம் – DMKManifesto2024 அல்லது வாட்ஸ்அப் எண் 9043299441 மூலம் உங்கள் பரிந்துரைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

டவுன் ஹால் கூட்டங்களில் பங்குபெறலாம்

வரவிருக்கும் நாட்களில், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் அறிக்கைக் குழு பயணித்து டவுன் ஹால் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. குழுவின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, உங்கள் கருத்துகளை நேரில் தெரிவிக்கலாம்.

மேலும், ஆன்லைன் படிவங்கள் மூலம் சமர்ப்பிக்கலாம். QR குறியீட்டை ஸ்கேன் செய்தும் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்

பரிந்துரைகளைத் தெரிவிக்க கடைசி தேதி 25/02/2024. தமிழ்நாட்டை சுயாட்சி மாநிலமாகவும், இந்தியாவின் முன்னோடி மாநிலமாகவும் நாம் ஒன்றிணைந்து உருவாக்குவோம்.

சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்!” என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version