மழை வெள்ளத்தினால் தவித்து வந்த திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை குறைந்ததால் வெள்ள நீர் வடியத் தொடங்கி உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ளவும், மக்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாக வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத மழை பெய்தது. சில இடங்களில் 1871ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் இன்னலுக்கு ஆளாகினர்.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதுபோல் காட்டாட்டாற்று வெள்ளமும் தாமிரபரணியில் கலந்ததால் சுமார் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் ஆற்றில் சென்றது. இதில் ஆற்றங்கரையோர குடியிருப்புகள் மற்றும் கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், அங்கு வசித்து வந்தவர்கள் வெளியேற்றப்பட்டு, மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை, டவுன், மேலப்பாளையம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நெல்லை சந்திப்பில் பழைய பேருந்து நிலையத்தையொட்டி உள்ள கடைகள், ரயில் நிலையம் செல்லும் பாதையிலுள்ள கடைகள் மழை வெள்ளத்தில் மூழ்கின. இது தவிர நெல்லை மாவட்டத்தின் இதர பகுதிகளும் இரண்டு நாட்கள் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்டன. குறிப்பாக சில கிராமப்புற பகுதிகள் தீவில் சிக்கிக்கொண்டது போல காட்சியளித்தன. இந்த நிலையில், நேற்று மழை சற்று குறைய தொடங்கியதால் அணைக்கு நீர்வரத்து சரிய தொடங்கியது. இதனால் ஆற்றில் வரும் வெள்ளம் குறையத் தொடங்கியது. இன்று காலை தாமிரபரணியில் தண்ணீரின் அளவு குறைந்தது.இதனால், நெல்லை சந்திப்பு பகுதியிலும் வெள்ளம் வடியத் தொடங்கியது.
அதுபோல தூத்துக்குடி மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. தூத்துக்குடி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, காய்கறி சந்தை உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்தது. தாமிரபரணி ஆற்றின் கால்வாயின் கரையிலிருந்து வெளியேறிய தண்ணீரால் செய்துங்கநல்லூர், முத்தாலங்குறிச்சி, வல்லநாடு, கருங்குளம் உள்ளிட்ட பல பகுதிகளிலும், அதனையொட்டி உள்ள குக்கிராமங்களும் தண்ணீரில் தத்தளித்தன. இதேபோன்று கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மட்டுமல்ல, விருதுநகர் மாவட்டத்திலும் மழை வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவைகுண்டம்- செய்துங்கநல்லூர் இடையே ரயில் தண்டவாளம் அமைக்கப்பட்ட இடம் மழை வெள்ளத்தில் அரித்துச் செல்லப்பட்டது. இது குறித்து முன்கூட்டியே தெரியவந்ததால் 800 பயணிகளுடன் திருச்செந்தூரிலிருந்து சென்னை புறப்பட்ட ரயில் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் 800 பயணிகள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் அவதிப்பட்டனர். இது குறித்து அறிந்த உடன், ரயில்வே துறை மற்றும் தமிழ்நாடு அரசு நிர்வாகம் அவர்களை மீட்க முயற்சிகளை மேற்கொண்டது.
முதற்கட்டமாக சுமார் 300 பேர் அருகில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டுத் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து இந்திய விமானப்படை உதவியுடன் இன்று ஸ்ரீவைகுண்டத்தில் மாட்டிக் கொண்ட 800 பயணிகளுக்கு ஹெலிகாப்டர் உதவியுடன் ரொட்டி, அரசி, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் அவர்களைப் பாதுகாத்துக் கொள்ள, அங்கு ரயில்வே ஊழியர்கள் கூடுதலாக வரவைக்கப்பட்டனர்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு அவசரகால உதவிகளை வழங்கிடவும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக அதிகாரிகள், ஊழியர்கள், களப்பணியாளர்கள், SDRF மற்றும் NDRF குழுவினர் முழு வீச்சில் இறங்கி உள்ளனர். இதுவரை 12,653 பேர் மீட்கப்பட்டு 141 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழகம் முழுவதும் இருந்து நிவாரணப் பொருட்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இணைப்புச் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால், இப்பொருட்களை மக்களுக்கு வழங்க முடியவில்லை. ஹெலிகாப்டர்கள் மூலம்தான் அவர்களை அடைய முடியும். இதனால், கூடுதல் ஹெலிகாப்டர்களை வழங்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, “திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 550 வீரர்கள் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க களமிறங்கியுள்ளனர்.
தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்படுகிறது. தூத்துக்குடியில் 2 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகிக்கப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளில் பயிற்சி பெற்ற 100 பேர் களமிறங்கி உள்ளனர். 168 ராணுவ வீரர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்” என தெரிவித்தார்.
இதனிடையே டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று இரவு பிரதமர் மோடியைச் சந்திக்கிறார். அடுத்தடுத்து இரண்டு பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்துள்ள நிலையில், இவற்றை எதிர்கொள்ள தேவையான அனைத்து உதவிகளையும் ஒன்றிய அரசு வழங்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தி அது தொடர்பான கோரிக்கை மனுவை வழங்குகிறார். அதனைத் தொடர்ந்து, நாளை காலை நேரடியாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு செல்ல இருக்கிறார்.
இதனால், தென்மாவட்ட மக்களுக்கான உதவிகளை முதலமைச்சர் அறிவிக்க ஏதுவாக ஒன்றிய அரசின் உதவிக்கரம் உடனடியாக நீளுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.