தூத்துக்குடியில் விண்வெளி சார் தொழிற்சாலைகள்!
திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களையும் சென்னை, கோவை போன்று தொழில் வளர்ச்சி பெற்ற மாவட்டங்களாக மாற்ற தமிழ்நாடு அரசு தீவிரநடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்திய தொழில் முதலீட்டாளர் மாநாட்டிற்குப் பிறகு அந்த நடவடிக்கைகள் மேலும் தீவிரமடைந்துள்ளன.
தமிழ்நாட்டின் தென்பகுதி பொதுவாக தொழில்துறையில் வளர்ச்சி இல்லாத பகுதியாகவே தொடர்ந்து நீடிக்கிறது. தமிழ்நாட்டில் தொழில்துறை வடக்கே வளர்ந்த அளவிற்கு தெற்கே வளரவில்லை. வட தமிழ்நாடு குறிப்பாக சென்னையின் நவீனம் தென் பகுதியைத் தொடவே இல்லை. கோவில்பட்டி கடலை மிட்டாய் போன்ற சில பாரம்பரியத் தொழில்கள் தென்பகுதியில் இருந்தாலும், நவீன தொழில்கள் பெரிய அளவில் அங்கு வளரவில்லை.
சமீபத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாடு அதற்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது. எலக்ட்ரிக்வாகனங்களுக்கு பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்வதில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் துறை வரைக்கும் பல்வேறு தொழில்களை தென்பகுதியில் குறிப்பாக திருநெல்வேலி தூத்துக்குடியில் தொடங்க முதலீட்டாளர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். தூத்துக்குடி துறைமுகம் அதற்கு ஒரு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.
தொழில் வளர்ச்சி ஒரு பகுதியில் மட்டும் இருக்கக் கூடாது. மாநிலம் முழுவதும் சமமான அளவில் இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்றும் அதன்படி தென் தமிழ்நாட்டின் மீது நாங்கள் சிறப்பு கவனம் செலுத்துகிறோம் என்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறுகிறார்.
தோல்சாரா காலணி உற்பத்தி போன்ற வேலை வாய்ப்பு தரக் கூடிய தொழில்களை ஊரகப் பகுதிகளிலும் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையங்களை சென்னை, கோவை போன்ற நகரங்களிலும் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் போன்ற தென்மாவட்டங்களை நோக்கி அதிக முதலீடுகள் வருவது இதுவே முதல் முறை.
தூத்துக்குடியில் தொடங்கப்படும் தொழிற்சாலைகளின்வசதிக்கென 60 மில்லியன் லிட்டர் அளவில் தண்ணீர் சத்திகரிப்பு செய்யும் திறன் படைத்த தொழிற்சாலையை சிப்காட் உருவாக்கி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் உள்ளது. சிறிய அளவிலான செயற்கைக் கோள்களைத் தாங்கிச் செல்லும் ராக்கெட்டுகள் இங்கிருந்து ஏவப்படுகின்றன. இதற்கு அருகே விண்வெளி தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அமைக்க டிட்கோ திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு எடுத்துவரும் இத்தகைய நடவடிக்கைகள் தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு உதவும் என்பதோடு, அதிக அளவில் வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.