சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில எழுச்சி மாநாட்டில் தலைமையுரை ஆற்றிய கட்சியின் இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சேலத்தில் கூடிய திமுக இளைஞர் படை, டெல்லியில் அமர்ந்திருக்கக்கூடிய பாசிஸ்ட்டுகளை விரட்டி அடிக்க போவது உறுதி என சூளுரைத்தார்.
இது தொடர்பாக மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசுகையில், “இன்றைக்கு காலையிலிருந்து ஒட்டுமொத்த இந்தியாவுமே சேலத்தை நோக்கித்தான் பார்த்துக் கொண்டு இருக்கிறது. நம்முடைய மாநாட்டை நோக்கித்தான் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு ஒரு மிகச் சிறந்த மிகப்பெரிய வெற்றி மாநாடாக நாம் நடத்தி காட்டி இருக்கிறோம்.
பத்தாண்டு கால பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கான படை, இங்கிருந்து புறப்படத் தயாராக இருக்கின்றது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இந்த இந்தியா கூட்டணிதான் மாபெரும் வெற்றி பெற இருக்கின்றது. பாசிஸ்ட்டுகளுடைய காலம் முடிவுக்கு வர இருக்கின்றது. அந்த குறிக்கோளோடு நாம் அனைவரும் நம்முடைய முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தேர்தல் பணியாற்ற துவங்கி விடுவோம். இந்த மாபெரும் மாநாட்டின் மூலமாக ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல இருக்கின்றேன்.
இளைஞர் அணி தம்பிகளுக்கு என்று இந்த முறை ஒரு லட்சியம் இருக்கிறது. அது என்ன லட்சியம் என்றால் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்றைக்கு அண்ணா அறிவாலயமே மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு நின்றது. தலைவர் கலைஞர் அவர்களின் மறைவுக்குப் பிறகு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அன்றைக்குத்தான் கழகத் தலைவராக பொறுப்பேற்றார்கள்.
அப்போது அவர் கூறிய வார்த்தை, “எனக்கு ஒரு கனவு இருக்கின்றது. சாதி பேதமற்ற சமூகம் அமைந்திட வேண்டும். ஆணுக்கு பெண் சமம். திருநங்கையர் மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஒளி வீச வேண்டும். பகுத்தறிவு வழியில் உலகை காண வேண்டும். மிக, மிக முக்கியமாக நாடெங்கும் காவிச் சாயம் பூச நினைக்கின்ற பாசிஸ்ட்டுகளை வீழ்த்த வேண்டும். இந்தக் கனவை நான் காண்கின்றேன். நான் மட்டும் அல்ல இயக்கத்தின் கோடான கோடி தொண்டர்களும் சேர்ந்து காண்கின்றோம் என்று நம்முடைய தலைவர் அவர்கள் அன்றைக்குச் சொன்னார்கள்.
நான் சொல்கிறேன், தலைவர் கண்ட அந்தக் கனவை நினைவாக்கி தரவேண்டியதுதான் எங்களுடைய அடுத்த வேலை. இந்த லட்சியம் ஏதோ ஒரு தனிப்பட்ட உதயநிதியின் லட்சியம் இல்லை. இங்கு வந்திருக்கக்கூடிய லட்சக்கணக்கான இளைஞர் அணி தம்பிமார்களின் லட்சியம். சாதி பேதம் அற்ற சமூகம், ஆண் பெண் சமம், பாசிஸ்ட்களை வீழ்த்த வேண்டும் உள்ளிட்ட கலைஞரின் கனவுகளை நினவாக்குவதே நமது லட்சியம். பாசிச சாயத்தை வீழ்த்தி சமூக நீதி வண்ணத்தை பூசுவதே கழக இளைஞர்களின் லட்சியத்தின் முதல் படி. நான் பேருக்குத்தான் இளைஞர் அணி செயலாளர். எப்போதுமே கழக தலைவர்தான் நிரந்தர இளைஞர் அணி செயலாளர். ஆகவே கழக தலைவர் இளைஞர்களுக்கு ஏராளமான பொறுப்புகளை வழங்க வேண்டும்.
கண்டிப்பாக எங்களுடைய இளைஞர் அணி தம்பிமார்கள் உழைத்து அந்த வெற்றியை உங்களுடைய காலடியில் சமர்ப்பிப்போம். இது வெறும் இளைஞர் அணி கிடையாது இது கலைஞர் அணி என்று கூறிக்கொண்டு கழக இளைஞர் அணியின் இந்த மாநாடு வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருக்கும். சேலத்தில் கூடியுள்ள நம்முடைய இளைஞர் படை, டெல்லியில் அமர்ந்திருக்கக்கூடிய பாசிஸ்ட்டுகளை விரட்டி அடிக்க போவது உறுதி என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என ஆவேசமாக பேசி முடித்தார்.