Amazing Tamilnadu – Tamil News Updates

தீபாவளிக்கு ஊருக்குப் போக பிளானா..? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!

தீபாவளிக்கு சென்னையிலிருந்து பேருந்து மூலம் சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்கான தகவல் இது. நவம்பர் 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 16,895 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தீபாவளியையொட்டி, மற்ற நாட்களைப் போன்று கோயம்பேட்டிலிருந்தே எல்லா ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படாது. எந்தெந்த ஊர்களுக்கு எந்தெந்த இடங்களிலிருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்பதற்கான முழு விவரங்களையும் தெரிந்து கொண்டால், தெளிவாக திட்டமிட்டு, வீண் அலைச்சலோ குழப்பமோ இன்றி நிம்மதியாக புறப்பட்டுச் செல்லலாம்.

நவம்பர் 9 முதல் 11 வரை சென்னையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் விபரம்:

மாதவரம் புதிய பேருந்து நிலையம்:

செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள்.

கே.கே. நகர் மா.போ.கழக பேருந்து நிலையம்:

ECR வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (MEPZ):

திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்

தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தம்:

திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

பூவிருந்தவல்லி பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தம் (பூவிருந்தவல்லி மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை அருகில்):

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள்.

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் கோயம்பேடு:

மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத்தவிர, இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (மயிலாடுதுறை, அரியலூர், ஜெயங்கொண்டம்,நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு)

2023 – தீபாவளி முன்பு – நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகள் எண்ணிக்கை:

வழித்தட மாற்றம்:

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அனைத்து இருக்கைகளும் பூர்த்தியான பேருந்துகள் மட்டும் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, அவுட்டர் ரிங்ரோடு (Outer Ring Road) வழியாக வண்டலூர் சென்றடைந்து கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்புதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கார் மற்றும் இதர வாகனங்கள்: கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து (OMR) திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளி வட்ட சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்பதிவு மையங்கள் செயல்படும் இடங்கள்

நவ.9 – 11 (காலை 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை): கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், MEPZ (தாம்பரம் சானிடோரியம்) பேருந்து நிலையத்தில் 1 முன்பதிவு மையம் என மொத்தம் 11 முன்பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

முன்பதிவு வசதி: முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version