Amazing Tamilnadu – Tamil News Updates

முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயணிகள் ரயில்களாக மாற்றம்!

பெருநகரங்களையும், சிறு கிராமங்களையும் இணைக்கும் முக்கிய ரயில் போக்குவரத்தாக பயணிகள் ரயில் விளங்கும் நிலையில், ஏழை, நடுத்தர மக்களைப் பொறுத்தவரை பிழைப்புக்காக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல மிகவும் உதவியாக இருப்பது ரயில்கள் தான். பேருந்துகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த கட்டணமாக இருப்பதாலும், விரைவாகவும் சென்று சேர்ந்துவிட முடியும் என்பதனாலும் ரயில்கள் தான் அவர்களது விருப்ப தேர்வாக உள்ளன.

கொரோனாவில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்கள் சேவை

அந்த வகையில், கொரோனா பரவலுக்கு முன்பு தெற்கு ரயில்வே சார்பில் 3,081 கி.மீ. தொலைவுக்கு 487 பயணிகள் ரயில்கள் ( Passengers Train) இயக்கப்பட்டன. ஆனால், கொரோனா கட்டுப்பாட்டின்போது இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், பின்னர் இவை முன்பதிவில்லா சிறப்பு விரைவு ( எக்ஸ்பிரஸ் ) ரயில்கள் எனும் பெயரில் இயக்கப்பட்டன. இதனால், குறைந்தபட்ச கட்டணம் ரூ.10-லிருந்து ரூ.30 ஆக உயர்ந்ததால், தினசரி பயணிக்கும் ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் அனைத்து மெமு, டெமு, பயணிகள் சிறப்பு ரயில் கள் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் எனவும், கொரோனா கட்டுப் பாட்டுக்கு முன்பு வசூலித்த கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

சிறப்பு ரயில்கள் இனி பயணிகள் ரயில்கள்

இந்த நிலையில், இந்த முன்பதிவில்லா சிறப்பு ரயில்களுக்கான எண்கள் வழக்கமான பயணிகள் ரயில்களுக்கான எண்களாக மாற்றப்பட உள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே தலைமையகத்திலிருந்து அனைத்து கோட்ட பொது மேலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், “கொரோனா பரவலுக்கு பின்பு அனைத்து பயணிகள் ரயிலும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களாக மாற்றி இயக்கப்பட்டன. இந்த ரயில்களின் எண்களும் 7-ல் ஆரம்பிக்கும் வகையில் மாற்றப்பட்டன. இந்த நிலையில், தெற்கு ரயில்வேயில் இயங்கும் அனைத்து முன்பதிவில்லா ரயில்களின் எண்களையும் மாற்றி மீண்டும் பழைய எண்களை அறிவிக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில் இயங்கும் 288 பயணிகள் ரயில்கள் மற்றும் 8 மலைப் பாதை ரயில்களின் எண்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் பழைய எண்களைக் கொண்டு இயக்கப்படும். உதாரணமாக திருப்பதி-சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் 06728 எனும் எண்ணிலும், மதுரை- செங்கோட்டை பயணிகள் ரயில் 06504 எனும் எண்ணுக்குப் பதிலாக 56719 எனும் எண்ணிலும் இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version