மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் உற்பத்தியில் மட்டுமின்றி, மின்வாகன உற்பத்தியிலும், தமிழகம் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்நிலையை தக்க வைத்து, மேம்படுத்திடவும், மாறிவரும் காலச் சூழ்நிலைக்கேற்ப மின்வாகன உற்பத்தித் துறையில் உள்ள சவால்களை திறமையுடன் எதிர்கொள்ளும் வகையிலும், கடந்த ஆண்டின் இதே நாளில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை 2023-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
மின்வாகன உற்பத்தித்துறையில் 50,000 கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் 1.50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, பொது போக்குவரத்து திட்டங்களை மின்மயமாக்குதல் மற்றும் ஸ்மார்ட் மொபிலிட்டி திட்டங்களை ஊக்குவித்தல் போன்ற காரணங்களுக்காக பிரத்யேகமாக மின் வாகன நகரங்கள் உருவாக்குதல் போன்றவை மின்வாகனக் கொள்கையின் முக்கிய நோக்கமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்லாது, மின்னேற்ற நிலையங்களுக்கான ஊக்க சலுகைகள், பொது மின்கல மாற்று நிலையங்களுக்கான ஊக்கச் சலுகைகள், சாலை வரி விலக்கு, பதிவுக் கட்டணம் மற்றும் அனுமதி கட்டணம் தள்ளுபடி ஆகிய பயன்கள் 31.12.2025 வரை நீட்டிப்பு செய்தல் போன்றவை சிறப்பு ஊக்கச் சலுகைகளாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில்தான், கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் இரு நிறுவனங்கள் ரூ.26,000 கோடி முதலீடு செய்ய மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன. அதில் ஒன்றுதான் உலகின் முன்னணி மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் என்ற நிறுவனம். இந்த நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தத்தில், 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் மின்சார கார் மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை அமைப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்த நிறுவனமும், தமிழ்நாடு அரசும் தீவிரப்படுத்தி வந்தன. இதற்காக, தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் பகுதியில், 408 ஏக்கர் நிலம் அரசு தரப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, வருகிற 25 ஆம் தேதி அன்று வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
இது குறித்து மாநில தொழில்துறை அமைச்சரான டி.ஆர்.பி ராஜா தனது X வலைதள பக்கத்தில், “ஜனவரியில் MoU பிப்ரவரி மாதத்தில் அடிக்கல். இதுவே திராவிடமாடல் அரசின் வேகம். தென் தமிழ்நாட்டில் மகத்தான தொழில் வளர்ச்சி உறுதி. ஒப்பந்தம் கையெழுத்தான ஒரே மாதத்தில், தூத்துக்குடியில் அடிக்கல் நாட்ட தயாரான மின் வாகன உற்பத்தி ஆலை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் அமைய இருக்கும் இந்த தொழிற்சாலை மூலம், சுமார் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடவே, இந்த ஆலை தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சலாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.