தேர்தல் வேலைகளைத் தொடங்கியது திமுக!
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, திமுக தனது தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டது. சேலத்தில் திமுக நடத்தும் இளைஞரணி மாநாடு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரமாக அமையும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
‘மாநில உரிமை மீட்பு மாநாடு’ என்று பெயர் வைத்து, மாநாடு முழுவதும் ஒன்றிய அரசைக் குறி வைத்து, பல்வேறு தலைப்புகளில் பேச்சாளர்கள் பேச இருக்கின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும் மேற்பார்வையிடவும் அமைச்சர் நேரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதே போல் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா ஆகியோரும், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் இடம் பெற்றுள்ளனர்.
அதே போல் தேர்தல் அறிக்கை தயாரிக்க திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.