Amazing Tamilnadu – Tamil News Updates

திமுக இளைஞரணி மாநாடு: கவனத்தை ஈர்க்கப் போகும் ட்ரோன் ஷோ!

ரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே, சேலத்தில் வருகிற 21 ஆம் தேதியன்று நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டில், 1500 டிரோன்களுடன் நடைபெற இருக்கும் பிரம்மாண்ட ட்ரோன் ஷோ திமுக-வினர் மத்தியில் மட்டுமல்லாது, தமிழக அரசியல் வட்டாரத்திலும் கவனத்தை ஈர்க்கும் விதமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு நாளை மறுநாள் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது. , ‘மாநில உரிமை மீட்பு’ முழக்கத்தோடு நடைபெற உள்ள திமுக இளைஞர் அணி மாநில மாநாட்டுச் சுடர் ஓட்டத்தை சென்னை, அண்ணா சாலை சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலையில் இருந்து அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டுச் சுடர் தொடர் ஓட்டம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வழியாக 316 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மாநாடு நடைபெறும் சேலம் மாவட்டத்தை ஜனவரி 20 ஆம் தேதி பிற்பகல் 1.30 மணி அளவில் சென்றடைகின்றது. மாநாட்டுச் சுடரை, அன்று மாலையில் திமுக தலைவர் மு. க ஸ்டாலினிடம் உதயநிதி ஒப்படைக்கிறார்.

இந்த நிலையில், மாநாடு தொடங்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், மாநாட்டுப் பந்தலில் இருக்கைகள், உணவு, குடிநீர் வசதி, கழிப்பிடங்கள், பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளை இறுதி செய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாநாட்டுப் பந்தலில் ஒரு லட்சத்து 25,000 பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட உள்ளதாகவும், மாநாட்டின் பந்தலின் உள்ளே இரண்டரை லட்சம் பேரும், சுற்றியுள்ள இடங்களில் 2.5 லட்சம் பேரும் என ஐந்து லட்சம் பேர் பங்கேற்பதற்கு தேவையான ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு சேலத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதுமிருந்து 10,000 பேருந்துகள், 50,000 வேன்கள், அது தவிர கார்கள், லாரிகள் என சுமார் 8 லட்சம் பேர் இந்த மாநாட்டுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக, திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் நாளை மாலை 5 மணிக்கு விமானம் மூலம் சேலம் வருகிறார். அங்கிருந்து மாநாட்டு பந்தலுக்கு வருகை தரும் முதல்வர், சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்ட சுடரை ஏற்றி வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, நீட் தேர்வு ஒழிப்புக்காக நடைபெற்று வரும் இரு சக்கர வாகன பேரணியையும் முதலமைச்சர் பார்வையிட உள்ளார். மேலும் அவரிடம் நீட் தேர்வு விலக்கு கோரி பெறப்பட்ட கையெழுத்துப் பட்டியலும் ஒப்படைக்கப்பட உள்ளது.

பிரம்மாண்ட ட்ரோன் ஷோ

இதனை அடுத்து 1500 டிரோன்கள் பங்கேற்புடன் பிரம்மாண்ட ட்ரோன் ஷோ முதலமைச்சர் முன்னிலையில் நடக்க உள்ளது. இந்த ட்ரோன் ஷோவில் வானத்தில் கட்சியின் சின்னம், கொடி, பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் உருவப் படங்களும் காட்சியளிக்கும் எனத் தெரிகிறது. அது மட்டுமல்லாது, கட்சியின் கொள்கைகள், முக்கிய முழக்கங்கள், கருத்துகள் அடங்கிய வாசகங்கள், திமுக-வின் முக்கிய சாதனைகள் போன்றவற்றை உணர்த்தும் ட்ரோன் காட்சிகளும் வெளிப்படும் வகையில் புரோகிராம் அமைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது.

தமிழகத்தைப் பொறுத்த வரையில் கட்சி மாநாட்டில் இதுபோன்ற ட்ரோன் ஷோ இடம்பெறுவது அநேகமாக இதுவே முதன்முறையாக இருக்கும் என்பதால், இது திமுக-வினரிடத்தில் மட்டுமல்லாது, தமிழக அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்களிடையேயும் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அது பேசுபொருளாகுமானால், வருங்காலங்களில் மற்ற கட்சியின் மாநாடுகளிலும் இதுபோன்ற ட்ரோன் ஷோக்களை எதிர்பார்க்கலாம்.

அதே சமயம் அதற்கு வழிகாட்டிய பெருமை திமுக-வை, குறிப்பாக திமுக இளைஞர் அணி மாநாட்டைத் தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பை ஏற்ற உதயநிதி ஸ்டாலினையே சாரும் எனலாம்!

Exit mobile version