Amazing Tamilnadu – Tamil News Updates

தென்மாவட்ட பேருந்துகள் முழுமையாக கிளாம்பாக்கம், மாதவரத்துக்கு மாற்றம்… முழு விவரங்கள்!

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து அரசு பேருந்துகளும் இன்று முதல் கிளாம்பாக்கம், மாதவரத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படும்; கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படாது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் எந்தெந்த ஊர்களுக்கு எந்தெந்த நடைமேடையில் இருந்து பேருந்துகள் புறப்படும் என்பது உள்ளிட்ட முழுமையான விவரங்கள் இங்கே…

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்துகளால் நகருக்குள் ஏற்படும் வாகன போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் விதமாக சென்னை, வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.393 கோடியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி திறக்கப்பட்டது. அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. இருப்பினும், விழுப்புரம் கோட்டத்தைச் சேர்ந்த தென்மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்தன.

மாதவரத்திலிருந்து 160 பேருந்துகள்

இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று முதல் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால், கோயம்பேட்டில் இயக்கப்பட்ட தென் மாவட்ட பேருந்துகள் அனைத்தும் இனிமேல் கிளாம்பாக்கம் மற்றும் மாதவரத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 80 சதவீத பேருந்துகள் கிளாம்பாக்கத்திலும், 20 சதவீத பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும் இயக்கப்பட உள்ளன. அதாவது, திண்டிவனம் வழியாக திருச்சி, சேலம், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கும்பகோணம், சிதம்பரம், நெய்வேலி, கடலூர், புதுச்சேரி செல்லும் பேருந்துகள், செஞ்சி வழியாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், வந்தவாசி வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளில் கிளாம்பாக்கத்தில் இருந்து 710 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 160 பேருந்துகளும் புறப்படும்.

வட சென்னை பகுதி மக்களின் வசதிக்காக, மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விழுப்புரம் கோட்டத்தைச் சேர்ந்த பேருந்துகள் சேவையை< போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார். 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேர கால இடைவெளியில், இங்கிருந்து இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம்: எந்தெந்த ஊர்களுக்கு எந்தெந்த நடைமேடை?

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தப்படும் நடைமேடை எண் குறித்த விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம், நெல்லை, திருச்செந்தூர், செங்கோட்டை பேருந்துகள் நடைமேடை எண் 1 மற்றும் 2-ல் இருந்து புறப்படும். ராமேஸ்வரம் பேருந்துகள் 3, கடலூர் பேருந்துகள் 9, கரூர் பேருந்துகள் 4, 6 ஆம் எண் நடைமேடைகளில் நிறுத்தப்படும். திருச்சி, குமுளி, கும்பகோணம் செல்லும் அரசு பேருந்துகள் நடைமேடை எண் 4ல் நிறுத்தப்படும். கள்ளக்குறிச்சி 8, கும்பகோணம் 4, கோவை, திருப்பூர், கரூர் பேருந்துகள் நடைமேடை எண் 6 ல் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, அரியலூருக்கு இயக்கப்படும் பேருந்துகள் 5, 8 ஆகிய நடைமேடைகளில் நிறுத்தப்படும். சிதம்பரம் 9, சிவகாசி 2, சேலம் 6, தஞ்சாவூர் பேருந்துகள் 4 ஆம் எண் நடைமேடையில் நிறுத்தப்படும். திண்டுக்கல் 4, திருச்சி 4 ஆம் எண் நடைமேடையில் நிறுத்தப்படும். திருவண்ணாமலை 7, திருவாரூர் 5, தேனி 4, புதுச்சேரி பேருந்துகள் 9 ஆம் எண் நடைமேடையில் நிறுத்தப்படும். மதுரை 3, விழுப்புரம் 8, 1, 2, வேளாங்கண்ணி 5 ஆம் எண் நடைமேடையில் பேருந்துகள் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பேருந்து இயக்க மாற்றத்தினால் பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேட்டுக்கு 5 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் விழுப்புரம் போக்குவரத்து கோட்ட பேருந்துகள் தென்மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கி வரும்போது தாம்பரம் வரை இயக்கப்பட்டு பின் அங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தடையும். பின்னர், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி, தென் மாவட்டங்களுக்குப் பேருந்து மூலம் செல்ல நினைப்பவர்கள் மேற்கூறிய மாற்றங்களுக்கு ஏற்ப, தங்களது பயணத்திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம்!

Exit mobile version