அரசியல் ஆட்டத்தைத் தொடங்கிய விஜய்… ஒரு மணி நேரத்தில் 20 லட்சம் பேர் உறுப்பினர்!

டந்த பிப்ரவரி 2 ஆம் தேதியன்று, ‘தமிழக வெற்றிக் கழகம்’என்ற தனது புதிய கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்ட விஜய், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்திருந்தார். மேலும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கப் போவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து பிப்ரவரி 7-ம் தேதி சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்கவேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதற்காக புதிய செயலி ஒன்றும் வடிவமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

உறுப்பினர் செயலி

இந்த நிலையில், புதிய செயலியை வடிவமைக்கும் பணி முடிவடைந்த நிலையில், உறுப்பினர் சேர்க்கைக்காக வாட்ஸ்அப், டெலிகிராம், இணைய பயனாளர்களுக்கென தனித்தனியாக ‘க்யூஆர்’ குறியீடை அறிமுகம் செய்து, அதன்மூலம் செயலியைப் பயன்படுத்தி உறுப்பினர் சேர்க்கை பணி தொடங்குவதை, பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், காணொலி மூலம் விஜய் தொடங்கி வைத்தார்.

அப்போது, க்யூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி செயலி மூலம் விஜய், தனது உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொண்டு கட்சியில் முதல் உறுப்பினராக சேர்ந்தார்.

அதைத்தொடர்ந்து, தன்னுடன் இணைந்து மக்கள் பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்து காணொலி மூலம் பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை நான் எடுத்துவிட்டேன். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அடிப்படை சமத்துவக் கொள்கையைப் பின்பற்றி வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை நோக்கி என்னுடைய பயணத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய விரும்பினால், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழியைப் படித்துவிட்டு, கொடுக்கப்பட்டுள்ள க்யூஆர் குறியீடைப் பயன்படுத்தி சுலபமான முறையில் உறுப்பினர் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்” எனக் கூறினார்.

ஒரு மணி நேரத்தில் 20 லட்சம் பேர்

இந்த நிலையில், உறுப்பினர் சேர்க்கையை விஜய் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து உற்சாகமடைந்த அவரது ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலரும் தமிழக வெற்றிக்கழகத்தில் தங்களை உறுப்பினராக சேரத் தொடங்கினார். உறுப்பினர் சேர்க்கை தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே செயலியை முடங்கும் அளவுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானோர் உறுப்பினராக சேர விண்ணப்பித்ததாக, அவரது கட்சியின் அதிகாரபூர்வ X தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதால், விஜயும் அவரது ஆதரவாளர்களும் உற்சாகமடைந்துள்ளனர். விஜயும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தனது ஆட்டத்தை இப்போதே தொடங்கி விட்டதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதனால், அடுத்த சட்டமன்ற தேர்தல் களம் கடும் போட்டி நிறைந்ததாக இருக்கும் எனத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

二、新北市:healthy new taipei 社群. Meet marry murder. 자동차 생활 이야기.