“திறன்வாய்ந்த மனிதவளம்… தொழில்துறையில் பீடு நடை… தனிப்பாதையில் முன்னேறும் தமிழ்நாடு…” – பாராட்டும் ‘நியூயார்க் டைம்ஸ்’!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், தொழில்துறை மற்றும் முதலீட்டு மாநாடுகளின் போதும், அதிகாரிகளுடான ஆலோசனை கூட்டத்தின் போதும் அவர் அடிக்கடி சொல்லி வரும் ஒரு விஷயம், “தமிழ்நாட்டை, நம்மை விட அதிகமாக வளர்ந்த உலக நாடுகளோடு ஒப்பிட்டு நமது செயல்பாடுகளை அமைக்க வேண்டுமே தவிர, இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு நாம் சிறப்பாக செய்துகொண்டு இருக்கிறோம் என எண்ணக்கூடாது” என்பதுதான்.
அதனால்தான், 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்த வேண்டும் என்ற இலக்கை அறிவித்து, அதற்கேற்ற வகையில் தொழில்துறையில் பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு வருகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அதன் ஒரு பகுதிதான், சென்னையில் கடந்த மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் குவிந்த முதலீடுகளும், அதனைத் தொடர்ந்து மேலும் முதலீடுகளைத் திரட்டுவதற்காக முதலமைச்சர் மேற்கொண்டுள்ள ஸ்பெயின் பயணமும். இதன் பயனாக, வரிசையாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, தூத்துக்குடி உட்பட மாநிலத்தின் பல இடங்களில் வெவ்வேறு தொழிற்சாலைகள் தொடங்க அந்த நாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
பாராட்டும் நியூயார் டைம்ஸ் பத்திரிகை
இந்த நிலையில், தமிழகம் இவ்வாறு வளர்ந்த நாடுகளுடன் போட்டிப் போடும் வகையில் வளர்ந்து வருவதை பாராட்டி, அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘ தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு, உலக ஐபோன்களில் 13 சதவிகிதம் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டதாகவும், அதில் முக்கால்வாசி தமிழ்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு பாராட்டியுள்ள அந்த பத்திரிகை, அதே சமயம், இந்தியாவின் சக்தி வாய்ந்த பிரதமராக வர்ணிக்கப்பட்ட பிரதமரால் ஊக்குவிக்கப்பட்ட “மேக் இன் இந்தியா” திட்டம் அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகளாகி விட்டாலும், பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் ‘உற்பத்தி செயல்பாடுகள்’ முடங்கி உள்ளதாகவும், மோடி பதவியேற்ற போது இருந்ததை விட 16 சதவீதம் குறைவாகவும், ஆசிய ஜாம்பவான்களான சீனா, ஜப்பான், தைவான் மற்றும் தென் கொரியாவை விடவும் இந்தியாவின் ‘உற்பத்தி செயல்பாடுகள்’ குறைவாக உள்ளதாகவும் கூறி உள்ளது.
“இந்தியாவிற்கு தற்போது தேவை ‘திறன்மிக்க’ தொழிலாளர்களின் ‘திறன்மிக்க’ வேலைகள் தான் (skilled jobs).தொழிற்சாலை சார்ந்த வேலை, அவர்களை வேறு ஒன்றும் இல்லாதவர்களாக ஆக்கிவிட்டது. கடந்த ஆண்டு, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனாவை இந்தியா முந்தியது. மேலும், அதன் உழைக்கும் வயதினர் கொண்ட மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த பிரிவு மக்கள் தொகை அதிகரிப்பை உண்மையான பலனளிக்கக்கூடிய வகையில் மாற்ற வேண்டும் என்றால், அது இந்திய தொழிலாளர்களை, அதிக உற்பத்தித்திறன் கொண்ட தொழிலாளர்களாக மாற்றுவதுதான். இவர்களில் பாதி பேர் இன்னும் சிறு விவசாயத்தையே நம்பியுள்ளனர்.
‘சிறப்பான உட்கட்டமைப்புகள்‘
இந்த விஷயத்தில் தமிழ்நாடு தனக்கென தனி பாதையில் செல்வதை சுட்டிக்காட்டலாம். 7.2 கோடி மக்கள் வாழும் மாநிலம், இந்தியாவின் இதர மாநிலங்கள் செல்லும் பாதைகளிலிருந்து விலகி, தனக்கென தனிப் பாதை வகுத்துச் சென்று இப்போது வெற்றிபெற்று வருகிறது. இந்தியாவின் ஒன்றிய அரசு, 2021 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்திக்கு மானியம் வழங்கத் தொடங்கி, டெல்லியை அடுத்த நொய்டா போன்ற இடங்களில் அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தியது.
ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை அந்த ஊக்கத்தொகை அத்தியாவசியமான தேவையாக இல்லை எனக் கூறும் தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, பள்ளிகள், போக்குவரத்து வசதி, பொறியியல் பட்டதாரிகள் என ஏற்கெனவே தகுந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய நன்மைகளை மாநிலம் கொண்டிருந்ததாக குறிப்பிடுகிறார்.
‘தனிப்பாதை வகுத்து முன்னேறும் தமிழகம்’
‘நாங்கள் எங்கள் வளர்ச்சியை மற்ற இந்திய மாநிலங்களுடன் ஒருபோதும் ஒப்பிடுவதில்லை; மாறாக வளர்ந்த ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டு, அதை எப்படி முறியடிக்க முடியும் என்பதற்கான திட்டங்களை எங்களுக்கு நாங்களே வகுத்துக்கொண்டு செயல்படுகிறோம்’ எனக் கூறும் ராஜா மற்றும் அவரைப் போன்ற தமிழ்நாட்டின் பிற ஊக்குவிப்பாளர்கள், தங்கள் மாநிலம் கட்டமைத்துள்ள மனிதவள மூலதனம் குறித்து, குறிப்பாக அதன் பெண்கள் குறித்து பெருமிதம் கொள்கிறார்கள்.
இவர்களில் ஏராளமானோர் முறைசார்ந்த வேலைகளில் பணி செய்கிறார்கள். அதே சமயம் மற்ற மாநிலங்களில் மிகக் குறைவான பெண்களே இத்தகைய பணிக்குச் செல்கிறார்கள். இந்திய அளவில் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களில் 43 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்” என்றும் ‘ நியூயார்க் டைம்ஸ்’ தனது கட்டுரையில் மேலும் பாராட்டி உள்ளது.
‘ வளர்ச்சிக்கு வித்திட்ட கருணாநிதி’
“தமிழகத்தின் தற்போதைய தொழில் வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கு திராவிட இயக்கத்தின் பங்கு முக்கியமானது; குறிப்பாக மறைந்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் பங்கு மிகமிக அதிகம்” எனக் குறிப்பிடும் பொருளாதார நிபுணர்கள், தமிழகத்தின் ‘வளர்ச்சி மாதிரி’ நேருவின் ‘முதலில் பொருளாதார வளர்ச்சி பின்னர் சமூக நலன்’ என்ற கொள்கைக்கு நேர் மாறான ஒரு கொள்கையைக் கொண்டது. இந்தியாவின் பொருளாதார அணுகு முறைக்கு நேர்மாறாக, பொருளாதார வளர்ச்சியினைக் காட்டிலும், சமூக வளர்ச்சியினையே நோக்கமாக கொண்டு கருணாநிதி செயல்பட்டார்.
கல்வி, சுகாதாரம், சமூகநலம் வேண்டி பல்வேறு சிறந்த சமூக நலத்திட்டங்களை வழங்கினார். காமராசர் பள்ளிகளைக் கட்டினார் என்றால் கருணாநிதி கல்லூரிகளைத் திறந்தார். மாணவர்களுக்கான விடுதிகளை திறந்தார். கல்விக்கான இடஒதுக்கீடு உட்பட பல்வேறு சலுகைகளை வழங்கினார். இதன் கூடவே பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் போன்றோர்களுக்கும் வேலை வாய்ப்பும் இடஒதுக்கீடும் வழங்கினார். இது போன்ற திட்டங்கள் அனைத்தும் சமூக வளர்ச்சிக்கு மிகவும் பறந்துபட்ட அதே சமயம் ஆழமான ஒரு அடித்தளமாகியது. இதை, அவருக்கு பின்வரும் அரசுகளும் பின்பற்ற வேண்டி ஒரு கட்டாயத்தை உருவாக்குமளவுக்கு இந்த திட்டங்கள் வலுவாக கட்டமைக்கப்பட்டு மக்களை சென்றடைந்தன. அதன் பயனாகத்தான் தமிழகம் இத்தகைய வளர்ச்சியை எட்டியுள்ளது” என்கிறார்கள்.
மேற்கூறிய நியூயார்க் டைம்ஸ் கட்டுரையும், பொருளாதார நிபுணர்களின் கருத்தும் ‘திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழகம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும்’ என்ற கூற்றை மேலும் வலுப்படுத்துகிறது என்றே சொல்லலாம்!